செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பம் இணையப் பாதுகாப்பைப் பொறுத்தவரையில் ஒருபுறம் வலுச்சேர்க்கிறது; மறுபுறம் ஊடுருவலுக்கும் அதுவே துணையாக இருக்கிறது. இருப்பினும், தம்மைப் போன்ற இணையப் பாதுகாப்பு வல்லுநர்களுக்கு ‘ஏஐ’ நண்பனே என்கிறார் இணையப் பாதுகாப்பு வல்லுநர் எஸ்.வெங்கடேஷ்வர்லு நாயுடு.
தேசியக் கல்விக் கழகத்தின் (என்ஐஇ) தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்புச் செயலாக்கத் துறை உதவி இயக்குநராகப் பணியாற்றும் அவர், தமிழ் முரசின் ‘என்ன செய்யும் ஏஐ?’ வலையொளித் தொடருக்கான நேர்காணலில் அவ்வாறு கருத்துரைத்தார்.
இணையத் தாக்குதல்கள் தற்காலத்தில் ‘ஏஐ’யைப் பயன்படுத்தி மிகவும் விரைவாக நடத்தப்படுகின்றன. அதேவேளையில், தாக்குதல்களிலிருந்து ‘என்ஐஇ’ போன்ற அமைப்புகளின் கணினிக் கட்டமைப்புகளைப் பாதுகாக்கவும் அந்தத் தொழில்நுட்பமே முதன்மை அரணாகப் பயன்படுத்தப்படுகிறது என்றார் அவர்.
சாதாரண மனிதர்கள் ஆய்வு செய்ய ஏறத்தாழ சில மணி நேரமோ அரை நாளோ எடுக்கும் ஒரு பாதுகாப்புச் சம்பவத்தை ‘ஏஐ அனலிஸ்ட்’ வாயிலாக ஐந்தே நிமிடங்களில் முழுமையாக ஆய்வு செய்து (Incident investigation), அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் துல்லியமாக அறிய முடிகிறது. மனிதர்களுக்கு உணர்வுகள், சிரமங்கள் இருப்பதால் நேரக் கட்டுப்பாடுகள் உண்டு; ஆனால் ‘ஏஐ’க்கு இவை எதுவும் கிடையாது என்பதால் எந்நேரமும் அது தயாராகப் பணியாற்றுகிறது என்றார் திரு வெங்கடேஷ்.
அத்துடன், இணையத் தாக்குதல்கள் நடப்பதற்கு முன்பே, எடுத்துக்காட்டாக, கடவுச்சொற்களை ஊடுருவ யாரோ முயல்வதைக் கண்டறிந்து, இன்னும் ஒரு வாரத்தில் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது என்று முன்கூட்டியே கணித்து எச்சரிக்கும் திறனும் ‘ஏஐ’க்கு உண்டு என்று அவர் விளக்கினார்.
‘ஏஐ’ என்பது பயனாளர் அளிக்கும் தரவுகளிலிருந்து கற்றுக்கொள்ளும் ஒரு பயிற்சி மாதிரி என்பதால், அதில் பதிவிடப்படும் தரவுகள் பொதுத் தளத்திற்குச் சென்று கசிய வாய்ப்புள்ளதைக் குறிப்பிட்ட திரு வெங்கடேஷ், நிறுவனத்தின் ரகசியத் தகவல்களையோ தனிப்பட்ட தகவல்களையோ அதில் பகிர்வது ஆபத்து என்றார்.
எடுத்துக்காட்டாக, ஒரு நாளிதழில் வெளியீட்டு நேரக் கட்டுப்பாடு (Embargo) உள்ள செய்திகள், உடற்பயிற்சிக் கடிகாரங்களின் (Fitbit watch) மூலம் சேகரிக்கப்படும் புவியிடங்காட்டித் (ஜிபிஎஸ்) தரவுகள் போன்றவற்றைக் குறிப்பிட்ட அவர், சமூகப் பொறுப்புடன் தரவுகளைப் பகிர்வதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அதேவேளையில், போலிச் செய்திகள், மோசடிகளைப் பொறுத்தவரை, சாதாரண கூகல் தேடலைவிட ‘ஏஐ’ நுட்பமானது. இணையப்பக்கங்களை ஆராய்ந்து, ஒரு தகவல் உண்மையிலேயே மோசடியா என்பதைக் கண்டறிய அது உதவுகிறது என்றார்.
