கைபேசித் திரைகளுக்குள் சுருங்கிவரும் மனித உறவுகளுக்கு நடுவே, அன்பும் மனிதநேயமும் நம்மை மீண்டும் இணைக்க முடியும் என்பதை மேடையில் உணர்த்தியது ‘அகப்பே – த ஹியூமன் கனெக்ஷன்’ நடன நிகழ்ச்சி.
கிரேக்க மொழியில் ‘அகப்பே’ என்பது உலகளாவிய அன்பையும் உயர்ந்த மனிதநேயத்தையும் குறிக்கிறது. அந்தக் கருத்தை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த நடன, இசை நாடகம், அப்சராஸ் ஆர்ட்ஸ் நடன நிறுவனத்தின் 50ஆம் ஆண்டு பொன்விழாக் கொண்டாட்டங்களின் தொடக்கமாக ஆகஸ்ட் 21, 22ஆம் தேதிகளில் எஸ்பிளனேட் அரங்கில் அரங்கேறியது.
சிங்கப்பூர் பல்லிசைக் குழுவின் 65 இசைக் கலைஞர்கள், சிங்கப்பூர், இந்தியாவைச் சேர்ந்த முன்னணி இந்தியப் பாரம்பரிய இசைக் கலைஞர்கள், பாடகர்கள் ஆகியோருடன் 10 நடனக் கலைஞர்களும் ஒரே மேடையில் இணைந்தனர்.
75 நிமிடங்கள் நீடித்த இந்தப் படைப்பு, இசை, நடனம், அரங்கக் கலை ஆகியவற்றை வழக்கத்துக்கு மாறான முறையில் ஒருங்கிணைத்தது.
பொதுவாக பல்லிசைக் கலைஞர்கள் மேடைக்குக் கீழே அமர்ந்து இசைக்க, நடனக் கலைஞர்கள் மேடையில் நிகழ்ச்சி படைப்பது வழக்கம். ‘அகப்பே’வில் அனைத்து கலைஞர்களும் ஒரே மேடையில் நேரடியாகச் சந்தித்தனர். மனிதர்களுக்கிடையிலான பிணைப்பைச் சொல்லும் படைப்பில், கலைஞர்களின் இந்த நேரடிச் சங்கமமும் ஒரு முக்கியக் கூறாக அமைந்தது.
அதிபர் தர்மன் சண்முகரத்னம் தம்முடைய துணைவியார் ஜேன் இத்தோகியுடன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
கலாசாரப் பதக்கம் பெற்ற அப்சராஸ் ஆர்ட்சின் கலை இயக்குநர் அரவிந்த் குமாரசாமியின் இயக்கத்தில் உருவான இப்படைப்பு, ஒளி அமைப்பு, ஆடை வடிவமைப்பு, இசை, நடனம் ஆகியவற்றின் துணையுடன் மனித உறவுகளின் பல்வேறு பரிமாணங்களை நான்கு அங்கங்களாகப் படைத்தது.
யசுர் வேதம், பகவத் கீதை, நறுந்தொகை (வெற்றி வேற்கை), கபீர்தாசரின் கவிதைகள், மகாகவி பாரதியாரின் பாடல்கள், அதர்வண வேதம் ஆகியவற்றின் வரிகள், கருத்துகள் இதன் இசை, நடனக் காட்சிகளுக்கு அடித்தளமாக அமைந்தன.
முதல் அங்கம் மனிதனுக்கும் பிரபஞ்சத்துக்கும் இடையிலான தொடர்பை மையப்படுத்தியது. மனிதனுக்குள் பிரபஞ்சம் பிரதிபலிப்பதையும், அனைத்து உயிர்களிலும் நிறைந்துள்ள புனித ஆற்றலையும் உணர்த்தும் வகையில் இசையும் நடனமும் அமைந்திருந்தன.
‘மண்வாசம்’ எனும் இரண்டாம் அங்கம், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான பிணைப்பை வெளிப்படுத்தியது. வண்ணத்துப்பூச்சிகள், யானைகள், மான்கள், தவளைகள், நதி என இயற்கையின் பல்வேறு வடிவங்களும் உயிரினங்களுக்கிடையிலான பாசமும் நடன அசைவுகள் வழி மேடையில் உயிர்பெற்றன.
மூன்றாம் அங்கமான ‘இதய வெளி’, மனிதநேயம், இரக்கம், நட்பு, காதல் ஆகியவற்றை மையப்படுத்தியது. கலைஞர்களுக்கிடையிலான நேரடி தொடர்பும், ஆர்கெஸ்ட்ரா கலைஞர்களுக்கு இடையே இடம்பெற்ற நடனக் காட்சிகளும் இந்தப் பிணைப்பை மேலும் வலியுறுத்தின.
