பெங்களூரிலிருந்து லண்டனுக்கு காரில் பறந்த முதியவர்

70 வயதில் எல்லைகளைக் கடந்த லட்சியப் பயணம்

பெங்களூரிலிருந்து லண்டனுக்கு காரில் பறந்த முதியவர்

1 of 3
படம்: சேகர்
படம்:சேகர்
படம்: சேகர்

27 Sep 2026 - 7:00 am

4 mins read
காரிலேயே பெங்களூரிலிருந்து லண்டன் வரை பயணம் செய்து சாதனை படைத்த தாத்தா சேகர் நாராயணனை வரவேற்க சாங்கி அனைத்துலக விமான நிலையத்தில் காத்திருந்தார் பிரகலாத் ஹரிஹரன்.
காரிலேயே பெங்களூரிலிருந்து லண்டன் வரை பயணம் செய்து சாதனை படைத்த தாத்தா சேகர் நாராயணனை வரவேற்க சாங்கி அனைத்துலக விமான நிலையத்தில் காத்திருந்தார் பிரகலாத் ஹரிஹரன். - படம்: சேகர்

வயது என்பது வெறும் எண்தான் என்பதை உரக்கச் சொல்லும் வகையில், 70 வயது திரு சேகர் நாராயணன் தமது காரிலேயே பெங்களூரிலிருந்து லண்டன்வரை பயணம் செய்து சாதனை படைத்துள்ளார். 

இதன்மூலம் இவரது 15 ஆண்டுகாலக் கனவு நனவானது. ஏறத்தாழ 25,000 கிலோமீட்டர் தொலைவைக் கடக்க அவருக்கு கிட்டத்தட்ட 75 நாள்கள் ஆயின.  

பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட திரு சேகர், வியப்பு விலகாத பார்வையுடன், மகிழ்ச்சி மேலோங்க தம் கனவைத் தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டார். 

‘‘2012-13ல் ஃபேஸ்புக்கில் லண்டன் செல்வது குறித்த ஒரு பதிவை படித்ததிலிருந்து அந்த ஆசை எனக்குள் துளிர்விடத் தொடங்கியது. விசா, அனைத்துலக ஓட்டுநர் அனுமதி, காருக்கான விசாவான ‘கார்னெட்’ என அனைத்திற்கும் முறைப்படி ஏற்பாடு செய்து பயணத்திற்கு ஆயத்தமானேன்,” என்று இவர் சொன்னார். 

நேப்பாளத்தின் லும்பினியில், புத்தர் பிறந்த மண்ணை தரிசித்தபடி எல்லையைக் கடந்து லண்டனை நோக்கி பயணப்பட்டார் திரு சேகர்.

திபெத், சீனா, கஸக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஜார்ஜியா, துருக்கி, கிரீஸ் என 30க்கும் மேற்பட்ட நாடுகளை கடந்து லண்டன் டவர் பாலத்தில் இந்திய தேசியக் கொடியுடன் கம்பீரமாக நின்ற தருணத்தை அடைவதற்கு அவர் கடந்த வந்த பாதைகள் ஏராளம். 

உறைபனியில் ஓர் இரவு; காருக்கும் மூச்சுத்திணறல்

இந்த நெடும்பயணத்தின்போது தாம் எதிர்கொண்ட சவால்களை விவரித்தார் திரு சேகர்.

‘‘இந்த சாதனைப் பயணத்தின் மிகக் கடுமையான பகுதி திபெத்தான். 5,000 மீட்டர் உயரத்தில் மனிதருக்கு மட்டுமல்ல, பல மேடுகளில் ஏறி இறங்கியதால் எனது காருக்கும் மூச்சுத் திணறியது,’’ என்று சிரித்தவாறே கூறினார்.  

ஏறக்குறைய 600 கிலோமீட்டார் தொலைவிற்கு சாலை சீரமைப்புப் பணிகள் நடந்ததால், மணிக்கு 14 கி.மீ. வேகத்தில்தான் செல்ல முடிந்தது. இதற்கிடையே, லாரி ஒன்று சேற்றில் சிக்கிக்கொண்டதால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத சூழல். 

“அந்த இடத்தின் தட்பவெப்பமும் பூஜ்ஜியத்திற்கு கீழே சென்றதால் உறைபனியில் காரிலேயே ஒரு இரவை கழிக்க வேண்டியதாயிற்று,’’ என்று திரு சேகர் நினைவுகூர்ந்தார்.

‘‘என் பயணத்தின் தொடக்கமாக நேப்பாள நாட்டின் குடிநுழைவு, சோதனைச்சாவடியில் வெகுநேரம் காத்திருந்தேன். ஆனால், அண்மையில் அந்த பகுதி வெள்ளத்தில் மூழ்கி, தடம் தெரியாமல் மறைந்துபோனதை நினைக்கையில் மனம் கலங்குகிறது,’’ என்று கூறி, நெஞ்சுருகினார்.

மொழி கடந்த மனிதநேயம்

லண்டனுக்கு புறப்பட்ட வழியில் கிடைத்த பல அனுபவங்கள் வாழ்வில் என்றுமே நிலைத்திருக்கும் நினைவுகளை கொடுத்ததாகக் கூறிய திரு சேகர், அவற்றையும் விவரித்தார்.

