2,000 குடும்பங்கள் பயனடைந்தன

தொடக்கப்பள்ளி செல்லும் பிள்ளைகளுக்குத் தேவையான பொருள்களை வழங்கியது மெண்டாக்கி

2 mins read
052ec513-360e-4d00-86ed-07ec82a10f59
மெண்டாக்கி ஊழியரிடமிருந்து பள்ளிக்குத் தேவையான பொருள்களை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்ளும் புட்டேரா ஆர்டெல் மிகைல், 6. - படம்: மெண்டாக்கி

2026ல் தொடக்கநிலை 1க்குச் செல்லும் மாணவர்களுக்கு உதவும் பொருள்களை வழங்கியுள்ளது மெண்டாக்கி. பிள்ளைகளைத் தொடக்கப்பள்ளிக்குச் செல்ல ஊக்குவிக்கும் வகையில் அமைந்த ‘ரெடி, செட், பிரைமரி’ பொருள்கள் ஏறத்தாழ 2,000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இவற்றில், பள்ளிக்குத் தேவையான எழுதுபொருள்கள், புத்தகப்பை, மழைச்சட்டை, கழுத்துப்பட்டையுடன் கூடிய அட்டைக்கான உறை, உணவுப்பை, திட்டமிட உதவும் பலகை, ஏ4 கோப்புறை ஆகியவை இடம்பெற்றன.

இம்மாதம் முழுவதும் பள்ளிவாசல்களில் உள்ள பாலர் பள்ளிகளைச் சேர்ந்தோர் உள்ளிட்டோருக்கு இவை வழங்கப்பட்டன.

மேலும், இந்திய முஸ்லிம் நிபுணர்கள் (இம்புரோஃப்), இந்திய முஸ்லிம் சமூக சேவை மன்றம், முகம்மதியா, எஸ்ஜிஎம் முர்னி, ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கம் உள்ளிட்ட சமூகப் பங்காளிகளின் குடும்பங்களுக்கும் இவை வழங்கப்பட்டன.

“கற்றலில் கவனம் செலுத்துவதற்கு ஆதரவளிப்பதில் மெண்டாக்கி உறுதி கொண்டுள்ளதாகச் சொன்ன மெண்டாக்கி தலைமை நிர்வாக அதிகாரி ஃபெரோஸ் அக்பர், “பள்ளிப் பொருள்களுக்கு அப்பால் கல்வி அறக்கட்டளை நிதி - ஃபிளெக்சி நிதி மூலம் வசதி குறைந்த மலாய்/முஸ்லிம் மாணவர்களுக்கு மெண்டாக்கி தொடர்ந்து ஆதரவளிக்கிறது,” என்றார்.

பள்ளி வாழ்வின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கவுள்ள தம் மகன் புட்டேரா ஆர்டெல் மிகைலுக்கு இப்பொருள்கள் உற்சாகம் அளித்துள்ளதாக திருவாட்டி ஹஸ்லினா ஹசன், 40, கூறினார்.

பொருள்கள் வழங்குவதைத் தாண்டி, பாலர்பள்ளித் தயார்நிலைத் திட்டங்கள், பெற்றோருக்கான பயிலரங்குகள், பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கல்விப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருக்க உதவும் மின்னிலக்கக் கருவிகள் எனப் பல்வேறு முன்னெடுப்புகளையும் மெண்டாக்கி மேற்கொண்டு வருகிறது.

2026ல் கல்வி அமைச்சின் அளவுகோலுக்கு இணங்க, தனிநபர் வருமான வரம்பு $1,000ஆக மாற்றியமைக்கப்படும் என்றும் இது மேலும் பல குடும்பங்களுக்கு ஆதரவளிக்க உதவும் என்றும் மெண்டாக்கி கூறியது.

குறிப்புச் சொற்கள்
மெண்டாக்கிதொடக்கப் பள்ளிபரிசு