மருத்துவ நிபுணத்துவக் கல்வியாளரான பேராசிரியர் சி.ராஜசூரியா, 40 ஆண்டுகளாக மருத்துவ மாணவர்களுக்குக் கற்பித்து வருகிறார்.
செங்காங் பொது மருத்துவமனையில் மூத்த ஆலோசகராகப் பணியாற்றி வரும் இவர், சிங்கப்பூரில் உள்ள மூன்று மருத்துவப் பள்ளிகள், மேற்படிப்புப் பயிற்சித் திட்டங்கள் வாயிலாக ஆயிரக்கணக்கான மருத்துவ மாணவர்களுக்குக் கற்பித்துள்ளார்.
நாற்பது ஆண்டுகள் கடந்தும், கற்பிப்பதில் அதே ஆர்வத்துடன் இவர் விளங்குகிறார்.
மருத்துவக் கல்வித் துறையில் பேராசிரியர் ராஜசூரியாவின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் வகையில், செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற சிங்ஹெல்த் டியூக்-என்யுஎஸ் கல்விக் கருத்தரங்கில் இவருக்கு உயரிய ஏஎம்இஐ கோல்டன் ஆப்பிள் விருதின் ஜெனரேட்டிவிட்டி விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
விருதைப் பெற்றுக்கொண்ட இவர், சிங்கப்பூரின் மருத்துவப் பயிற்சி முறை இன்று இருப்பதைவிட அப்போது மிகவும் மாறுபட்டதாக இருந்ததை நினைவுகூர்ந்தார்.
“இக்காலகட்டத்தில் மருத்துவ மாணவர்கள் தெளிவாகச் சிந்திக்கவும் நோயாளிகளுடன் முறையான தொடர்பை ஏற்படுத்தவும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் எவ்வாறு ஒரு கருவியாக பயன்படுத்தப்படலாம் என்பதை நானும் என் சக ஊழியர்களும் ஆராய்ந்து வருகிறோம்,” என்று பேராசிரியர் ராஜசூரியா கூறினார்.
தாம் விருது பெற்றதற்கு தம் மாணவர்களும் சக ஊழியர்களும் அளித்த ஆதரவே காரணம் என்றார் இவர்.
சுகாதார மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட விருது நிகழ்ச்சியில், பேராசிரியர் ராஜசூரியா உட்பட 74 சுகாதார நிபுணத்துவக் கல்வியாளர்கள் ஏஎம்இஐ கோல்டன் ஆப்பிள் விருதைப் பெற்றனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு டான், செயற்கை நுண்ணறிவும் தொழில்நுட்ப கட்டமைப்புகளும் எவ்வளவுதான் வளர்ச்சியடைந்தாலும், அவற்றுக்கு அர்த்தத்தையும் நோக்கத்தையும் அளிப்பது சுகாதாரத் துறை வல்லுநர்களே என்றார்.
“நோயாளிகள் சுகாதாரப் பராமரிப்பைத் தனித்தனி மருத்துவத் துறைகளின் தொகுப்பாகக் கருதுவதில்லை. பொதுநல மருத்துவர், தாதியர், மருந்தாளர், சிகிச்சையாளர், மருத்துவ சமூக ஊழியர் உள்ளிட்டோரை நோயாளிகள் சந்திக்க நேரிடலாம்.
“நோயாளியைப் பொறுத்தவரை, இது ஒரு தொடர்ச்சியான பயணமாகும். நோயாளிக்குத் தேவையான அனைத்துப் பராமரிப்பையும் எந்தவொரு தனிப்பட்ட மருத்துவத் துறையாலும் முழுமையாக வழங்கிவிட முடியாது. எனவே, பிற துறைகளுடன் இணைந்து திறம்படச் செயல்படக்கூடிய மருத்துவ வல்லுநர்களும் நமக்குத் தேவை,” என்று திரு டான் வலியுறுத்தினார்.
