சிங்கப்பூரில் ஒன்றுகூடிய 1983ஆம் ஆண்டின் இந்திய கிரிக்கெட் அணி

சிங்கப்பூரில் ஒன்றுகூடிய 1983ஆம் ஆண்டின் இந்திய கிரிக்கெட் அணி

3 mins read
1a78888a-d20a-4209-9229-8fb9ea298bdb
ஆகஸ்ட் 9ஆம் தேதி நடந்த இரவு விருந்தில் கலந்துகொண்டு மறக்க முடியாத அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியினர். - படம்: பே. கார்த்திகேயன்
Google News Preferred Icon
‘பாம்பே பிராஸரி’ உணவகத்தில் சமூகத் தலைவர்கள் கலந்துகொண்ட சிறப்பு நண்பகல் விருந்தில் பங்கேற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியினர்.
‘பாம்பே பிராஸரி’ உணவகத்தில் சமூகத் தலைவர்கள் கலந்துகொண்ட சிறப்பு நண்பகல் விருந்தில் பங்கேற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியினர். - படம்: ‘பாம்பே பிராஸரி’ உணவகம்
அணியின் ஒவ்வொரு வீரரைப் பற்றியும் அவர்களது திறமைகள் குறித்தும் பகிர்ந்துகொண்ட திரு கபில் தேவ்.
அணியின் ஒவ்வொரு வீரரைப் பற்றியும் அவர்களது திறமைகள் குறித்தும் பகிர்ந்துகொண்ட திரு கபில் தேவ். - படம்: பே. கார்த்திகேயன்

முதன்முறையாக 1983ஆம் ஆண்டு இந்தியாவிற்கு உலகக் கிண்ணத்தை வென்று தந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ஆகஸ்ட் 7ஆம் தேதி சிங்கப்பூரில் மீண்டும் ஒன்றுகூடினர்.

‘83 லெஜண்ட்ஸ் டூர் ஆஃப் சிங்கப்பூர்’ (’83 Legends Tour of Singapore) நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த விளையாட்டாளர்கள் 11 பேர் சிங்கப்பூருக்கு வருகை தந்தனர்.

மரினர்ஸ் கிரிக்கெட் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் 7 முதல் 9ஆம் தேதி வரை நடைபெற்றது.

1983ஆம் ஆண்டின் வெற்றிக்குப் பிறகு இந்தியாவிற்கு வெளியே அந்த அணியினர் மீண்டும் ஒன்றுகூடிய மிகப்பெரிய நிகழ்ச்சியாக அது அமைந்தது.

“நாங்கள் அனைவரும் ஒரு குடும்பம். வாழ்வில் மீண்டும் ஒருமுறை ஒன்றாக இணைந்திருக்கிறோம்,” என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் கபில்தேவ், 67, நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

1983ல் இந்தியாவிற்காக கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வென்ற முழு அணியையும் சிங்கப்பூருக்கு அழைப்பது ஏற்பாட்டாளர்களின் நீண்ட நாள் கனவு என்றும் அதை நனவாக்க ஓராண்டிற்குமேல் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டன என்றும் மரினர்ஸ் கிரிக்கெட் மன்றத்தின் தலைவர் அவிஜித் தத்தா கூறினார்.

வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) பிற்பகல், ‘பாம்பே பிராஸரி’ உணவகத்தில் சமூகத் தலைவர்கள் கலந்துகொண்ட சிறப்பு விருந்தில் கிரிக்கெட் நாயகர்கள் பங்கேற்றனர்.

வரலாறு படைக்க ஒன்றிணைந்த அந்த அணியைப் போலவே, இந்திய நாட்டின் கலாசாரப் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் உணவு வகைகள் அமைந்தன.

வெள்ளிக்கிழமை மாலை ஆர்ச்சர்ட் ஹோட்டலில் சிறப்பு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ரசிகர்கள், சிறப்பு விருந்தினர்கள் என ஏறத்தாழ 600 பேர் நிறைந்திருந்த அவ்வரங்கில், உலகக் கிண்ண வெற்றியாளர்கள் மேடையேறித் தங்களது மறக்க முடியாத அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த இறுதிப்போட்டியின் தருணங்களை அவர்கள் நினைவுகூர்ந்தபோது, முழு அரங்கமும் ஆரவாரத்தில் மூழ்கியது.

2021ஆம் ஆண்டு காலமான அணியின் முக்கிய விளையாட்டாளர் யஷ்பால் சர்மாவை அணியினர் மனநெகிழ்வோடு நினைவுகூர்ந்தனர்.

“இந்திய அணிக்காக எதையும் செய்யக்கூடிய அளவிற்கு அணிமீது அளப்பரிய அன்பு வைத்திருந்தார் யஷ்பால்,” என்று நினைவுகூர்ந்தார் சுனில் கவாஸ்கர், 77.

கிரிக்கெட் விளையாட்டைவிட ஆடை மாற்றும் அறையில் சக விளையாட்டாளர்களோடு செலவிட்ட நேரம்தான் அதிகம் நினைவுக்கு வருகிறது என்ற கபில்தேவ், அணியின் ஒவ்வொரு வீரரைப் பற்றியும் அவர்களது திறமைகள் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

“எங்களது வெற்றிதான் இந்தியா முழுதும் கிரிக்கெட் விளையாட்டைப் பிரபலமாக்கியது. நாடு முழுதும் இளையர்கள் மிகுந்த ஈடுபாட்டோடு கிரிக்கெட் விளையாடுவதைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது,” என்று தமிழ் முரசிடம் கூறினார் கபில்தேவ்.

ஆங்கிலேயர்களால் மட்டுமே கிரிக்கெட் விளையாட முடியும் என்ற பொதுவான எண்ணம் அக்காலத்தில் இருந்தது என்றும் அதைத் தங்கள் அணி பொய்யாக்கியது என்றும் அவர் பெருமையுடன் சொன்னார்.

“முதல் போட்டியிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணியைத் தோற்கடித்ததுதான் தொடரின் திருப்புமுனை. அந்த வெற்றிதான் எங்களுக்கு இறுதிவரை போராடும் நம்பிக்கையைக் கொடுத்தது,” என்றார் சுனில் கவாஸ்கர்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, பாலஸ்டியர் சாலையில் அமைந்துள்ள சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் திடலில் அவ்வணியினர் விளையாட்டில் ஈடுபட்டனர்.

ஆகஸ்ட் 9ஆம் தேதி மரினர்ஸ் கிரிக்கெட் மன்றத்தோடு நடைபெற்ற அந்த ஆட்டத்தைக் காண ஏறக்குறைய 1,500 ரசிகர்கள் திரண்டனர்.

லார்ட்ஸ் திடலில் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை இந்திய அணி ஏந்தி 43 ஆண்டுகள் உருண்டோடியிருந்தாலும், அவர்களது வெற்றி இந்திய கிரிக்கெட் வரலாற்றிலும் ரசிகர்களின் மனத்திலும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பது உறுதி!

குறிப்புச் சொற்கள்