அயல்நாட்டில் அந்நியரும் தமக்கு விருந்தோம்பியதாகக் கூறிய திரு சேகர் நாராயணன், அந்த அன்புக்கு விலையில்லை என்றார்.
அயல்நாட்டில் அந்நியரும் தமக்கு விருந்தோம்பியதாகக் கூறிய திரு சேகர் நாராயணன், அந்த அன்புக்கு விலையில்லை என்றார். - படம்: சேகர்

“பயணத்தின்போது ஒருநாள் தாஷ்கண்டில் கார் பழுதாகிவிட்டது.  வாகனக் கோளாறு ஒருபுறம், பசி மறுபுறம். நான் சைவ உணவு மட்டுமே சாப்பிடுவேன். இதற்கிடையே, மொழி தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கையில், அங்கிருந்த உணவக உரிமையாளர் ஒருவர் கஞ்சி, ரொட்டி கொடுத்து விருந்தோம்பினார். 

‘‘உணவிற்கு எவ்வளவு பணம் நான் செலுத்தவேண்டும் என்று அவரிடம் கேட்டபோது, ‘டிரான்ஸ்லேட்டர்’ எனும் மொழிபெயர்ப்புச் செயலியில் ‘நீங்கள் எங்கள் விருந்தினர், அன்பிற்குக் கட்டணம் இல்லை’ என்று எழுதிக் காட்டினார். நாடுகடந்தும் நான் கண்ட அந்த  விருந்தோம்பலை விவரிக்க வார்த்தையே இல்லை,’’ என்று திரு சேகர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

‘‘அதேபோல் கிரீஸ் நாட்டில் ‘வைட் டவர்’ எனும் இடத்தில்  எனது பயணப்பெட்டியை மறந்து வைத்துவிட்டுச் சென்றுவிட்டேன். ஏறத்தாழ 55 கி.மீ. சென்றபிறகுதான் பெட்டி வாகனத்தில் இல்லை என்பதை அறிந்தேன்.

‘‘எனினும், விரைந்து அந்த இடத்திற்கு மீண்டும் சென்றபோது, அந்தப் பெட்டி அப்படியே இருந்தது. மனிதம் இன்னும் வாழ்கிறது என்பதற்கு இவையெல்லாம் சான்றுகள்,’’ என்கிறார் இவர்.

எப்படியோ பல சவால்களைக் கடந்து பயண இலக்கான லண்டனை அடைந்தபோது, நெஞ்சில் துணிவும் அர்த்தமிகு கனவும் இருந்தால் எந்த வயதிலும் சாதனைகளை எட்டலாம் என்பதே தன் மனத்தில் உரக்க ஒலித்ததாக இம்முதிய இளையர் கூறினார்.

கணவர் வெற்றியுடன் திரும்பியது மகிழ்ச்சி அளித்தாலும் திருமணமாகி பல ஆண்டுகளில் இத்தனைக்காலம் கணவரைப் பிரிந்திருந்தது இப்போதுதான் என்று குறிப்பிட்டார் திருவாட்டி பார்வதி சேகர், 66. 

கணவரின் ஆசையை அறிந்தவுடன் அனுமதி வழங்கிவிட்டாலும் அவரை நேரில் காணும் நாளுக்காக ஆவலுடன் காத்திருந்ததாக சொன்னார் அவர். 

‘‘உடல்நலம் ஒத்துழைத்திருந்தால் நானும் அவருடன் சென்றிருப்பேன். ஆனால், மீண்டும் இப்படி ஒரு பயணத்திற்கு என்னிடமிருந்து அவருக்கு அனுமதி கிடைப்பது சந்தேகம்தான்,’’ என்று சிரித்தவாறே அவர் சொன்னார்.

காரிலேயே பெங்களூரிலிருந்து லண்டன் வரை பயணம் செய்து சாதனை படைத்த திரு சேகர் நாராயணனை வரவேற்க அவரது பள்ளிவகுப்புத் தோழர்கள் சாங்கி அனைத்துலக  விமான நிலையத்திற்கு வாழ்த்துப் பதாகைகளுடன் வருகைபுரிந்திருந்தனர்.
காரிலேயே பெங்களூரிலிருந்து லண்டன் வரை பயணம் செய்து சாதனை படைத்த திரு சேகர் நாராயணனை வரவேற்க அவரது பள்ளிவகுப்புத் தோழர்கள் சாங்கி அனைத்துலக விமான நிலையத்திற்கு வாழ்த்துப் பதாகைகளுடன் வருகைபுரிந்திருந்தனர். - படம்: சேகர்

இதற்கிடையே, சிங்கப்பூரில் இருக்கும் திரு சேகரின் மகள் அர்ச்சனா கோமதி, 37, லண்டனில் இருந்து வீடு திரும்பிய அப்பாவை வரவேற்க, அப்பாவின் பள்ளிவகுப்புத் தோழர்களை சாங்கி விமான நிலையத்திற்கு வரவழைத்திருந்தார்.

‘‘அப்பாவுக்கு அது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. என்றாலும் அப்பாவைக் கொண்டாட இந்த பயணம் என்பதைக் கடந்து பல விஷயங்கள் உள்ளன. குறிப்பாக, என் அப்பா 40 ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணியவாதி; பிள்ளைகளுக்குப் பாட்டிகளின் பெயரைச் சூட்டி அழகுபார்த்தவர்.

‘‘அம்மாவுடன் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்வதில் முன்னோடி. என் தந்தையின் நற்பண்புகளுக்கு அவரை ஒவ்வொரு நாளும் கொண்டாடவேண்டும்,” என்று பெருமிதத்துடன் கூறினார் திருவாட்டி அர்ச்சனா. 

குறிப்புச் சொற்கள்
சாதனைமூத்தோர்லண்டன்இந்தியர்