சிங்கப்பூர் நீதித்துறை தனது இருநூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், அண்மையில் நடைபெற்ற நீதித்துறைத் தொண்டூழியர் பாராட்டு நிகழ்ச்சியில் மரண தண்டனை வழக்குகளில் இலவச சட்ட உதவி வழங்கும் (லாஸ்கோ) திட்டத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவையாற்றிய வழக்கறிஞர் நால்வர்க்குச் சிறப்பு விருது வழங்கப்பட்டது. அவர்களில் ஒருவர் 54 வயதான திரு பிரதாப் கிஷன்.
தமது நீதிப் பயணம் தம் பெற்றோரின் கனவிலிருந்து தொடங்கியதாகக் கூறிய திரு கிஷன், ‘வழக்கறிஞரானபின் சமூகத் தொண்டாற்றுவதே முக்கியம்’ என்ற தம் தாயாரின் சொற்களே தம்மை வழிநடத்திவருவதாகக் குறிப்பிட்டார்.
பெரும்பாலும் போதைப்பொருள் தொடர்பான வழக்குககளைக் கையாளும் திரு கிஷன், ‘‘சொற்ப பணத்திற்கு ஆசைப்பட்டு, அறியாமையால் அதில் சிக்கித் தவிப்பவர்களைத் தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்ற அரசுத் தரப்பிடம் மனு அளித்து, தண்டனையைக் குறைக்க முயல்வதையே முதன்மை இலக்காகக் கொண்டு உழைத்து வருகிறேன்,’’ என்றார்.
மரண தண்டனை உள்ளிட்ட இதர வழக்குகளைக் கையாளும்போது வழக்கறிஞருக்கு ஏற்படும் மன அழுத்தம் குறித்து விவரித்த இவர், “குற்றவியல் சட்டப் பணியில் வழக்குடன் உணர்வுபூர்வமாக ஒன்றிவிடாமல் முழுமூச்சுடன் செயல்பட வேண்டும். வழக்கின் தீர்ப்பால் பாதிக்கப்படாமல் அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற என் மூத்த வழக்கறிஞரின் அறிவுரையைப் பணியின் முதல் நாளில் இருந்தே கடைப்பிடித்து வருகிறேன்,” என்றார்.
சட்டக்கூறுகளைத் தமிழ்ப்படுத்தித் தரும் இவர், ‘‘ஆங்கிலத்தில் இருக்கும் சட்ட ஆவணங்களின் தீவிரத்தைப் புரிந்துகொள்ள முடியாத தமிழ் பேசும் குடும்பத்தினருக்குத் தாய்மொழியில் விளக்குவதும் என் முக்கியக் கடமை. தாய்மொழியில் வழக்கு விவரங்களை கூறும்போது அதன் நேர்மறைத் தாக்கம் ஆழமாக இருக்கும்,’’ என்றார்.
வழக்கறிஞராகத் தமது பயணத்தில், 15 ஆண்டுகளுக்குமுன் மூன்று பேர் மீதான வழக்கில் அனைவரும் விடுதலையான தருணம் மறக்க முடியாதது என்று திரு கிஷன் குறிப்பிட்டார்.
“இலவசச் சட்டச் சேவை வழக்கறிஞர் சரியாக வாதாட மாட்டார் என்ற எண்ணம் கூடாது. கட்டணத்திற்கு அப்பாற்பட்டு முழு அர்ப்பணிப்புடன் உழைக்கிறோம்,” என்றார் இவர்.
மரண தண்டனை சார்ந்த வழக்குகளின் தீர்ப்புக்கு முதல்நாள் இரவில் தூக்கம் வருவது கடினம்தான். ஆனால் வெற்றி தோல்வியைத் தாண்டி, தன் பங்கை நேர்மையாகச் செய்தேன் என்ற மனநிறைவையே தனக்குக் கிடைக்கும் பெரும்பரிசாகக் கருதுகிறார் இந்தச் சாதனையாளர்.
இளைய வழக்கறிஞர்கள் தொண்டூழியத்தில் தடம்பதிப்பது பாராட்டுக்குரியது எனக் கூறும் திரு கிஷன், ‘‘தொண்டூழியம் புரியும் நேரத்தைக் கணக்கிடுவதைவிட, அதை ஈடுபாட்டுடன் செய்யும் மனமே முக்கியம். அவையே நீதியின் வாயிலை எப்போதும் எவரும் அணுகக்கூடிய வகையில் வைத்திருக்கும்," என்கிறார்.
