தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 66வது நினைவு நாள் புகழஞ்சலி

4 mins read
1d770eff-4154-4657-80d4-0d68d1bf8033
சிறப்பு விருந்தினர் திரு ஜோதி மாணிக்கவாசகத்துடன், சிறப்புப் பேச்சாளர் வானதி பிரகாஷ், மக்கள் கவிஞர் மன்ற செயற்குழு உறுப்பினர்கள், மன்ற ஆலோசகர்கள். - படம்: மக்கள் கவிஞர் மன்றம்

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 66ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி தேசிய நூலக வாரியத்தில் சென்ற ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) நடைபெற்றது.

அதனை மக்கள் கவிஞர் மன்றம் ஏற்பாடுசெய்தது.

அண்மையில் மறைந்த மக்கள் கவிஞர் மன்ற வாழ்நாள் உறுப்பினர்களும் மன்றத்துக்கு அரும்பங்காற்றியவர்களுமான திரு போப்ராஜ், திரு சண்முகசுந்தரம் இருவருக்கும் ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அண்மையில் மறைந்த மக்கள் கவிஞர் மன்ற வாழ்நாள் உறுப்பினர்களும் மன்றத்துக்கு அரும்பங்காற்றியவர்களுமான திரு போப்ராஜ், திரு சண்முகசுந்தரம் இருவருக்கும் ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அண்மையில் மறைந்த மக்கள் கவிஞர் மன்ற வாழ்நாள் உறுப்பினர்களும் மன்றத்துக்கு அரும்பங்காற்றியவர்களுமான திரு போப்ராஜ், திரு சண்முகசுந்தரம் இருவருக்கும் ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. - படம்: ரவி சிங்காரம்

“மனங்களை வென்ற மக்கள் கவிஞர்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் வானதி பிரகா‌ஷ்.

Watch on YouTube

மக்கள் கவிஞர் (13 ஏப்ரல் 1930 - 8 அக்டோபர் 1959) வாழ்ந்தது 29 ஆண்டுகளே என்பினும், அவர் வாழ்ந்த நாள்கள் “காலத்தால் அழிக்கமுடியாத சகாப்தம்” என்றார் திருவாட்டி வானதி.

“தமிழ்த்தாய் பெற்றெடுத்த, பாரதிதாசன் தத்தெடுத்த, வள்ளுவன், பாரதியின் உதிரம்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் தமிழ்த்தாயின் எளிமை, பாரதியின் ஞானச் செருக்கு, வள்ளுவனின் வாய்மை இருக்கும். உழைக்கும் மக்களைப் பல்லக்கில் ஏற்றி உலகம் பார்க்க வைத்தவர்,” எனப் புகழஞ்சலி செலுத்தினார் திருவாட்டி வானதி.

“எவர் ஒருவர் பிறரது வலியை உணர்கிறாரோ அவர் கடவுளாக மாறி நம்மை ஆசிர்வதித்து வருகிறார். பட்டுக்கோட்டையார் இன்று இல்லையென்றாலும் இந்த உலகில் கடைசி மனிதன் இருக்கும்வரை அவர் வாழ்வார்,” எனத் திருவாட்டி வானதி கூறியது அவையினரிடமிருந்து கரகோ‌‌ஷத்தைப் பெற்றது.

‘மனங்களை வென்ற மக்கள் கவிஞர்’ தலைப்பில் உரையாற்றிய திருவாட்டி வானதி பிரகாஷ்.
‘மனங்களை வென்ற மக்கள் கவிஞர்’ தலைப்பில் உரையாற்றிய திருவாட்டி வானதி பிரகாஷ். - படம்: மக்கள் கவிஞர் மன்றம்

ஏழைகள், உழைப்பாளிகள், பாட்டாளி மக்கள் அனைவரும் பட்டுக்கோட்டையாரை நேசித்ததற்குக் காரணம், மனத்தில் நினைத்ததை அவர் அப்படியே தம் பாட்டில் படம்பிடித்துக் காட்டினார் என்பதே ஆகும், என்றார் திருவாட்டி வானதி.

“ஏழ்மையில் தொடங்கி ஏக்கத்தில் முடியும் என்ற யதார்த்தத்தை அவர் காட்டினார்,” என்றார் அவர்.

நகைக்கடைக்குச் சென்றால் பலரது கண்களும் அடுத்தவர் என்ன நகையை வாங்குகிறார் என்பதில் குறியாக இருக்கும் வேளையில், கடையில் வாங்கமுடியாமல் நிற்பவர் பட்டுக்கோட்டையாரின் கண்களுக்குத் தெரிந்தது என்றார் திருவாட்டி வானதி.

அனாதைக் குழந்தையின் உணர்ச்சிகளையும் புரிந்துகொண்டவர் பட்டுக்கோட்டையார் என “அம்மா இருந்தால் பால் தருவாங்க, அனாதை அழுதால் யார் தருவாங்க” என்ற வரிகளைப் பற்றிக் கூறினார் திருவாட்டி பிரகாஷ். எனினும், ‘இவனாலும் அகிலத்தை ஆளமுடியும்’ என்பதைக் காட்ட “பேசாத நீதி நமக்காகப் பேசும்” என குழந்தை மனதில் வீர விதைகளை விதைத்ததைச் சுட்டினார்.

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, பட்டுக்கோட்டை பற்றி எழுதிய ‘கல்யாணப் பரிசு’ கவிதையைத் தன் பேச்சில் உட்புகுத்தினார் திருவாட்டி வானதி. ‘அவன் முனிவரோ முனைவரோ இல்லை, அவனைப் படித்தவர்கள் ஆனார்கள் முனைவர்கள்; அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை, பல்கலைக்கழகம் படிக்கிறது அவனை’ என்ற வரிகளைக் கூறினார்.