கல்வித்துறையில் வன்போலிக் (Deepfake) காணொளிகளைக் கண்டறிய ‘ஏஐ’ மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று சொன்ன அவர், ஒருவரின் உணர்வுகள், கண் அசைவுகள், உடல்மொழியை ‘ஏஐ’க்குக் கற்றுக்கொடுப்பதன் மூலம் வன்போலிக் காட்சிகளைக் கண்டறிய முடியும் என்றார்.
தமது அடுத்தகட்ட இலக்காக, சமூக மன்றங்களிலும் பொது இடங்களிலும் செயற்கை நுண்ணறிவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ‘தோசை’ (Tech House Of Sparks and AI) எனும் புதிய ஆர்வலர் குழுவைத் தொடங்கவிருப்பதாகத் திரு வெங்கடேஷ் குறிப்பிட்டார். ‘ஏஐ’ மனிதர்களின் வேலைகளைப் பறித்துவிடும் என்ற அச்சத்தைப் போக்கி, அதை அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு எளிமையாகப் பயன்படுத்துவது என்பதை இக்குழு கற்றுத்தரும்.
குடும்ப வாழ்க்கை, ஏன் சமையலுக்கும்கூட அது கைகொடுக்கும் என்றார் அவர். குளிர்பதனப் பெட்டியில் எஞ்சியுள்ள சில காய்கறிகளைக் கொண்டு என்ன சமைக்கலாம் என்பதற்கு அது சரியான செய்முறையைப் பரிந்துரைக்கிறது.
விளம்பரத் துண்டுச்சீட்டுகள் (Flyers) வடிவமைப்பது, சுனோ (Suno) செயலி மூலம் இசை அமைப்பது போன்ற பணிகளை ‘ஏஐ’ விரைவுபடுத்துகிறது என்றார் அவர்.
இவ்வாண்டு பொங்கல் விழாவில் ‘ஏஐ சாரதா’ எனும் மெய்நிகர் நிகழ்ச்சி நெறியாளரை உருவாக்கி, தமிழ், சீனம் என இரு மொழிகளில் ஜல்லிக்கட்டு பற்றிய தகவல்களைப் பார்வையாளர்களுக்கு எடுத்துக்கூறியதாகத் திரு வெங்கடேஷ் கூறினார்.
வேலை தேடும் இளையர்கள், தங்கள் தன்விவரக் குறிப்பை (Resume) வெவ்வேறு வேலைகளுக்கு ஏற்ப ‘புராம்ட்’ (Prompt) கொடுத்து மாற்றியமைக்க ‘ஏஐ’ உதவுகிறது என்று விளக்கினார்.
‘ஏஐ’ தொழில்நுட்பம் 90 விழுக்காட்டு வேலைகளை விரைவாகச் செய்து முடித்தாலும், இறுதி முடிவையும் சரிபார்ப்பையும் மனிதர்களே செய்ய வேண்டும் (Human in the loop); பணிக்கான முழுப் பொறுப்பும் மனிதர்களையே சாரும் என்று அவர் எடுத்துரைத்தார்.
ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பு கணினி பரவலாக அறிமுகமானபோது அஞ்சியதுபோல ‘ஏஐ’யைக் கண்டு பயப்படத் தேவையில்லை. கணினியைப் போலவே இதுவும் மனிதர்களுக்கு முழுமையான மாற்றாகச் செயல்படாது. ஆனால், ‘ஏஐ’யைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளாவிட்டால் 10 ஆண்டுகள் பின்தங்கிவிடும் நிலை ஏற்படும். எனவே, அனைவரும் செயற்கை நுண்ணறிவை ஒரு நண்பனாக ஏற்றுக்கொண்டு தங்கள் அறிவைப் புதுப்பித்துக்கொள்வது அவசியம் என்கிறார் திரு வெங்கடேஷ்.
