ப. பாலசுப்பிரமணியம்
கடந்த 18 ஆண்டுகளாக தமிழர் பேரவை தனது 40 இணை அமைப்புகளுடன் தேசிய தினத்தை கோலாகலமாக கொண்டாடி வருகிறது. இம்மாதம் 1ஆம் தேதி, எம்டிஐஎஸ் வளாகத்தில் சிங்கப்பூரின் 53வது பிறந்தநாளை சமூக, அடித்தளத் தலைவர்கள், தொண்டூழியர்கள், மாணவர்கள் என 400 பேருடன் தமிழர் பேரவை கொண்டாடியது. இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக கல்வி மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளரான டாக்டர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழர் பேரவையின் தலைவர் திரு வெ.பாண்டியன், தமிழர் பேரவை மீண்டும் தொடங்கியுள்ள இளையர் அணி குறித்து பேசினார். துடிப்புமிக்க பன்னிரண்டு இளையர்களைக் கொண்டுள்ள இந்த அணி, தமிழர் பேரவையின் தலைமைத்துவப் புதுப்பிப்புக்கு முக்கியம் என்று தமது உரையில் அவர் வலியுறுத்தினார். கொண்டாட்டத்தில் இசை நிகழ்ச்சிகள் களைகட்டின. தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்கள் 30 பேருக்குக் கல்வி உன்னத விருதுகளும் வழங்கப்பட்டன. 2000ஆம் ஆண்டில் அறிமுகம் கண்ட இவ்விருது தமிழ்ப் பாடம் உட்பட, மற்ற பாடங்களிலும் சிறப்பாகச் செய்யும் மாணவர்களைக் கெளரவித்து வருகின்றது. அவர்களுக்குச் சான்றிதழ் களுடன் 'பாப்புலர்' புத்தகக் கடை பற்றுச்சீட்டுகளும் வழங்கப்பட்டன.
தமிழர் பேரவையின் தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட கல்வி மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளரான டாக்டர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம் (முன்வரிசையில் வலமிருந்து மூன்றாவது). படம்: தமிழர் பேரவை

