சிறிய நல்லெண்ணெய்த் தயாரிப்பு நிறுவனமாகத் தொடங்கி, இன்று சிங்கப்பூரில் பாரம்பரிய இந்திய உணவுப் பொருள்களை விநியோகிக்கும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக உருவெடுத்துள்ளது ‘எஸ்பி. முத்தையா அண்ட் சன்ஸ்’ நிறுவனம்.
120 ஆண்டுகள் பழைமையான இந்நிறுவனம், பாரம்பரியம் மாறாமல் நவீன வணிகச் சவால்களை எதிர்கொண்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.
காலத்தை வென்ற வரலாறு
1902ஆம் ஆண்டு பொத்தோங் பாசிரில் சிறிய நல்லெண்ணெய்த் தயாரிப்புத் தொழிலாக இந்நிறுவனத்தைத் தொடங்கினார் திரு சுப்பையா செட்டியார்.
ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் தரமான நல்லெண்ணெய் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் ‘வேல் முருகன்’ முத்திரையுடன் எண்ணெய் விற்கப்பட்டது.
ஜப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்தில் கடுமையான பொருளியல் நெருக்கடிகள் நிலவியபோதும் இதன் சேவை நிறுத்தப்படவில்லை.
திரு சுப்பையா செட்டியாரின் தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கப்பட்ட இந்த வணிகப் பயணத்தை, அவரது மகன் திரு எஸ்பி. முத்தையா செட்டியார் தொய்வின்றி நடத்திச் சென்று மக்களின் நம்பிக்கையைப் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து, 1974ஆம் ஆண்டில் திரு எஸ்பி. முத்தையா செட்டியாரின் மகன் திரு செல்வரத்தினம் முத்தையா சுப்பையா தொழிலில் இணைந்தார்.
அவரது வருகைக்குப்பின், நிறுவனம் அதிகாரபூர்வமாகக் கூட்டாண்மை நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது; அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அடித்தளமிடப்பட்டது.
1990களில் ஒரே ஒரு நல்லெண்ணெய்த் தயாரிப்பை மட்டும் நம்பி தொழிலைத் தக்கவைத்துக்கொள்வது மிகப்பெரிய சவாலாக இருந்ததால், நிறுவனம் தனது வணிகப் பாதையை விரிவுபடுத்தத் தொடங்கியது.
‘ஜெமினி’ (Gemini), ‘மகாராஜாஸ்’ (Maharajah’s) ஆகிய சொந்த வணிக முத்திரைகள் தொடங்கப்பட்டு, பாரம்பரிய ஊறுகாய், வடகம், தூய்மையான நெய், அப்பளம் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்கள் அம்முத்திரைகளின்கீழ் அறிமுகப்படுத்தப்பட்டன.
அத்துடன், இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் தரமான உணவுப் பொருள்களைச் சிங்கப்பூருக்கு நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிக்கும் பெருவணிகத்திலும் ‘எஸ்பி. முத்தையா அண்ட் சன்ஸ்’ இறங்கியது.
புதிய தலைமுறையின் முத்திரை
2008ஆம் ஆண்டில் நான்காம் தலைமுறையைச் சேர்ந்த திரு. முத்துக்குமரன் செல்வரத்தினம், புதிய ஆற்றலுடனும் நவீன சிந்தனைகளுடனும் நிறுவனத்தில் கால்பதித்தார்.
அவர், நிறுவனத்தை ‘எஸ்பி. முத்தையா அண்ட் சன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ (SP Muthiah & Sons Pte Ltd) எனப் பங்குதாரர்களின் பொறுப்பு வரையறைக்கப்பட்ட தனியார் நிறுவனமாக மறுபதிவு செய்து, குடும்பத்தின் பாரம்பரிய வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு விரிவுபடுத்தினார்.
வணிக விரிவாக்கத்தின் முக்கிய முயற்சியாக 2013ஆம் ஆண்டில் காக்கி புக்கிட்டில் 25,000 சதுர அடி பரப்பளவிலான சேமிப்புக் கிடங்கு வாங்கப்பட்டது.
‘யூனோஸ் டெக்னோலிங்க்’ (Eunos Technolink) கட்டடத்தில் இருக்கும் அந்தச் சேமிப்புக் கிடங்கில் நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தற்போது பிரிட்டானியா (Britannia), நெஸ்ட்லே இந்தியா (Nestle India), டாடா கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ் (Tata Consumer Products) உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட முன்னணி இந்திய நிறுவனங்களின் உணவுப் பொருள்களைச் சிங்கப்பூர் முழுவதும் திறம்பட விநியோகிக்கும் முன்னணி நிறுவனமாக ‘எஸ்பி. முத்தையா அண்ட் சன்ஸ்’ விளங்கி வருகிறது.
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களிடமிருந்து உயர்தரமான தயாரிப்புகளை மட்டும் தேர்ந்தெடுத்துச் சிங்கப்பூருக்குக் கொண்டு வருவதில் இந்நிறுவனம் கடப்பாடு கொண்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் நலனுக்கே முன்னுரிமை
தற்போது 1,500க்கும் மேற்பட்ட உணவுப் பொருள்களை விநியோகிக்கும் ‘எஸ்பி. முத்தையா அண்ட் சன்ஸ்’, வாடிக்கையாளர்களின் நலனையே முதன்மையாகக் கொண்டு செயல்பட்ட்டு வருகிறது.
நிறுவனத்தின் அன்றாட விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் காக்கி புக்கிட் கிடங்கிலிருந்து பொருள்கள், சிங்கப்பூர் முழுவதும் 800க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனைக் கடைகள், உணவகங்கள், மொத்த வணிகர்களைச் சென்றடைகின்றன.
ஒரே ஒரு நபரைக் கொண்டு எளிய முறையில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது 40க்கும் மேற்பட்ட பணியாளர்களோடு வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
தரத்திற்கு முன்னுரிமை அளித்துச் செயல்பட்டுவரும் இந்நிறுவனம், சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தினரிடையே தனக்கான ஆழமான நம்பகத்தன்மையைத் தொடர்ந்து கட்டிக்காத்தும் வருகிறது.
உள்ளூரிலும் உலக அளவிலும் விரிவாக்கம்
சிங்கப்பூரில் தங்கள் நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பை மேலும் விரிவுபடுத்துவதை ‘எஸ்பி. முத்தையா அண்ட் சன்ஸ்’ முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது.
‘ஃபேர்பிரைஸ்’ போன்ற முன்னணிப் பல்பொருள் அங்காடிகளில் தங்கள் தயாரிப்புகளின் விற்பனையை அதிகரிப்பதோடு, ‘ரெட்மார்ட்’ போன்ற இணையச் சந்தைகளின்வழி வணிகத்தை வலுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
“இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை மேலும் பல தளங்கள் வாயிலாக எளிதில் அடையும் வாய்ப்பு உருவாகும்,” என்றார் ‘எஸ்பி. முத்தையா அண்ட் சன்ஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி முத்துக்குமரன் செல்வரத்தினம், 45.
உள்நாட்டுச் சந்தை மட்டுமன்றி, உலக அளவிலும் வணிகத்தை விரிவுபடுத்தும் முனைப்பை இந்நிறுவனம் கொண்டுள்ளது.
தற்போது மலேசியா, பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்குத் தங்கள் பொருள்களை ஏற்றுமதி செய்து வரும் நிலையில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட புதிய வெளிநாட்டுச் சந்தைகளிலும் தடம் பதிப்பதை நிறுவனம் தன் அடுத்தகட்ட இலக்காகக் கொண்டுள்ளது.