சிறப்பு விருந்தினரான வளர்தமிழ் இயக்கத் துணைத் தலைவர் ஜோதி மாணிக்கவாசகம், “தீபாவளியன்று நாம் மட்டுமன்றி, நம் சுற்றத்தினரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை ‘உன்னைக் கண்டு நானாட’ பாடல்வரிகளில் அழகாக உணர்த்தியுள்ளார்,” என்றார்.

சிறப்பு விருந்தினர் ஜோதி மாணிக்கவாசகத்துக்கு மக்கள் கவிஞர் மன்றம் விருது வழங்கிச் சிறப்பித்தது.
சிறப்பு விருந்தினர் ஜோதி மாணிக்கவாசகத்துக்கு மக்கள் கவிஞர் மன்றம் விருது வழங்கிச் சிறப்பித்தது. - படம்: மக்கள் கவிஞர் மன்றம்

பட்டுக்கோட்டையாரின் ‘திருடாதே! பாப்பா திருடாதே’ பாடலைச் சுட்டி, பாலர் பருவத்திலேயே தீய பழக்கங்களைத் தவிர்க்க எடுத்துச் சொல்ல வேண்டும் என்றார் திரு மாணிக்கவாசகம்.

பட்டுக்கோட்டையாரின் பாடல்களுக்கு முழுவடிவம் கொடுத்தவர் மறைந்த திரு அப்துல் கலாம் என்றார் அவர். “தூங்காதே, தம்பி தூங்காதே” பாடல் வரிகளின் செய்தி அப்துல் கலாமின் “தூங்க விடாமல் செய்வதே கனவு” என்ற வார்த்தைகளில் உள்ளதாகக் கூறினார்.

வரவேற்புரையாற்றிய மக்கள் கவிஞர் மன்றத் தலைவர் திருவாட்டி புவனேஸ்வரி, எம்ஜிஆரின் ‘நாடோடி மன்னன்’ பட வெற்றிக்குப் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்வரிகள் வித்திட்டது என்றார்.

வரவேற்புரையாற்றிய மக்கள் கவிஞர் மன்றத் தலைவர் திருவாட்டி புவனேஸ்வரி.
வரவேற்புரையாற்றிய மக்கள் கவிஞர் மன்றத் தலைவர் திருவாட்டி புவனேஸ்வரி. - படம்: மக்கள் கவிஞர் மன்றம்

அவ்வரிகளால் அப்படம் பட்டி தொட்டியெங்கும் பரவி சாதாரண மக்களை சிந்திக்க வைத்ததோடு எம்ஜிஆர் அவர்கள் அரியணை ஏறவும் வழி வகுத்தது. எனவே எம்ஜிஆர், ‘என் முதல்வர் நாற்காலியில் ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற கவிஞன் உடையது’ என்று தான் முதல்வராக பொறுப்பு ஏற்றபிறகு சொன்னார். ஆகவே ஒரு நடிகரைத் தன் பாட்டு திறத்தால் கோட்டைக்கு அனுப்பிய பெருமை மக்கள் கவிஞரைச் சாரும். எனவே பட்டுக்கோட்டை பாட்டுக்கோட்டையானார் என்றும் தன் பாட்டால் உயர்ந்து கோட்டையானார் என்றும் மக்கள் சிலாகித்து போனார்கள்,” என்றார் திருவாட்டி புவனேஸ்வரி.

அக்டோபர் 5ஆம் தேதி நடந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தொடர்பான கட்டுரைப் போட்டியும் பெரியவர்களுக்காக நடத்தப்பட்டது. அதில் முதல் நிலையில் வந்தார் சி.கருணாகரசு.

மக்கள் கவிஞர் மன்றம் நடத்திய கட்டுரைப் போட்டியில் முதல் பரிசைப் பெற்ற சி கருணாகரசு.
மக்கள் கவிஞர் மன்றம் நடத்திய கட்டுரைப் போட்டியில் முதல் பரிசைப் பெற்ற சி கருணாகரசு. - படம்: மக்கள் கவிஞர் மன்றம்

சென்ற ஆண்டு மக்கள் கவிஞர் மன்றத்தின் உழைப்பாளர் விருதை வென்ற சின்னதுரை சதீஷ், தன் மனைவி ராமதாஸ் விமலா, நண்பர் சுப்பையா சித்திரவேல் உடன் போட்டியில் பங்குபெற்றார். விமலா ஒன்பதாம் நிலையிலும் சதீஷ் ஆறாம் நிலையிலும் வந்தனர்.

“பட்டுக்கோட்டையார் பிறந்த அதே தஞ்சாவூர் மாவட்டத்தில்தான் நானும் பிறந்தேன். பட்டுக்கோட்டை அருகில்தான். அப்படியொரு பெருந்தலைவர் நமக்கு இவ்வளவு நெருக்கமாக இருக்கும்போது நாம் அவரை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்,” என்றார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரான சதீஷ், 33.

தம் நண்பர்களுடன் சின்னதுரை சதீஷ் (வலமிருந்து மூன்றாவது), ராமதாஸ் விமலா தம்பதியர்.
தம் நண்பர்களுடன் சின்னதுரை சதீஷ் (வலமிருந்து மூன்றாவது), ராமதாஸ் விமலா தம்பதியர். - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்
பட்டுக்கோட்டைபாடல்நினைவு நாள்