“பிறந்த ஊர் பள்ளிவாசலுக்குப் போய் ஒரேயொரு முறையாவது தலைசாய்க்க மனசு தவிக்குதுமா,” என்று மெல்லிய குரலில் 96 வயது திரு வாஞ்சூர் பக்கிர் ஜஹபர் பேசும்போது, அவரது வார்த்தைகளில் எண்பது ஆண்டுகால ஏக்கமும் தாய்மண்ணின் நினைவுகளும் உறைந்து கிடக்கின்றன.
தன் வாழ்நாளின் பெரும்பகுதியைச் சிங்கப்பூரிலேயே கழித்திருந்தாலும், ‘கடப்பிதழ்’ (Passport) என்ற ஒற்றை ஆவணம் இல்லாததால், கடந்த 80 ஆண்டுகளாகச் சிங்கப்பூர் எல்லையைத் தாண்ட முடியாமல், ‘நாடற்றவராக’ தன் இறுதி நாள்களைக் கடந்து வருகிறார் இந்த முதியவர்.
நாகையிலிருந்து சிங்கப்பூர்: அடையாள ஆவணத்துடன் முடங்கிய வாழ்க்கை
கடந்த 1940களில், தனது 10வது வயதில் இந்தியாவின் நாகூரிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தார் திரு ஜஹபர்.
அன்று முதல் இன்று வரை, அதாவது சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் சிங்கப்பூர் எல்லையைத் தாண்டி எங்கும் செல்லவில்லை. அவரிடம் இருப்பது அடையாளச் சான்றிதழ் (Certificate of Identity) எனும் ஒற்றை ஆவணம் மட்டும்தான்.
நாடில்லாதோருக்காகச் சிங்கப்பூர் அரசு வழங்கும் அந்த ஆவணத்தை 1960, 1970 மற்றும் 1990ஆம் ஆண்டுகளில் சில முறை புதுப்பித்ததாகத் திரு ஜஹபருக்கு மங்கலான நினைவுகள் மட்டுமே உள்ளன.
வயது மூப்பின் காரணமாக அதற்குமேல் அவரால் தகவல்களைத் தெளிவாகக் கூற இயலவில்லை.
தணிந்துபோன ஏக்கங்கள், கடந்துபோன காலங்கள்:
முயற்சிகள் தோற்றன; காலம் ஓடியது. “ஏன் இத்தனை ஆண்டுகளில் ஒரு கடப்பிதழைக் கூடப் பெற முடியவில்லை,” என்ற கேள்விக்கு, திரு ஜஹபரின் ஒரே மகளான திருவாட்டி பத்துமால் கனி, 52 கண்ணீர் மல்க பதிலளித்தார்.
“சான்றிதழைப் புதுப்பித்துக் கடப்பிதழைப் பெறுவதற்காகப் பலமுறை குடிநுழைவு ஆணையம், தூதரகம் உள்ளிட்டவற்றை நாடினோம்.
தொடர்புடைய செய்திகள்
‘‘ஆனால், எந்தவொரு முயற்சியும் கைகூடவில்லை. சிறு வயதிலேயே சிங்கப்பூருக்கு வந்துவிட்டதால், அப்பாவிடம் போதிய ஆவணங்கள் இல்லை.
ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு காரணத்திற்காகத் திருப்பி அனுப்பிவிடப்பட்டார் அவர். ஒருகட்டத்தில் விரக்தியடைந்து அப்பா அந்த முயற்சியையே கைவிட்டுவிட்டார்,” என்றார் அவரது மகள்.
திருமணத்திற்குப் பிறகு சிங்கப்பூர் நிரந்தரவாசம் கிடைக்க, அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்காக வேலை, குடும்பம் என ஓடிய ஓட்டத்தில், கடப்பிதழ் வாங்க வேண்டும் என்ற அப்பாவின் தீவிர ஆசை அப்படியே மங்கிப்போனதாகக் குறிப்பிட்டார் பத்துமால்.
குடியுரிமை இல்லாததால் கிடைக்காத சலுகைகள்: பராமரிப்பில் சவால்கள்
திருவாட்டி பத்துமால், அவரது தாயார் ஆகியோர் சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்தவர்கள். இருப்பினும், குடும்பத் தலைவரான திரு ஜஹபருக்குச் சிங்கப்பூர் குடியுரிமை கிடைக்கவில்லை.
