மாற்றுத்திறனாளிகளின் வாழ்நாள் கற்றல், திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புப் பாதைகளை வலுப்படுத்துவதற்காகப் பல்வேறு புதிய திட்டங்களும் சீர்திருத்தங்களும் திங்கட்கிழமை (அக்டோபர் 12) அறிவிக்கப்பட்டன.
அவற்றில் ஒன்றாக, மாற்றுத்திறனாளிகளுக்கான தொடர் கல்வி, பயிற்சிக்கான ஆலோசனைக் பணிக்குழுவையும் எஸ்ஜி எனேபல் நிறுவியுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்குப் பொருத்தமான துறையில் வழங்கப்படும் தொடர் கல்வி, பயிற்சி தொடர்பான திட்டமிடல், பயிற்சியின் தரம், செயலாக்கக் கட்டமைப்பு, செயல்திறன் குறித்து எஸ்ஜி எனேபலுக்கு உத்திபூர்வமான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்குவதில் இக்குழு முக்கியப் பங்கு வகித்து ஆதரவளிக்கும்.
பராமரிப்பாளர்கள், சமூகச் சேவை நிறுவனங்கள், உளவியலாளர்களை உள்ளடக்கிய இக்குழு உறுப்பினர்கள், 2026 செப்டம்பர் 1 முதல் 2028 மார்ச் 31 வரை நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனேபலிங் வில்லேஜில் திங்கட்கிழமை நடைபெற்ற அனைவரையும் உள்ளடக்கிய வாழ்நாள் கற்றல் விழாவில் கலந்துகொண்டு இத்திட்டங்களைப் பற்றி விளக்கினார் கல்வி, தேசிய வளர்ச்சி அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சையது ஹருன் அல்ஹப்ஷி.
எஸ்ஜி எனேபல், திறன், ஊழியரணி மேம்பாட்டு அமைப்பு, வாழ்நாள் கற்றல் சிங்கப்பூர் அமைப்பு ஆகியவை இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தன.
நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் சையது ஹருன், மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய சமுதாயத்தை அமைப்பது தற்செயலாக நடந்துவிடாது என்றார். ஒவ்வொரு நபருக்கும் கற்றுக்கொள்ளவும் வளரவும் பங்களிக்கவும் வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கையில் அது தொடங்குகிறது என்றும் குறிப்பிட்டார்.
இக்குழுவிற்கு இணைந்து தலைமை தாங்கும் நபர்களில் ஒருவர் எஸ்ஜி எனேபல் அமைப்பின் எனேபலிங் பயிற்சிக் கழக இயக்குநர் ப. நிர்மலா, 58.
“தற்போதைய பயிற்சிச் சூழல் ஒன்றிணைக்கப்பட்டதாக இல்லை. பல்வேறு பயிற்சி நிறுவனங்கள் தங்களின் சொந்த, தங்களுக்குத் தெரிந்த சிறந்த முறையின் அடிப்படையில் பயிற்சியை வழங்குகின்றன. கட்டமைப்பு ஒன்றிணைக்கப்பட்டு சீரானதாக இருப்பதை உறுதிசெய்ய அனைவரையும் ஒன்றிணைப்பது எங்கள் நோக்கமாகும்,” என்றார் திருவாட்டி நிர்மலா.
மற்ற முயற்சிகளில், துறைசார் பயிற்சி வேலைவாய்ப்புத் திட்டமும் அடங்கும்.
மாற்றுத்திறனாளிகளுக்குத் திறன் பயிற்சியிலிருந்து வேலைவாய்ப்பிற்குச் செல்வதற்கான மிகவும் கட்டமைக்கப்பட்ட பாதையை வழங்குவது இதன் நோக்கம்.
இத்திட்டம் பங்கேற்பாளர்கள் பல்வேறு துறைகளை ஆராயவும், தொழில்துறையின் தேவைகளுக்கேற்ப திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உதவுகிறது.
கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்குத் திறன் பயிற்சியிலிருந்து வேலைவாய்ப்பிற்குச் செல்வதற்கான மிகவும் கட்டமைக்கப்பட்ட பாதையை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட முன்னோட்டமாகச் செயல்படுத்தப்பட்டது இத்திட்டம்.
பயிற்சிச் செலவுகளைக் குறைக்கவும் மாற்றுத்திறனாளிகளுக்கு பாடநெறிகளை எளிதில் அணுகக்கூடியதாக மாற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எஸ்ஜி எனேபல் ஆதரவுபெற்ற பாடநெறிகளைத் தாண்டி மானியத்தை விரிவுபடுத்தும் வகையில், தகுதியான பிரதான பயிற்சிப் பாடநெறிகளில் சேரும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தனது 95 விழுக்காட்டுப் பாடநெறிக் கட்டண மானியத்தை எஸ்ஜி எனேபல் நீட்டிக்கும்.
“இதன் மூலம் செலவு ஒரு தடையாக இல்லாமல், கூடுதலான மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள முடியும்,” என்று டாக்டர் சையது ஹருன் கூறினார்.