இறுதி அங்கமான ‘ஆன்மப் பிணைப்பு’, அனைத்து உயிர்களும் அடிப்படையில் ஒன்றோடொன்று இணைந்தவை என்ற கருத்தை மையமாகக் கொண்டது. ஒரே உயிராற்றல் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது என்ற உணர்வை இசையும் நடனமும் இணைந்து வெளிப்படுத்த, மனிதர்களுக்கிடையிலான ஆழமான தொடர்பை வலியுறுத்தும் வகையில் படைப்பு நிறைவடைந்தது.
நிகழ்ச்சியின் இறுதியில் உரையாற்றிய அதிபர் தர்மன், நாம் அனைவரும் கலாசார நதிகளால் பிணைக்கப்பட்டவர்கள் என்று குறிப்பிட்டார்.
“மனித நாகரிகங்களை இத்தகைய உன்னதமான கலாசார நதிகளே தொடர்ந்து இணைத்து வருகின்றன. இன்றைய நவீன தேசக் கட்டமைப்புகளின் அரசியல் எல்லைகளைக் காட்டிலும், இத்தகைய ஆழமான கலாசாரப் பிணைப்பு மிகவும் வலிமையானது,” என்று அவர் தெரிவித்தார்.
மேற்கத்திய இசையுடன் இந்தியக் கலையை இவ்வளவு நேர்த்தியாக ஒருங்கிணைத்த சிங்கப்பூர் பல்லிசைக் குழு, அப்சராஸ் ஆர்ட்ஸ் நடனக் கலைஞர்கள், பின்னணியில் பணியாற்றிய அனைவரையும் பாராட்டிய அவர், இத்தகைய பல்வேறு கலை வடிவங்களின் சங்கமமே சிங்கப்பூரின் தனித்துவத்தை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
இந்தத் தயாரிப்பில் நடன அமைப்பாளராகப் பணியாற்றியதுடன் மேடையில் ஆடுவதற்குக் களமிறங்கினார் இந்தியாவின் முன்னணி பரதநாட்டியக் கலைஞர் ரமா வைத்தியநாதன், 59.
“இப்படைப்பில் பங்கேற்றது எனக்கு ஒரு மிகச் சிறந்த கற்றல் அனுபவமாகவும், அதே நேரத்தில் என்னை மிகவும் பக்குவப்படுத்திய பணிவுக் கற்றலாகவும் அமைந்தது,” என்று குறிப்பிட்ட அவர், உலகில் உள்ள கலை வடிவங்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு நுட்பமானவை, ஆழமானவை என்பதை இந்தச் சங்கமத்தின் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது என்றார்.
நமது சொந்த பாரம்பரியத்தில் மட்டுமே பிடிவாதமாகத் தேங்கிவிடாமல், பிற கலை வடிவங்களுடன் இணைந்து பயணிப்பதே ஒரு கூட்டுப் படைப்பின் உண்மையான வலிமையாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
“இறுதியில், நாம் அனைவரும் ஒரே மூச்சுக்காற்றைச் சுவாசிக்கும் மனிதர்கள்தானே,” என்றார் திருவாட்டி ரமா.
இந்தப் படைப்பு அப்சராஸ் ஆர்ட்சின் 50 ஆண்டுகாலப் பயணத்தைச் சிறப்பாகக் கொண்டாடியதுடன் சிங்கப்பூரின் தனித்துவமான அடையாளத்தை அழகாகப் பிரதிபலித்ததாகவும் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரியும் அப்சராஸ் ஆர்ட்ஸ் செயற்குழு உறுப்பினருமான அன்பரசு ராஜேந்திரன் குறிப்பிட்டார்.
அடிமட்டத்திலிருந்து வளர்ந்து உலக அரங்கில் தன்னை நிலைநிறுத்தியுள்ள அப்சராஸ் ஆர்ட்ஸ், அடுத்த 50 ஆண்டுகளிலும் சிங்கப்பூரின் தனித்துவத்தையும் கலை அடையாளத்தையும் தொடர்ந்து வளர்க்க வேண்டும் என்றார் அவர்.
மேற்கத்திய இசையும் பரதநாட்டியத்தின் தனித்துவமான அசைவுகளும் ஒன்றிணைந்து மேடையில் அரங்கேறிய விதம் நெஞ்சை நெகிழச் செய்ததாக நிகழ்ச்சியைப் பார்வையாளராகக் கண்டு ரசித்த பரதநாட்டியக் கலைஞர் நிகிதா மேனன், 29, தெரிவித்தார்.
அப்சராஸ் ஆர்ட்ஸின் 50 ஆண்டுகாலப் பயணத்தைக் கண்டு பெருமிதம் கொள்வதாகக் கூறிய அவர், அதன் அடுத்த 50 ஆண்டுகள் எவ்வாறு அமையப்போகின்றன என்பதை அறிய ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.


