செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) தாக்கம் இன்றியமையாதது என்றும் அதனைக் கண்டு அஞ்சுவதைவிட அதற்குத் தயாராவதே சரி என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தமது வரவுசெலவுத் திட்ட உரையில் பேசியதைப் பெரிதும் வரவேற்கிறார் திரு கிருஷ்ணமூர்த்தி பாஸ்கரன், 53.
ஏஐ பயிற்சித் திட்டங்களில் குறிப்பிட்ட சிலவற்றில் பங்கேற்கும் சிங்கப்பூரர்கள், ‘பிரிமியம்’ ஏஐ கருவிகளை ஆறு மாதங்களுக்கு இலவசமாகப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டது.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழத்தில் பணியாற்றும் திரு பாஸ்கரன், ‘பிரிமியம்’ கருவிகளின் இலவசப் பயன்பாட்டை வரவேற்றார்.
“பொதுவாகவே, மாணவர்கள், இளம் பட்டதாரிகளுடன் தொடங்கி மூத்தோர் வரை ஒரு கருவிக்குக் கட்டணம் செலுத்தி கற்க, பயிற்சி மேற்கொள்ளத் தயக்கம் காட்டலாம். அதனைப் போக்க இது நல்ல உத்தி,” என்றார் இத்துறையில் 30 ஆண்டுகால அனுபவம் கொண்ட திரு பாஸ்கரன்.
“1950களில் செயற்கை நுண்ணறிவு எனும் சொல் முதன்முதலில் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், சாட்ஜிபிடி உள்ளிட்ட கருவிகளின் வருகை அதனைப் பரவலாக்கியுள்ளது. உலகின் பலதரப்பினரும் செயற்கை நுண்ணறிவின் துணையுடன் செயல்படுவர்கள் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். இதுதான் எதிர்காலம்,” என்றார் அவர்.
மேலும், தொழில்நுட்பம் மட்டுமன்றி பிற துறைகளிலும் ‘ஏஐ’ பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் பிரதமர் சுட்டிக்காட்டியதை வரவேற்றார் திரு பாஸ்கரன்.
இதன் பயன்பாட்டினால் உற்பத்தித்திறன் கூடும், வேலைப்பளு குறையும். சிந்தனை, படைப்பாற்றலில் கவனம் செலுத்தலாம் என்றார் அவர்.
அத்துடன், புதிய செயற்கை நுண்ணறிவு மையம், ‘ஏஐ’ குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கி அனைவரிடமும் கொண்டுசெல்லும் எனவும் எதிர்பார்க்கிறார் அவர்.
பொதுவாக, மாற்றங்களுக்கேற்ப தயார்ப்படுத்துவது சிங்கப்பூரின் தனித்துவம் என்றும் இம்முயற்சிகள் அதற்கு மேலும் ஒரு சான்று என்றும் குறிப்பிட்டார் திரு பாஸ்கரன்.
சிங்கப்பூரி ‘ஏஐ’ பரிசோதிக்கும் நிலையைத் தாண்டி, செயல்படுத்தும் நிலையை எட்டியுள்ளது
இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு சார்ந்த திட்டங்கள், நாட்டை ஒரு புதிய பரிமாணத்திற்கு இட்டுச்செல்லும் என நம்புகிறார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முக்கிய ஆய்வாளரும் துறை வல்லுநருமான ஜ்வலந்த் தேசாய்.
சிங்கப்பூர், செயற்கை நுண்ணறிவைப் பரிசோதிக்கும் நிலையைத் தாண்டி, செயல்படுத்தும் நிலையை எட்டியுள்ளது. இந்த முன்னெடுப்புகள், தேசிய அளவிலான மாற்றத்திற்குத் தயாராகிவிட்டதை உணர்த்துகிறது,” என்றார் அவர்.
நிதி, மேம்பட்ட உற்பத்தி ஆகிய துறைகளில் ‘தேசிய ஏஐ இலக்குகள்’ தொடங்கப்படுவதும், ஏஐ மன்றம் அமைக்கப்படுவதும் மிக முக்கியமான நகர்வுகள் என்றார் அவர்.
இதன்மூலம், சாத்தியக்கூறுகளுக்கும் நடைமுறைப் பயன்பாட்டிற்கும் இடையே உள்ள இடைவெளியும் குறையும் என்பது அவரது கருத்து.
நிறுவனங்கள், மாற்றத்தின்போது எதிர்கொள்ளும் அபாயங்களைக் குறைக்க ஏதுவாக தொழில்நிறுவனப் புத்தாக்கத் திட்ட மேம்பாட்டை வரவேற்பதாகச் சொன்ன அவர், இவை வணிகங்கள் துணிச்சலாகச் செயல்படத் தேவையான ‘நிதிக் கவசத்தை’ வழங்குவதாகச் சொன்னார்.
ஊழியர்களைப் பொறுத்தமட்டில், ‘பிரீமியம்’ ஏஐ கருவிகள் வழங்கப்படுவது அவசியம். அதற்கான திட்டங்களும் உள்ளது சிறப்பு,” என்றார் அவர்.
ஊழியர்களுக்கு ஏஐ திறன்களை வளர்ப்பது மாறிவரும் உலகப் பொருளியல் சூழலில், சிங்கப்பூரின் மனிதவளத்தின் மதிப்பினைத் தக்கவைத்துக்கொள்ள உதவும் என்று அவர் கூறினார்.
இந்த அறிவிப்புகள், சிங்கப்பூரை வெறும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பின்பற்றும் நாடாக மட்டுமன்றி, பொறுப்பான முறையில் செயல்படுத்தும் ஒரு நம்பகமான மையமாக மாற்றும் என நம்புவதாகச் சொன்னார் ஜ்வலந்த்.