அப்பா சிங்கப்பூர் குடிமகனாக இல்லாததால், வயது மூப்படைந்த அவருக்குத் தேவையான அநேக அரசாங்க நிதி உதவிகளைப் பெற முடியவில்லை என மகள் வருந்துகிறார்.
“அப்பாவுக்கு இப்போது செவித்திறன் மிகவும் குறைந்துவிட்டது. அவருக்கான காதுகேட்கும் சாதனம் வாங்குவது தொடங்கி, முழுநேரப் பராமரிப்பு வரை ஒவ்வொன்றுக்கும் பெரும் பொருட்செலவாக இருக்கிறது.
‘‘ஒருவேளை அவர் ஒரு சிங்கப்பூரராக இருந்திருந்தால் நிலைமை அவருக்கு ஆதரவாக அமைந்திருக்கும். ஆனால், மலிவாகக் கிடைத்திருக்கக்கூடிய மருத்துவ நிதியுதவிகள் எதையும் பெற்றுப் பயனடைய முடியாத சூழலில் வசித்து வருகிறார் அப்பா.
‘‘மேலும் குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் ‘போதிய ஆவணங்கள் இல்லை’ எனக் கூறி நிராகரிக்கப்பட்டுவிட்டன,” எனவும் திருவாட்டி பத்துமால் விவரித்தார்.
அப்பா பாசத்தால் வேலையிழந்த மகள்
ஒருபுறம் வயதான தந்தையைக் கவனிக்க வேண்டிய குடும்பப் பொறுப்பு, அதனால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளியல் சுமை.
மறுபுறம் தந்தையின் வாழ்நாளுக்குள் அவருக்கு எப்படியாவது குடியுரிமையையும் கடப்பிதழையும் வாங்கிக் கொடுத்து, ஒருமுறையாவது அவர் ஆசைப்படும் ஊருக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற ஏக்கம் திருவாட்டி பத்துமாலுக்கு உண்டு.
“அப்பாவைப் பார்த்துக்கொள்ளக் கட்டணம் செலுத்திப் பராமரிப்பாளரை அமர்த்த வழி இல்லை. இதனால் என்னால் முழுநேர வேலைக்கும் செல்ல இயலவில்லை; அப்பாவை பார்க்கும் பொறுப்பைத் தட்டிக் கழிக்கவும் எண்ணமில்லை.
‘‘பலமுறை அப்பாவை பார்த்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளித்ததால், இருந்த வேலையும் போய்விட்டது. ஆனாலும், அவரைப் பராமரிப்பது என் கடமை என்பதால் முயற்சிகள் எதையும் கைவிடவில்லை,” என்றார் அவர்.
சிறப்பு கோரிக்கையாகக் கருதக் கூடாதா?
கடப்பிதழ் இல்லையென்றாலும், மூப்படைந்த அப்பாவின் மருத்துவச் செலவுகளுக்கு இடையூறு வராதபடி, அவர் சிங்கப்பூருக்கு வந்த காலச் சூழலைக் கருத்தில்கொண்டு, முறையான மருத்துவச் சிகிச்சைகள் பெற வழிவகுக்கும் ஒரு சிறப்பு உதவியோடு, அதற்கான அடையாள அட்டை கிடைத்தால்கூட தங்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும் என்கிறார் திருவாட்டி பத்துமால்.
“அப்பாவுக்குக் காது சரியாகக் கேட்காததால், ஒவ்வொரு முறையும் நான் சத்தமாகப் பேசிப் பேசி என் தொண்டையே வலிக்கிறது.
இத்தனை முறையீடுகள் செய்யப்பட்டும், அப்பாவின் வயதையும் நிலையையும் கருத்தில்கொண்டு, அதிகாரிகள் இதை ஒரு ‘சிறப்பு விண்ணப்பமாக’ ஏன் கருதக்கூடாது?
‘‘காலம் எங்களுக்குத் துணை செய்யவில்லையே என்று யோசித்தால் மனதும் வலிக்கிறது,” என்று கூறியவாறே, தனது 96 வயது தந்தையை மெதுவாகத் தாங்கிப் பிடித்தபடி, தேக்காவிற்குச் செல்லும் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார் திருவாட்டி பத்துமால் கனி.
மனிதநேயத்தின் முன்னால் காலம் இவர்களுக்கான பதிலை எப்போது தரும் என்பதே இப்போதைய கேள்வி.

