சிங்கப்பூர் அரசாங்க ஆணைபெற்ற கழக ஊழியர்கள் கூட்டுறவுச் சங்கம் (எஸ்எஸ்பிஇசி), சனிக்கிழமை (அக்டோபர் 4) ஃபேர்மோண்ட் ஹோட்டலில் தன் 100வது ஆண்டு நிறைவு விழாவை நடத்தியது.
1925 அக்டோபர் 8ஆம் தேதி நிறுவப்பட்ட இச்சங்கம், அளவுக்கதிகமாக வட்டி வசூலிக்கும் கடன்காரர்களிடமிருந்து தொழிலாளர்களைக் காத்து வந்துள்ளது. உறுப்பினர்களை நிதிப் பிரச்சினைகளிலிருந்து விடுவித்து, பணத்தைச் சேமிக்க இது ஊக்குவித்து வருகிறது.
சங்கம் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ள நிலையில் காணொளி மூலம் வாழ்த்துக் கூறினார் பிரதமர் லாரன்ஸ் வோங்.
“எஸ்எஸ்பிஇசி, சிங்கப்பூரின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளது. நீங்கள் சிங்கப்பூரின் ஆகப் பழமைவாய்ந்த கூட்டுறவுச் சங்கங்களில் ஒன்று. அன்றிலிருந்து இன்றுவரை, மாறும் தேவைகளுக்கேற்ப நீங்கள் உங்களையே மாற்றிக்கொண்டுவந்துள்ளீர்கள்,” என்றார் பிரதமர் வோங்.
“ஆரம்பகாலத்தில் நிதிக்கு நியாயமான அணுகலை வழங்கி, சாமர்த்தியமான நிதி நிர்வாகத்தை வலியுறுத்தியது முதல், இன்று கல்வி உதவித் தொகை உட்பட மற்ற சேவைகளையும் சங்கம் வழங்குகிறது. தனது உறுப்பினர்களையும் தாண்டி குறைந்த வருமானக் குடும்பங்களையும் உதவி தேவைப்படுவோரையும் அது சென்றடைகிறது,” எனப் பாராட்டினார் பிரதமர் வோங்.
“உறுப்பினர்களின் எண்ணிக்கை, 2014ல் 1,274லிருந்து 2025ல் 11,000க்கும் அதிகமாக, பத்து மடங்கு உயர்ந்துள்ளது. சங்கத்தின்மீது உறுப்பினர்கள் வைத்துள்ள நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறது,” என்றார் சிறப்பு விருந்தினரான நாடாளுமன்ற நாயகர் சியா கியென் பெங்.
சங்கத்தால் விளைந்த வெற்றிக் கதைகள்
“2019ல் சில்வர் ஹரைசன் பயணக் கூட்டுறவுச் சங்கத்திலிருந்து 30 முதியோரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு எஸ்எஸ்பிஇசி ஆதரவளித்தது. பலருக்கும் வெளிநாடுச் செல்வது அதுவே முதன்முறை. எஸ்எஸ்பிஇசியின் அன்பு தனிநபர் உறுப்பினர்களையும் தாண்டியது. அது வருடாந்திர உதவித்தொகைகள் வழங்கி உறுப்பினர்களின் குடும்பங்களைத் தூக்கிவிடுகின்றது,” என்றார் திரு சியா.
“மனைவியின் பிரசவத்துக்காக ஓர் உறுப்பினருக்குப் பணம் தேவைப்பட்டபோது உடனடியாக நாங்கள் கொடுத்தோம். அவரின் மகள் ஐந்து வயதானபோது அவர் எங்களிடம் அறிமுகப்படுத்தி நன்றிகூறியது நெகிழவைத்தது,” என்றார் எஸ்எஸ்பிஇசி தலைவர் எஸ்.குலாம், 63.
தொடர்புடைய செய்திகள்
“ஒரு தம்பதிக்கு ‘ஐவிஎஃப்’ சிகிச்சைக்கான கடன் தேவைப்பட்டபோது நாங்கள் தந்தோம். இப்போது அவர்கள் பெற்றோராகவுள்ளனர்,” என்றார் திரு குலாம்.
சில சமயம் உறுப்பினர்களுக்காகக் கடன்முதலைகளிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்திச் சங்கம் அவர்களின் கடனைத் தீர்த்துள்ளதாகவும் அவர் கூறினார். “உதவி தேவைப்படுவோருக்கு உடனடியாக உதவுகிறோம். ஆனால் அவர்கள் கடன் வாங்குதல் போன்ற தவறான பழக்கங்களைக் கைவிட வேண்டும் என நிபந்தனை விதிப்போம்,” என்றார் அவர்.
“எஸ்எஸ்பிஇசி உடன் சேமிப்பது எளிதாக உள்ளது. மாதாமாதம் சேமிப்புக் கணக்கில் குறைந்தது $10 செலுத்தினாலே சேமிக்கலாம். என் கணவருக்காகவும் நான் கணக்கு தொடங்கி சேமிக்கிறேன். பிள்ளைகளின் எதிர்காலக் கல்விக்குச் சேமிக்க விரும்பும் பெற்றோருக்கும் இது உதவும். சங்கத்தில் நல்ல ஊழியர்கள் உள்ளனர். 100 ஆண்டுகள் நிறைவுக்குச் சங்கத்தை வாழ்த்துகிறேன்,” என்றார் சங்க உறுப்பினரும் மருத்துவமனை மூத்த ஊழியருமான நீலவேணி கே.பொன்னுசாமி, 74.
