பரதநாட்டியக் கலைஞர் பிரியதர்ஷினி நாயர், முதல் குழந்தையைப் பெற்றெடுத்த முதல் மாதத்தில் தமக்கு ஏற்படுவது பிரசவத்துக்குப் பிந்திய மனச்சோர்வு என்றுதான் நினைத்தார்.
இருப்பினும், அது ஆறு மாதங்கள் நீடித்தபோது இந்த உணர்வு சற்றுத் தீவிரமான ஒன்று என்பதை அவர் உணர்ந்தார்.
“பிரசவத்துக்குப் பிந்திய மனச்சோர்வு என்பது வெளிப்படையாகப் பேசத் தயங்கும் அம்சமாகக் கருதப்படுகிறது,” என்றார் பிரியதர்ஷினி.
ஓர் அறைக்குள் அடைந்து கிடந்து சொந்த மனத்துடன் போராடிக்கொண்டிருந்த தருணத்தை அவர் நினைவுகூர்ந்தார்.
“நான் இரண்டு ஆண்டுகளாக நடனமாடுவதை நிறுத்திவிட்டேன்,” என்றார் அவர்.
பிரசவத்துக்குப் பிந்திய மனச்சோர்வு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, தேசியக் கலை மன்றம், பந்தயப்பிடிப்புக் கழகக் கலை நிதித் திட்டம் ஆகியவற்றின் ஆதரவில், ‘அகப்போர்’ என்ற நடனத்தை மேடையேற்றவுள்ளார் பிரியதர்ஷினி.
பாஸ்கர் ஆர்ட்ஸ் அகாடமியின் கலை இயக்குநர் மீனாக்ஷி பாஸ்கரின் வழிகாட்டலில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) ஸ்டாம்ஃபர்ட் கலை நிலையத்தில் ‘அகப்போர்’ நடன நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு அரங்கேறும்.
பிரசவத்துக்குப் பிந்திய மனச்சோர்வு என்ற இந்த அனுபவம் இயல்பானது எனத் தாய்மார் பலர் புறக்கணித்ததைச் சுட்டிக்காட்டினார் பிரியதர்ஷினி.
“இந்த நடனத்தின்வழி பிரசவத்துக்குப் பிந்திய மனச்சோர்வு குறித்து சமூகத்தில் எழும் எதிர்மறையான எண்ணங்களைக் குறைத்து, தாய்மாருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க நான் விரும்புகிறேன்,” என்று அவர் சொன்னார்.
தனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து மீண்டெழுந்த அவருக்கு நடனம் ஒரு மருந்தாகவும் இருந்தது.
“பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் மூத்த தலைமுறையினருக்கும் இந்த நடனத் தயாரிப்பு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த அனுபவத்தைப் பெற்றதில் எனக்கு மகிழ்ச்சி,” என்று பிரியதர்ஷினி கூறினார்.
‘அகப்போர்’ நடனத்துக்குப் பொதுமக்கள் ‘எஸ்ஜி’ கலாசாரச் சிறப்புத்தொகையைப் பயன்படுத்தி நுழைவுச்சீட்டுகளை வாங்கலாம்.
மேலும் விவரங்களுக்கு https://www.sgculturepass.gov.sg/events/AGBW2026 என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.
