டாக்டர் அப்துல் கலாம் மறைந்த தினமான ஜூலை 27ஆம் தேதி, ஸ்ரீ நாராயணமிஷனில் தங்கியுள்ள முதியோருக்கு ஆண்டுதோறும் அப்துல் கலாம் லட்சியக் கழகம் உணவு வழங்குவதுடன் சிங்கப்பூரில் ஏதேனும் ஒரு பகுதியில் துப்புரவு செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகிறது.
அவ்வகையில் கடந்த ஜூலை 27ஆம் தேதி, இந்திய மரபுடைமை நிலையத்தின் முகப்பில் துப்புரவுப் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
டாக்டர் அப்துல் கலாமின் திருவுருவப்படம், இந்திய மரபுடைமை நிலையத்தின் முகப்பில் மாலை மரியாதையுடன் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியைப் பற்றிய அறிவிப்பை அப்துல் கலாம் லட்சியக் கழகம் முன்னதாகவே அறிவித்ததால், கிட்டத்தட்ட 60 தொண்டூழியர்கள் இதற்கெனப் பதிவு செய்ததுடன் அனைவரும் காலை எட்டு மணிக்கே கூடிவிட்டார்கள்.
டாக்டர் அப்துல் கலாமின் படத்தைப் பார்த்து, பொதுமக்களும் வந்து மலர் தூவி மரியாதை செய்தது அனைவரையும் நெகிழவைத்தது.
தேசிய சுற்றுப்புற வாரியம் இந்தப் பணிக்காகக் குப்பையை எடுக்கும் இடுக்கி, நெகிழிப்பைகள், கையுறைகள் ஆகியவற்றை வழங்கி உதவியது.
முன்னதாக, கழகத்தின் முன்னாள் தலைவர் தூதர் கேசவபாணி, டாக்டர் அப்துல் கலாமின் சிறப்புகளைப் பற்றியும், துப்புரவுப் பணியின் அவசியத்தைப் பற்றியும் பேசினார்.
அப்துல் கலாம் மாணவர்களிடம் எத்தகைய நம்பிக்கையை வைத்திருந்தார் என்பதைத் தற்போதைய தலைவர் திரு அமீரலி எடுத்துரைத்து, துப்புரவு செய்ய வந்திருந்த மாணவர்கள் அனைவருக்கும் கல்வி உபகார நிதி தமது பொறுப்பில் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
காலை மற்றும் மதிய உணவை கலாம் மார்ட் வியாபார நிறுவனத்தின் நிறுவனரும், அப்துல் கலாம் லட்சியக் கழகத்தின் செயலாளருமான திரு ஜான் ராமமூர்த்தி வழங்கினார்.
தேக்கா பகுதி 12 உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் ஐந்து தொண்டூழியர்களென பிரிக்கப்பட்டு, துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது. நண்பகல் 12 மணிவரை இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, எல்லாக் குப்பைகளும் அடங்கிய நெகிழிப்பைகள் மரபுடைமை நிலையத்தின் முன்பகுதியில் வைக்கப்பட்டன.
ஆயிரக்கணக்கான சிகரெட் துண்டுகள் சேகரிக்கப்பட்டது அதிர்ச்சியைத் தந்தது. பிறகு குப்பைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன.
இறுதியாக, மரபுடைமை நிலையத்தின் இரண்டாவது தளத்தில் அனைவரும் ஒன்றுகூடி கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.
அங்கு வந்திருந்த 13 மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கியதுடன், அனைவரும் அப்துல் கலாமின் லட்சியத்தை அடையப் பாடுபடவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் திரு அமீரலி.

