முதன்முறையாக நடந்த ஆசிய பசிபிக் டௌன் சிண்ட்ரோம் கூட்டமைப்பு விளையாட்டுகளில் சிங்கப்பூர் விளையாட்டாளர்கள் எழுவர் 14 பதக்கங்களை வென்றுள்ளனர்.
இலங்கை, பூட்டான், மங்கோலியா, மியன்மார், நேப்பாளம் உள்ளிட்ட நாடுகளின் மத்தியில் இந்தியாவுக்கு அடுத்து ஆக அதிகப் பதக்கங்களைச் சிங்கப்பூர் வென்றது.
‘டௌன் சிண்ட்ரோம்’ எனும் மனநலிவுக் குறைபாடு கொண்ட விளையாட்டாளர்கள் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து, ஜனவரி 29, 30ஆம் தேதிகளில் சென்னையில் நடந்த போட்டிகளில் பங்கேற்றனர்.
டௌன் சிண்ட்ரோம் சங்கம் (சிங்கப்பூர்) அவர்களைப் போட்டிக்கு அனுப்பியிருந்தது.
மூன்று மாதப் பயிற்சியின் பலனாக அவர்களுக்கு வெற்றி கிட்டியது.
பெண்களுக்கான 50 மீட்டர் ஓட்டத்தில் தங்கமும் இரட்டையர் ‘போச்சே’ (bocce) விளையாட்டில் தங்கமும் வென்றார் ஏபிஎஸ்என் காத்தோங் பள்ளி மாணவி நிக்கோல், 14.
சென்ற ஆண்டு உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டுகளில் சிலமுறை பங்கேற்ற நிக்கோல் கலந்துகொண்ட முதல் அனைத்துலக விளையாட்டுப் போட்டி இது.
“நிக்கோலுக்கு எப்போதும் பலவிதமான விளையாட்டுகளில் ஆர்வம் இருந்ததுண்டு. அதனால், டௌன் சிண்ட்ரோம் சங்கத்திலிருந்து இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தகுதிச் சுற்றில் கலந்துகொள்ளச் செய்யலாம் எனத் தோன்றியது,” என்றனர் நிக்கோலின் பெற்றோர்.
தொடர்புடைய செய்திகள்
போட்டிகளில், இனோக், வெய்காங், அலெசாண்ட்ரோ, ஹத்பா, நிக்கோலாஸ், அலிஷா ஆகியோரும் தலா இரண்டு பதக்கங்கள் வென்றனர்.
திடல்தட விளையாட்டுகளுக்கு ‘ஃபிட்டி விட்டி ஸ்போர்ட்ஸ்’ நிறுவனர் குமரன் ஆறுமுகம், ‘மை கோச்சிங் அகாடமி’ நிறுவனர் சரவணன் தாபிது, டௌன் சிண்ட்ரோம் சங்கம் (சிங்கப்பூர்) பயிற்சி அதிகாரி இம்மானுவேல் ஆகியோர் பயிற்சி வழங்கினர்.
நீச்சலுக்கும் போச்சே விளையாட்டுக்கும் சிறப்பு ஒலிம்பிக் சிங்கப்பூர் அமைப்பு பயிற்சி அளித்தது.
“தொடர்ந்து விளையாட்டாளர்களுக்குப் பயிற்சி வழங்க விரும்புகிறோம். உடற்குறையுள்ளோருக்கும் பிறரைப் போலவே விளையாட்டுகளில் சமமான வாய்ப்புகளும் அங்கீகாரமும் வழங்கப்படவேண்டும்,” என்றார் ‘ஃபிட்டி விட்டி ஸ்போர்ட்ஸ்’ நிறுவனர் குமரன் ஆறுமுகம்.
“குறுகிய காலத்தில் (மூன்று மாதங்களில்) மழைக்கு இடையே விளையாட்டாளர்களுக்குப் பயிற்சி வழங்குவது சவால்மிக்கதாக இருந்தது. அவர்கள் சிங்கப்பூரைப் பெருமைப்படுத்தியுள்ளனர்,” என்றார் சரவணன்.
“பங்கேற்ற எழுவரில் ஐவருக்கு இத்தகைய போட்டியில் கலந்துகொள்வது இதுவே முதன்முறை. புதுமையான சூழலாக இருந்தது. உண்ணும் உணவிலிருந்து மொழி வேறுபாடு வரை சில சவால்கள் இருந்தன. ஆனால், மற்ற நாடுகளின் விளையாட்டாளர்களுடன் நட்பு உருவானது. போட்டிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன,” என்றார் டௌன் சிண்ட்ரோம் சங்கம் (சிங்கப்பூர்) பயிற்சி அதிகாரி இம்மானுவேல்.
டௌன் சிண்ட்ரோம் சங்கம் (சிங்கப்பூர்), சிறியவர் முதல் பெரியவர் வரை விளையாட்டு மட்டுமன்றி நடனம், நாடகம், இசைப் பயிலரங்குகள் போன்றவற்றின் மூலம் பயன்பெறவும் வாய்ப்பளிக்கிறது. மேல்விவரங்களுக்கு https://downsyndrome-singapore.org என்ற இணையத்தளத்தை நாடலாம்.

