நம்மில் பலருக்குப் பணியிடம் பற்றிய பல்வேறு நினைவுகள் மனத்தில் நீங்கா இடம்பிடித்திருப்பது வழக்கம். 52 வயதாகும் தலைமைப் பேருந்து ஓட்டுநர் அப்துல் லதிஃப் முகம்மது ரஃபிக்கு பணி சார்ந்த நினைவுகள் மட்டுமன்றிப் பேருந்து வழித்தடங்களும் நினைவில் ஆழப் பதிந்துள்ளன.
எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தில் 25 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ரஃபி, 52 பேருந்து வழித்தடங்களை மனனம் செய்துள்ளார்.
“சிங்கப்பூர் வழித்தடங்களில் கிட்டத்தட்ட 90 விழுக்காடு எனக்குத் தெரியும். பாதைகளை எவ்வாறு விரைவாகத் தெரிந்துகொள்வது என்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு பேருந்துச் சேவையை ஓட்டும்போது அதில் வேறெந்தப் பேருந்துச் சேவைகள் செயல்படுகின்றன என்பதையும் கவனிப்பேன்,” என்று கூறினார் ரஃபி.
5, 65, 80, 93, 123, 272, 57, 147, 196 என அடுக்கிக்கொண்டே போகுமளவு வழித்தடங்களை மனனம் செய்துள்ள அவருக்கு மிகவும் பிடித்த சேவை எண் குறித்தும் அதற்கான காரணத்தையும் கூறினார்.
“பேருந்துச் சேவை 65 எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் அது கிட்டத்தட்ட சிங்கப்பூரின் அனைத்து இடங்களுக்கும் செல்லும். மத்திய சிங்கப்பூர் வட்டாரம், லிட்டில் இந்தியா, ஹார்பர் ஃபிரண்ட் போன்ற இடங்களுக்கு அதில் செல்லலாம்,” என்றார் ரஃபி.
இந்தியாவில் பிறந்து வளர்ந்த இவர் தமது 20களில் சிங்கப்பூருக்கு வந்தார். இளவயதிலிருந்தே வாகனங்கள்மீது ஈர்ப்பு கொண்டிருந்த ரஃபி, சிங்கப்பூருக்கு வந்தவுடன் சில காலம் முஸ்தஃபா கடைத்தொகுதியில் காசாளராகப் பணியாற்றினார்.
“எனக்கு ஒரு நிரந்தர வேலை தேவைப்பட்டது. அப்போது செய்தித்தாளில் பேருந்து ஓட்டுநர் வேலைக்கான விளம்பரத்தைக் கண்டேன். நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்படித்தான் இந்தப் பயணம் தொடங்கியது,” என்று ரஃபி கூறினார்.
பணியைத் தொடங்கியபோது பேருந்துச் சேவை 282ன் ஓட்டுநராக இருந்த இவர், சென்ற ஆண்டு தலைமைப் பேருந்து ஓட்டுநராகப் பதவி உயர்வு பெற்றார்.
தொடர்புடைய செய்திகள்
எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தில் கிட்டத்தட்ட எட்டுப் பேர் மட்டுமே தலைமைப் பேருந்து ஓட்டுநர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பேருந்து ஓட்டுநராக இருந்த இத்தனை ஆண்டுகளில் பயணிகளுடனான இனிமையான நினைவுகளைக் கொண்ட தருணங்கள் பல.
முன்பு பேருந்துச் சேவை 551ஐ ஓட்டியபோது ரஃபிக்கு 25 ஆண்டுகளாக மலாய்ப் பயணி ஒருவரை நன்கு தெரியும். இருவருக்கும் இடையே நெருங்கிய நட்புறவு இருந்ததால் அந்தப் பயணி அவரது மகனின் திருமணத்திற்குத் தன்னை அழைத்ததாகச் சொன்னார் ரஃபி.
“அன்றாடம் வழக்கமான பயணிகளைப் பார்ப்பதால் மனம் குளிரும். பாதுகாப்பாகப் பேருந்தை ஓட்டவேண்டும் என்ற கடமை உணர்வும் அதிகமாகும். பயணிகள்தான் என் வேலையை இன்பமாக்குகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
பேருந்து ஓட்டுநராகச் சவால்கள் பல இருந்தாலும் நிதானம் காத்தால் அனைத்தையும் சிறப்பாகக் கையாளலாம் என்பது ரஃபியின் தாரக மந்திரம்.
“சிலர் பயணத்தில் தூங்கி, மடிக்கணினி போன்ற விலைமதிப்புள்ள பொருள்களை மறந்து வைத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். அவற்றைப் பாதுகாப்பாக அவர்களிடம் ஒப்படைப்பேன். பயணிகள் செருக்குடன் நடந்துகொண்டால் அல்லது கடுமையாகப் பேசினால் நான் பொறுமையாகப் பேசி அவர்களைச் சமாளிப்பேன்,” என்றார் அவர்.
தொழில்நுட்ப வளர்ச்சியால் பேருந்துப் பாதுகாப்பு மிகுந்த வளர்ச்சி கண்டுள்ளதாகக் கூறிய ரஃபி அவை ஓட்டுநர்களுக்கு உதவியாக இருப்பதாகவும் சொன்னார்.
“புதிய தொழில்நுட்ப அம்சங்கள் பேருந்துகளில் சேர்க்கப்பட்டுள்ளன. பேருந்து ஓட்டுநர் சோர்வாக இருந்தால் அவரது இருக்கை அதிர்வு காணும். நான் கண்ட மாற்றங்களில் இது மிகப் பெரிது,” என்றார் அவர்.
இத்தனை ஆண்டுகளில் வேறெந்த வேலைக்கும் மாறவேண்டும் என்று தனக்குத் தோன்றியதே இல்லை எனக் கூறிய ரஃபி, இந்தப் பணி மனநிறைவைத் தருவதாகச் சொன்னார்.
தற்போது உலு பாண்டான் பேருந்துக் கிடங்கில் சக ஊழியர்கள் யாராவது திடீரென வேலையில் விடுப்பு எடுக்க நேரிட்டால் அவருக்குப் பதிலாக ரஃபி அப்பேருந்தை ஓட்டுகிறார். மேலும், இதர ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணியிலும் அவர் ஈடுபடுகிறார்.

