60 வயதைக் கடந்தும் சாதனை: நடைப்பந்தய நாயகர்

60 வயதைக் கடந்தும் சாதனை: நடைப்பந்தய நாயகர்

3 mins read
44af9d40-bc1e-4eb5-8639-3c011a59a4a2
ஆர். சுப்பிரமணியம் (இடது) அவரின் குழுவுடன் கொரியாவில் நடந்த 20 கிலோமீட்டர் அனைத்துலக நடைப்பந்தயத்தில் முதல் இடம் பிடித்தார். - படம்: ஆர். சுப்பிரமணியம்

அறுபது வயதைக் கடந்தும் விளையாட்டுத் துறையில் தமது பயணத்தைத் தொடர்ந்து வரும் திரு ஆர். சுப்பிரமணியம், ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலக திடல்தடப் போட்டிகளில் நடைப்பந்தயத்தில் கலந்துகொண்டார்.

அதில், 20 கிலோமீட்டர் நடைப்பந்தயப் பிரிவில் தமது குழு உறுப்பினர்கள் இருவருடன் சேர்ந்து தங்கப் பதக்கம் வென்றார். அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு நடந்த 10 கிலோமீட்டர் பந்தயத்திலும் அக்குழுவினர் வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.

15 வயதில் இளையர் பிரிவில் நடைப்பந்தயத்தைத் தொடங்கிய சுப்பிரமணியனுக்கு, தேசிய அளவில் போட்டியிட்ட நடைப்பந்தய வீரரான அவரது உறவினர் ஆரம்பக்கால உந்துதலாக இருந்தார்.

இளையர் பிரிவில் முன்னணி வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்த சுப்பிரமணியன், பின்னர் மூத்தோர் பிரிவிலும் தம் பெயரை நிலைநாட்டினார். 1983ஆம் ஆண்டு மூத்தோர் பிரிவில் நடைபெற்ற ‘மலையின் ராஜா’ போட்டியில் முதலிடம் பிடித்தார்.

ஆனால், அவரது விளையாட்டுப் பயணம் எதிர்பார்த்தபடி  செல்லவில்லை. 1987ஆம் ஆண்டு தமது சொத்துச் சந்தைத் தொழில் மீதும், குடும்பத்தின் மீதும் கவனம் செலுத்துவதற்காக நடைப்பந்தயத்தை முழுமையாகக் கைவிட்டார்.

16 ஆண்டுகளுக்குப் பிறகு, 40 வயதை நெருங்கிய அவர் உடல் எடையைக் குறைக்கும் நோக்கில் மீண்டும் சிறிது சிறிதாகப் பயிற்சியைத் தொடங்கினார்.

அவ்வாறு பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது நடைப்பந்தயக் குழுவின் தலைவரை அவர் சந்தித்தார். மீண்டும் போட்டிகளில் பங்கேற்குமாறு அவர் விடுத்த அழைப்பை ஏற்று, சுப்பிரமணியம் பீஷான் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.

ஆனால், பள்ளி மாணவர்கள், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்தோரிடம்கூடத் தோல்வியடைந்து போட்டியில் அவர் கடைசி இடத்தைப் பிடித்தார்.

“அது எனக்கு ஓர் அதிர்ச்சியூட்டும் தருணமாக இருந்தது. இந்த விளையாட்டை முழுமையாகக் கைவிடுவதா என்னால் முடிந்தவரை முயற்சி செய்வதா என்று ஆழ்ந்து சிந்தித்தேன். இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்தேன். பயிற்சியைத் தீவிரமாகச் செய்து ஒவ்வொரு போட்டியிலும் எனது செயல்திறனை மேம்படுத்தினேன். மீண்டும் தேசிய அணிக்குத் திரும்ப வேண்டும் என எனக்குள் இலக்கு வைத்துக்கொண்டேன்,” என்றார் சுப்பிரமணியம்.

அதன் பிறகு கடுமையான பயிற்சியில் ஈடுபட்ட அவர், இரண்டே ஆண்டுகளில், (2005ஆம் ஆண்டு) மலேசியாவின் ஜென்டிங்கில் நடைபெற்ற அனைத்துலக 24 மணி நேர நடைப்பந்தயப் போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

அந்தப் போட்டியில் சிங்கப்பூர் அணிக்கு அதிக எதிர்பார்ப்பு இல்லாத நிலையிலும், அது வெற்றி கண்டது. அந்த வெற்றி சுப்பிரமணியத்தின் விளையாட்டுப் பயணத்தில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.

அதன்பிறகு பல உள்ளூர்ப் போட்டிகளில் பங்கேற்ற அவர், பல நாடுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் களமிறங்கினார்.

இதுவரை ஐந்து உலகளாவிய திடல்தடப் போட்டிகளில் அவர் பங்கேற்றுள்ளார். 2022ஆம் ஆண்டு பின்லாந்தில் நடைபெற்ற போட்டியில் காயம் காரணமாகப் போட்டியை அவரால் நிறைவு செய்ய முடியவில்லை.

“ஏரிக்கு அருகில் நான் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனால் நான் அங்குப் பங்கேற்க வேண்டிய மூன்று போட்டிகளிலும் கலந்துகொள்ள முடியவில்லை. குணமடைய மூன்று மாதங்கள் தேவைப்பட்டன. ஆனால், குணமானதும் இன்னும் சாதிக்க வேண்டும் என்ற தீவிர விருப்பம் என்னிடம் இருந்தது,” என்று அவர் கூறினார்.

சுப்பிரமணியம் இதுவரை பல குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்துள்ளார். சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் அவர் 10 முறை இடம்பெற்றுள்ளார்.

100 கிலோமீட்டர் நடைப்பந்தயத்தை 15 மணி 52 நிமிடங்களில் நிறைவு செய்தது, 12 மணி நேரத்தில் 84 கிலோமீட்டர் தூரம் நடந்தது, 30 நாள்களில் 1,200 கிலோமீட்டர் நடந்தது போன்ற சாதனைகள் அவற்றில் சில

கொரியாவிலிருந்து திரும்பிய சுப்பிரமணியம் மற்றொரு 10 கிலோமீட்டர் பந்தயத்தில் கலந்துகொண்டு இரண்டாவதாக வந்தார்.
கொரியாவிலிருந்து திரும்பிய சுப்பிரமணியம் மற்றொரு 10 கிலோமீட்டர் பந்தயத்தில் கலந்துகொண்டு இரண்டாவதாக வந்தார். - படம்: ஆர். சுப்பிரமணியம்

கொரியாவிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய அவர் மீண்டும் களமிறங்கினார். செப்டம்பர் 3ஆம் தேதி அவர் அனைத்து வயதினருக்குமான 10 கிலோமீட்டர் பந்தயத்தில் கலந்துகொண்டு இரண்டாவதாக வந்தார்.

63 வயதிலும் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வரும் சுப்பிரமணியம், விளையாட்டுத் துறையில் சாதிப்பதற்கு வயது ஒரு தடையன்று என்பதைத் தனது நீண்டகால விளையாட்டுப் பயணத்தின் மூலம் எடுத்துக்காட்டி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்
பந்தயம்விளையாட்டுபோட்டி