சிங்கப்பூரின் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தங்களது அலுவலகங்களை உணவு நன்கொடைச் சேகரிப்பு மையங்களாக மாற்ற வழிவகுக்கும் புதிய முன்னெடுப்பு ஒன்றைச் ‘சிங்கப்பூர் உணவு வங்கி’ (The Food Bank Singapore) தொடங்கியுள்ளது.
‘உணவு வங்கிப் பெட்டியைத் தத்தெடுங்கள்’ (’Adopt a Food Bank Box’) எனும் இப்புதிய திட்டம், இந்நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
சிறிய, நடுத்தர நிறுவனங்களின் சங்கம், தேசியத் தொண்டூழிய, அறக்கொடை நிலையம் ஆகியவற்றின் ஆதரவோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு இயக்கம், 2026 டிசம்பர் இறுதிவரை நடைபெறவுள்ளது.
இதன்மூலம் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை ஒருங்கிணைத்து எளிமையான முறையில் உணவுப் பொருள்களை நன்கொடையாக வழங்கலாம்.
கெட்டுப்போகாத நிலையில் உள்ள உணவுப் பொருள்களை நன்கொடையாக அளிக்க விரும்புவோர், தங்களது இல்லத்திலிருந்தோ அலுவலகச் சேமிப்பகத்திலிருந்தோ கொண்டுவந்து அங்கிருக்கும் தானப் பெட்டிகளில் சேகரித்து உதவலாம்.
சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சங்கத்தின் 40வது ஆண்டு நிறைவையும், தேசியத் தொண்டூழிய, அறக்கொடை மையத்தின் ‘நல்லோர் துணை’ (Company of Good) இயக்கத்தின் 10வது ஆண்டு நிறைவையும் குறிக்கும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது.
இது குறித்துப் பேசிய ‘சிங்கப்பூர் உணவு வங்கி’ அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஆர்தர் சின், “தேர்ந்தெடுக்கப்பட்ட பேரங்காடிகளில் ஏற்கெனவே உணவுகளைத் தானம் செய்யப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதே ஏற்பாட்டை நேரடியாகப் பணிபுரியும் இடத்திற்குக் கொண்டுசெல்வதே இத்திட்டத்தின் நோக்கம்,” எனக் குறிப்பிட்டார்.
இதன்வழி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பொது நோக்கம் ஒன்றிற்காக ஒருங்கிணைக்க முடியும் என்றும், அதிக நிறுவனங்கள் இதில் சேரும்போது சமூகத்தில் ஏற்படும் நற்பலன்கள் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், ‘கிவிங்.எஸ்ஜி’ (giving.sg) இணையத்தளத்தின் வழியாக 200 வெள்ளியை நன்கொடையாக வழங்க வேண்டும்.
நன்கொடையைப் பெற்றவுடன் ‘சிங்கப்பூர் உணவு வங்கி’ அமைப்பு, குறிப்பிட்ட நிறுவனத்தைத் தொடர்புகொண்டு நான்கு முதல் 10 உணவு தானப் பெட்டிகளை விநியோகிக்கும்.
ஒரு மாதகால அளவில், ஊழியர்கள் குறைந்தது எட்டு வாரம்வரை கெட்டுப்போகாத அரிசி, நூடல்ஸ், பாஸ்தா, சீரியல், பால், சமையல் எண்ணெய், பிஸ்கட் போன்ற அடிப்படை உணவுப் பொருள்களைப் பெட்டிகளில் நிரப்புவர்.
அதே வேளையில், உணவுப் பாதுகாப்பைக் கருதி காலாவதியானவை, திறக்கப்பட்ட உணவு வகைகள், உறையவைக்கப்பட்ட உணவு வகைகள், மதுபானங்கள் போன்றவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா.
ஒரு மாதத்தின் முடிவில், நிரப்பப்பட்ட பெட்டிகள் ‘கால் லேட் என்டர்பிரைசஸ்’ (Call Lade Enterprises) எனும் தளவாட நிறுவனத்தின் உதவியுடன் சேகரிக்கப்படும். தவிர, நிறுவனங்களே நேரடியாகச் ‘சிங்கப்பூர் உணவு வங்கி’யின் கிடங்கிற்குக் கொண்டுசென்றும் ஒப்படைக்கலாம்.
‘சிங்கப்பூர் உணவு வங்கி’யின் கிடங்கில் நடத்தப்படும் சுற்றுலா, தகவல் பகிர்வு நிகழ்ச்சி போன்றவற்றில் வருகையாளர்கள் இலவசமாகப் பங்கேற்று, சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்பு குறித்து மேலும் அறிந்துகொள்ள முடியும்.
சிறிய, நடுத்தர நிறுவனங்கள் வழங்கும் 200 வெள்ளி பங்களிப்பானது ‘சிங்கப்பூர் உணவு வங்கி’யின் அன்றாட இயக்கச் செலவுகளுக்குப் பயன்படுவதோடு, 250 விழுக்காடுவரை வரிக்கழிவிற்கும் தகுதி பெறுகிறது.
சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து அமைப்புகளும் இத்திட்டத்தில் பங்கேற்கத் தகுதி பெற்றவை என்பதால், ஆர்வமுள்ள நிறுவனங்கள் சிறிய, நடுத்தர நிறுவனச் சங்கத்தின் அதிகாரபூர்வ இணையப்பக்கம் வழியாக இதில் இணையலாம்.

