கழிவு அட்டைகளைக் கொண்டு கலைப்படைப்பு ஒன்றினை வடிவமைத்து சிங்கப்பூர் சாதனை புத்தகத்தின் வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர் தமிழர்கள்.
சிங்கப்பூரின் 61வது தேசிய தினத்தை முன்னிட்டு, பொறியியல் துறையில் பணியாற்றி வரும் 9 தமிழர்கள், மறுசுழற்சி செய்யப்பட்ட அட்டைகளைக்கொண்டு சிங்கப்பூரின் பிரபல அடையாளச் சின்னங்களாக விளங்கும் கட்டடங்களைக் கலைப்படைப்பாகப் படைத்துள்ளனர்.
சிங்கப்பூர் ராட்டினம், மெர்லயன், 1986இல் சரிந்த ஹோட்டல் நியூ வொர்ல்ட் ஆகிய சின்னங்களை அட்டைகளால் வடிவமைத்து, ‘அட்டைகளால் வடிவமைக்கப்பட்ட ஆகப் பெரிய கலைப்படைப்பு’ என்ற பெருமையை அவர்கள் பெற்றனர். அந்தப் படைப்பு 6.7 மீட்டர் நீளமும் 2.4 மீட்டர் உயரமும் கொண்டது.
ஆகஸ்ட் 3ஆம் தேதி சிட்டி ஸ்குவேர் கடைத்தொகுதியில் அந்தக் கலைப்படைப்பு படைக்கப்பட்டது. சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தின் தலைவரான திரு ஓங் எங் ஹுவாட் அந்த சாதனையை அங்கீகரித்துப் பங்கேற்றோருக்குச் சான்றிதழ்களை வழங்கினார். அப்படைப்பு ஆகஸ்ட் 15 வரை சிட்டி ஸ்குவேர் கடைத்தொகுதியின் நான்காம் தளத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.
“சிங்கப்பூரின் வளர்ச்சியை முக்கியச் சின்னங்கள்வழி எடுத்துக்காட்டும் இப்படைப்பு மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டே வடிவமைக்கப்பட்டதால் நீடித்த நிலைத்தன்மையின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது,” என்றார் திரு ஓங்.
2025இல் சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு, கல் உப்பால் செய்யப்பட்ட ஆகப் பெரிய கலைப்படைப்பை உருவாக்கி சிங்கப்பூரில் சாதனை படைத்தவர் 28 வயது முருகன் ஜனனி. இவ்வாண்டு, தம் நண்பர்களுடன் இணைந்து ஒரே வாரத்தில் இந்தச் சாதனையை முன்னெடுத்துப் படைத்துள்ளார் அவர்.
சிங்கப்பூரில் ஓராண்டிற்குக் கிட்டத்தட்ட 7.2 மில்லியன் டன் கழிவுகள் உருவாகின்றன. அதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே அந்தப் படைப்பின் முக்கிய நோக்கமாகும். வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், கடைகள் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட அட்டைகளைக் கொண்டு அப்படைப்பு உருவாக்கப்பட்டது.
“ஹோட்டல் நியூ வொர்ல்ட் கட்டடச் சரிவில் உயிரிழந்தோரின் நினைவாகவும் நாங்கள் இப்படைப்பைப் படைக்கிறோம். பொறியாளராக, இது போன்ற அசம்பாவிதங்களைத் தடுப்பது எங்கள் கடமை என்றும் இப்படைப்புவழி வெளிக்கொணர்கிறோம்,” என்றார் திருவாட்டி ஜனனி.
“ஒரு வாழ்வாதாரம் தேடி சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்து வந்த எங்களுக்குச் சாதனை படைக்க ஒரு தளமாகத் திகழ்ந்து வருகிறது இந்நாடு. ஆகையால், இந்த நாட்டிற்கான எங்கள் நன்றியை நாங்கள் இந்தப் படைப்புவழி வெளிப்படுத்தி மகிழ்கிறோம்,” என்று பெருமிதம் கொள்கிறார் 32 வயது சாமிநாதன் திவாகர்.
கலைப்படைப்பிற்கு ஆதரவளித்து சாதனையில் பங்கு வகிக்கிறார் 55 வயது திருவாட்டி ஹாஃல் டேனியல் ராஜ்.
“புலம்பெயர்ந்து வந்து சிங்கப்பூருக்காக தங்கள் நன்றியைத் தெரிவிக்க விரும்புவோருக்கு ஒரு சிங்கப்பூரராக நாம்தான் முன்வர வேண்டும். திரு லீ குவான் யூ அனைவருக்கும் பாதுகாப்பான ஒரு நாடாகச் சிங்கப்பூரை வடிவமைத்துள்ளார். அதனை நாம் வழிநடத்திச் செல்ல வேண்டும்,” என்றார் திருவாட்டி ஹாஃல்.


