வாசகர் இயக்கமான ‘மற்றும் குழுவினர்’ அமைப்பு, கலைப்படைப்புகளை ரசனையுடன் கூடிய பகுப்பாய்வுக்கு உட்படுத்தி மாதந்தோறும் கலந்துரையாடல்களை நடத்திவருகிறது.
ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4 மணியளவில் சந்திப்புகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி, அந்த அமைப்பின் 11வது மாதாந்தரக் கூட்டம் விக்டோரியா சாலையில் உள்ள சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடைபெற்றது.
அந்நிகழ்வில், எழுத்தாளர் ந. சிவனேசனின் ‘படையல் கறி’ என்ற சிறுகதையின் கதைவடிவம், கட்டமைப்பு, மொழி, கதைமாந்தர் படைப்பு முதலிய அம்சங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
அதைத்தொடர்ந்து, சிங்கப்பூரைச் சேர்ந்த இளம் படைப்பாளர்கள் தயாரித்த ‘அதிசயம்’ எனும் ஆவணப்படம் திரையிடப்பட்டது. புலம்பெயர்ந்த ஊழியர்கள் பற்றிய அப்படத்தின் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துரையாடலில் பங்கெடுத்துச் சிறப்பித்தனர்.
அந்தக் குறும்படத்தின் திரைக்கதை வடிவமைப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியான நுணுக்கங்களும் விவாதிக்கப்பட்டன.
கவிதை அங்கத்தில் கவிஞர் லஷ்மி மணிவண்ணனின் ‘அடையாளம்’ எனும் கவிதை, கவிஞர் பெருந்தேவியின் ‘காலம்’ என்ற கவிதை, கவிஞர் சச்சிதானந்தனின் ‘மொழிபெயர்ப்பாளன்’ எனும் கவிதை ஆகியவற்றைப் பற்றிய கலந்துரையாடல்களுடன் நிகழ்வு நிறைவடைந்தது.
வாசகர்கள் வாசிப்போடு நின்றுவிடாமல், அத்தகைய குழு உரையாடல்களில் ஈடுபட்டால் அவர்களது கலைக்கண்ணோட்டம் விரிவடைவதோடு, படைப்பும் கலையும் அடுத்தடுத்த பரிமாணங்களைச் சென்றடையும் என்று அமைப்பு கூறியது.