“என் தந்தையும் சங்கத்தில் இருந்தார். அது அந்தக் காலகட்டத்தில் எங்களுக்கு உதவியாக இருந்தது. வங்கியைவிட சிறந்த ஈவுத்தொகை கிடைத்தது. சங்கத்திடமிருந்து, வீட்டுப் புதுப்பிப்புச் செலவுக்குக் குறைவான வட்டியில் கடன் கிடைத்தது,” என்றார் 1998 முதல் உறுப்பினராக இருந்துள்ள ‘எஸ்பி பவர்’ ஊழியர் திருச்செல்வம், 54.
ஒவ்வொரு பண்டிகைக்காலமும் லிம்பாங், ஜாலான் குக்கோ போன்ற இடங்களில் உதவி தேவைப்படுவோருக்கு அன்பளிப்புப் பைகளை வழங்கி வருகிறது எஸ்எஸ்பிஇசி.
சங்கம் இத்தனை ஆண்டுகள் கடந்து வந்துள்ளது என்றால் அதற்கு முக்கியக் காரணம் சங்கத்தினரின் மீள்தன்மை.
சங்கத்தைச் சோதித்த மோசடி
2013ல் சங்கத்தின் இரு ஊழியர்கள் போலிக் கணக்குகளைக் காட்டி செய்த பணமோசடியில் சங்கம் $5.3 மில்லியனை இழந்தது. போலி உறுப்பினர் ராஜினாமாக் கடிதங்கள், போலிக் கடன் விண்ணப்பங்கள், சம்பளக் கடிதங்கள், அடையாள எட்டைகள் போன்றவைமூலம் பொய்யான உறுப்பினர் கணக்குகளினுள் பணத்தை மாற்றினர்.
2013, அக்டோபர் 1ஆம் தேதி மேலாளராகப் பணிக்கு வந்த சங்கத்தின் இன்றைய தலைமை நிர்வாகி சண்முகதாசன், சேர்ந்த இரு நாள்களுக்குள்ளே மோசடியைக் கண்டுபிடித்தார். சம்பந்தப்பட்ட இரு ஊழியர்கள் கைதாகிய பின்பும் இழந்த பணத்தை மீட்கமுடியவில்லை.
“அப்போது அதிகாரிகள் எங்களுக்கு இரண்டு தெரிவுகளை வழங்கினர். ஒன்று, சங்கத்தை மூடுவது; உறுப்பினர்கள் தம் வைப்புத்தொகையைத் திரும்பப் பெறுவர். இரண்டாவது, பணத்துக்கு எந்த உத்தரவாதமுமின்றி, ஈவுத்தொகையைப் பெறாமல் செயல்படுவது,” என்றார் சங்கத் தலைவர் குலாம்.
கிட்டத்தட்ட 150 பேர் கலந்துகொண்ட உறுப்பினர் சந்திப்பில் ஒருவரைத் தவிர அனைவரும் ஆதரவளித்ததால் சங்கம் தொடர்ந்து செயல்படத் தொடங்கியது.
“நாங்கள் பல சவால்களைச் சந்தித்தோம். சிலச் செயற்குழு உறுப்பினர்களுக்குத் தொடர விருப்பமில்லை. அன்றாட நடவடிக்கைகளை நடத்த நமக்குப் போதிய நிதிகள் இல்லை. நிதிக்காக அங்குமிங்கும் அலைந்தோம். தொழில்துறை நிபுணர்களைக் கொண்டுவந்தோம். மொத்த வாரியத்தையும் மாற்றினோம்,” என்றார் திரு குலாம்.
பணத்தை மீட்டெடுக்க, சங்கம் $4.6 மில்லியன் சொத்தை விற்க வேண்டியிருந்தது. நாளடைவில் அதன் வளங்கள் பெருகின. 2022ல் $5.5 மில்லியன் மதிப்பிலான சொத்தைச் சங்கம் வாங்கியது. இன்று அச்சொத்தின் மதிப்பு $7.5 மில்லியன்.
“கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக நாங்கள் உறுப்பினர்களுக்கு 3 விழுக்காடு ஈவுத்தொகை வழங்கி வந்துள்ளோம்,” என்றார் திரு சண்முகதாசன்.
“மீண்டும் அத்தகைய மோசடி நடைபெறாமலிருக்க நாங்கள் அதிகமாகக் கண்காணிக்கிறோம். இப்போது எங்களுக்குக் கிட்டத்தட்ட 18 ஊழியர்கள் இருக்கின்றனர். எங்களுக்கென ஒரு தனித் தொழில்நுட்ப அணி உள்ளது. 2016ல் கைப்பேசிச் செயலியை அறிமுகப்படுத்திய முதல் நிதிசார்ந்த கூட்டுறவும் நாங்கள்தான். கடன் கொடுப்பதற்குமுன் ஒவ்வொரு கட்டத்திலும் சரிபார்க்கிறோம்,” என்றார் திரு குலாம்.
ஆறு மாதச் சம்பளம் அல்லது $50,000 - எது குறைவோ அவ்வளவுதான் கடன் எடுக்க முடியும். ஐந்து ஆண்டுகளுக்குள் திரும்பக் கட்டிவிட வேண்டும்.
இன்று எஸ்எஸ்பிஇசி கிட்டத்தட்ட $60 மில்லியன் மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்கிறது
எதிர்காலத்தில் சங்கத்தின் சொத்துகளை அதிகப்படுத்தவும் இளம் உறுப்பினர்களை ஈர்க்கவும் தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகப்படுத்தவும் சங்கம் விரும்புவதாகக் கூறினார் திரு குலாம். கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், அமைச்சுகளுக்குச் சென்று தொடர்ந்து புதிய உறுப்பினர்களைச் சங்கம் ஈர்ப்பதாகவும் அவர் கூறினார்.