2030க்குள் 1,800 கைக்குழந்தைப் பராமரிப்பு ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர்

2030க்குள் 1,800 கைக்குழந்தைப் பராமரிப்பு ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர்

2 mins read
2939f37f-2c9f-4bde-9a5c-41d866a6b9df
சுமாங் லேனில் உள்ள ‘ஈ-பிரிட்ஜ்’ பாலர் பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழாவில் மூத்த அரசாங்க அமைச்சர் கோ பெய் மிங் (நடுவில்). - படம் : ஆயிஷா ரோஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் 2030ஆம் ஆண்டுக்குள் கைக்குழந்தைப் பராமரிப்பு ஆசிரியர்கள் மேலும் 1,800 பேர் பணியமர்த்தப்பட உள்ளதாக உள்துறை, சமுதாய, குடும்ப மேம்பாட்டு மூத்த துணையமைச்சர் கோ பெய் மிங் தெரிவித்தார்.

குடும்பங்களுக்குக் குழந்தைப் பராமரிப்புச் சேவைக் கட்டணம் மேலும் குறைக்கப்படவிருப்பதால் இத்துறையில் ஆசிரியர்களுக்கான தேவையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குழந்தைப் பராமரிப்பிற்கான தேவையை நிறைவேற்ற, 2026 செப்டம்பர் முதல் பாலர் பள்ளி நிர்வாகங்களுக்கான ‘ஆட்சேர்ப்பு மானியத் திட்டம்’ விரிவாக்கப்படும் என்று சுமாங் லேனில் உள்ள ‘ஈ-பிரிட்ஜ்’ பாலர் பள்ளியில் நடந்த ஆசிரியர் தின நிகழ்ச்சியில் பேசிய திரு கோ கூறினார்.

இதன்மூலம் பாலர் பருவக் கல்விக்கான படிப்புகளில் சேரும் உள்ளூர், வெளிநாட்டுப் பயிற்சியாளர்களுக்கு நிதி உதவியும் பயிற்சி உதவித்தொகையும் வழங்கப்படும். இத்திட்டம் 2030 டிசம்பர் 31 வரை மேலும் மூன்றாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஈ-பிரிட்ஜ் கைக்குழந்தைப் பராமரிப்பு ஆசிரியர் லியானா(வலது), ஈ-பிரிட்ஜ் மனிதவள இயக்குநர் விவியன் (இடது). 
ஈ-பிரிட்ஜ் கைக்குழந்தைப் பராமரிப்பு ஆசிரியர் லியானா(வலது), ஈ-பிரிட்ஜ் மனிதவள இயக்குநர் விவியன் (இடது).  - படம் : ஆயிஷா ரோஸ்

ஈ-பிரிட்ஜ் குழந்தைப் பராமரிப்பு ஆசிரியராக ஓர் ஆண்டாகப் பணிபுரிந்து வருகிறார் நான்கு குழந்தைகளின் தாயாரான லியானா. அரசு ஊழியராகப் பணிபுரிந்த அவர் இந்தத் துறைக்கு மாற ‘ஆட்சேர்ப்பு மானியத் திட்டம்’ கைகொடுத்தது.

“இத்திட்டத்தின் மூலம் நான் அரைநாள் பணியாற்றி, மீதி அரைநாள் வகுப்பில் பங்கேற்றேன். என் நிதிச் சுமையை இது குறைக்க உதவியது. இதனால் என் வழக்கமான அன்றாடப் பணிகள் பாதிக்கப்படவில்லை. மேலும், குடும்பத்துடன் என் நேரத்தைச் செலவிட முடிந்தது,”என்றார் ஆசிரியர் லியானா, 36.

“ஆட்சேர்ப்பு ஊக்கத்தொகை இத்துறையில் பணியாற்ற ஆசிரியர்களை ஈர்க்க நிச்சயம் உதவுகிறது. ஆசிரியர்களைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள பயிற்சி, வழிகாட்டுதல், நலன் ஆகியவற்றிலும், அவர்களின் பணி மேம்பாட்டிலும் முதலீடு செய்கிறோம்,” என்று ஈ-பிரிட்ஜ் மனிதவள இயக்குநர் விவியன்,45, கூறினார்.

தேசிய நாள் பேரணி உரையில் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அறிவிப்பின் தொடர்ச்சியாக இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2030க்குள் அரசு ஆதரவு பெறும் பாலர் பள்ளிக் கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டு, முழுநாள் குழந்தைப் பராமரிப்பிற்கு மாதக் கட்டணம் $300 ஆகக் குறையும்.

பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த, தகுதியான வெளிநாட்டுப் பங்களிப்புகளையும் தற்போதைய பாலர் பள்ளி ஆசிரியர்களையும் பயன்படுத்த பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு (ECDA) திட்டமிட்டுள்ளது. மேலும், அரசு உதவிபெறும் அமைப்பில் சேரும் பாலர் பள்ளி நிர்வாகங்களுக்குப் புதிய மானிய உதவியும் அறிமுகப்படுத்தப்படும்.

குறிப்புச் சொற்கள்
சமூகம்சிங்கப்பூர்ஆசிரியர்ஆசிரியர் தினம்

தொடர்புடைய செய்திகள்