பழம்பெரும் திரைக்கதை, நாடக ஆசிரியர் ரெஜினோல்ட் ரோஸ் (Reginald Rose) எழுதிய ‘12 ஆங்ரி மென்’ (Twelve Angry Men) நாடகத்தை ‘அவான்ட் தியேட்டர்’ (Avant Theatre) நாடகக் குழு தமிழில் படைக்கவுள்ளது.
அமெரிக்க நீதிமன்ற முறையைப் பின்புலமாகக் கொண்டுள்ள நாடகத்தின் கதையில் இடம்பெறும் நடுவர் மன்ற நீதிபதிகளாகச் சிங்கப்பூரின் தமிழ் நாடகக் கலைஞர்கள் நடிக்கவுள்ளனர்.
1957ல் தொலைக்காட்சிக்காக எழுதப்பட்ட நாடகத்தின் அடிப்படையில் உருவான இதன் கதைக்களம், வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட பன்னிரண்டு பேரை மையமாகக் கொண்டுள்ளது.
தந்தையைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ள பதின்ம வயதுச் சிறுவன் குற்றவாளியா, இல்லையா என்பது குறித்து அவர்கள் அனைவரும் ஒருமனத்துடன் தீர்ப்பு வழங்க எப்படி இணக்கம் காண்கிறார்கள் என்பது இதன் கதையாகும்.
உள்ளூர் நடிகரும் நாடகக் கலைஞருமான ஜி. செல்வா தொடங்கிய அவான்ட் தியேட்டரின் 25 ஆண்டுகாலப் பயணத்தையும் இந்த நாடகம் கொண்டாடுகிறது.
கடந்த காலத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒன்றை மீண்டும் அரங்குக்குக் கொண்டுவர தாங்கள் விரும்பியதாக இந்நிறுவனத்தின் கலை இயக்குநரான 58 வயது செல்வா கூறினார்.
அவான்ட் தியேட்டர் இந்த நாடகத்தை முதல் முறையாக 2012ல் அரங்கேற்றியது. அப்போது ஒவ்வொரு காட்சிக்கும் எந்தக் கதாபாத்திரத்தில் எந்த நடிகர் நடிக்க வேண்டும் என்பதைப் பார்வையாளர்களே தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இம்முறை, பன்னிரண்டு நடுவர்களின் வாதங்களையும் கேட்ட பிறகு, பார்வையாளர்கள் விசாரணை அதிகாரிகளைப்போலச் செயல்படும் புதிய அனுபவத்தைப் பெறுவர்.
ஆங்கில மூலத்தின் அடிப்படையில் திருமதி உமையாள் திருச்செல்வம் தமிழில் நாடக வசனத்தைப் புனைந்துள்ளார்.
ஜூலை 9 முதல் 11 வரை ‘ஸ்டாம்ஃபர்ட்’ கலை நிலையத்தில் (Stamford Arts Centre) இந்த நாடகம் அரங்கேற உள்ளது.
ஆங்கில மொழிபெயர்ப்பு வரிகளுடன் படைக்கப்படும் இந்நாடகம், நாள்தோறும் பிற்பகல் 3 மணி, இரவு 8 மணி என இரண்டு முறை அரங்கேறும்.
நாடகத்திற்கான சாதாரண நுழைவுச்சீட்டுகளின் விலை 35 வெள்ளி. இதற்கான சலுகை விலை, 30 வெள்ளி.
கலாசாரச் சிறப்புத்தொகையை இதற்குப் பயன்படுத்தலாம். இந்த நாடகத்தைக் காண்பதற்கான நுழைவுச்சீட்டுகளை bookmyshow.sg என்ற இணையத்தளத்தின் வாயிலாக முன்பதிவு செய்துகொள்ளலாம்.

