சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் தங்களின் நிதிசார் அறிவை மேம்படுத்திக்கொள்ளவும் பணப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும் புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
நிதி மேலாண்மை, சுய மேம்பாட்டுப் பயிற்சிகள் மூலம் கடந்த 20 ஆண்டுகளாகப் பணிப்பெண்கள், குறைந்த வருமானம் பெறும் சிங்கப்பூர்ப் பெண்கள் ஆகிய இருதரப்பினரின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறது ‘ஐதா’ (Aidha) தொண்டு நிறுவனம்.
‘ஐதா’, 20ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் குறிக்கும் வகையில் ரோச்செஸ்டர் பார்க்கில் உள்ள தனது தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
நிதி குறித்த பணிப்பெண்களின் புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘அக்செஸ்’ (ACCESS) எனும் மூவாண்டு தேசிய இயக்கம், அவ்விழாவில் அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
பணிப்பெண்களின் சேமிப்பு 46% அதிகரிப்பு
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மனிதவளத் தற்காலிக அமைச்சர் ஜாஸ்மின் லாவ், பணிப்பெண்களின் திறன் மேம்பாட்டிற்காக ‘ஐதா’ அமைப்பு மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்புமிக்க முயற்சிகளைப் பாராட்டினார்.
2006ல் ‘ஐதா’ தொடங்கப்பட்டதிலிருந்து அதன் பயிற்சிகளில் பங்கேற்ற பணிப்பெண்களின் மாதாந்தரச் சேமிப்பு சராசரியாக 46 விழுக்காடு அதிகரித்துள்ளதை அமைச்சர் சுட்டினார்.
“இதன்மூலம் ஆயிரக்கணக்கான பணிப்பெண்கள் தங்களது சொந்த நாட்டில் உள்ள குடும்பங்களுக்குச் சிறந்த முறையில் ஆதரவளிக்கவும் எதிர்காலத் திட்டமிடுதலுடனும் தன்னம்பிக்கையுடனும் வாழ்க்கையை எதிர்கொள்ளவும் முடிகிறது,” என்று திருவாட்டி லாவ் கூறினார்.
ஆங்கில மொழிப் பயிற்சி, மனநல மேம்பாடு, மோசடி விழிப்புணர்வு போன்ற பயிற்சிகளையும் ‘ஐதா’ வழங்கி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், இதற்கு மனிதவள அமைச்சின் ஆதரவு தொடரும் என உறுதியளித்தார்.
புதிய பயிற்சி, நேரில் உதவும் நிலையம்
சிங்கப்பூருக்குப் புதிதாக வரும் பணிப்பெண்களுக்காக ‘மணிஸ்டார்ட்’ (MoneyStart) எனும் அரை நாள் இலவச நிதிசார் கல்விப் பயிற்சியை 2026 ஆகஸ்ட்டில் ‘ஐதா’ தொடங்கவுள்ளது. ஏற்கெனவே இங்குள்ள பணிப்பெண்களும் இதில் இணையலாம்.
தொடக்கத்தில் மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் இப்பயிற்சி, 2027 முதல் மாதத்திற்கு இருமுறை என அதிகரிக்கப்படும் என்று ‘ஐதா’ அமைப்பின் தலைமை நிர்வாகி ஜேக்வலின் லோ தெரிவித்தார்.
மேலும், நிதிப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பணிப்பெண்களுக்கு நேரில் வழிகாட்ட 2026 அக்டோபர் முதல் புதிய உதவிக் கூடம் செயல்படவுள்ளது. மாதத்தின் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பயிற்சி பெற்ற தொண்டூழியர்களும் பணியாளர்களும் இதில் வழிகாட்டுவர்.
$1 மில்லியன் நிதி திரட்டும் இலக்கு
இப்புதிய திட்டங்களுக்கு ஆதரவளிக்கவும் அடுத்த மூன்றாண்டுகளில் தங்களது சேவைகளை விரிவுபடுத்தவும் $1 மில்லியன் நிதி திரட்டும் இயக்கத்தையும் ‘ஐதா’ அறிவித்துள்ளது. ‘ஜே அண்ட் மேரிலின் இங்’ அறக்கட்டளை வழங்கிய $200,000 நன்கொடை மூலம், இலக்கில் ஐந்தில் ஒரு பங்கு ஏற்கெனவே எட்டப்பட்டுவிட்டது.
இவ்விழாவில், சிங்கப்பூர் வேலை நியமன முகவைகள் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிலும் ‘ஐதா’ கையெழுத்திட்டது.
வேலை நியமன முகவைகள் மூலம் பணிப்பெண்களிடையேயும் முதலாளிகளிடையேயும் நிதிசார் விழிப்புணர்வை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சங்கத்தின் தலைவர் கே.ஜெயபிரேமா தெரிவித்தார்.
நிதித் துறை ஊழியரும் ‘ஐதா’ தொண்டூழியருமான திரு பிரகாஷ் கோபாலகிருஷ்ணன், “சிங்கப்பூரின் சமூகக் கட்டமைப்பிலும் பல குடும்பங்களின் அன்றாட இயக்கத்திலும் பணிப்பெண்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர்.
“ஒப்பந்தம் முடிந்து அவர்கள் சொந்த ஊர் திரும்பும்போது, அவர்கள் சிரமேற்கொண்டு ஈட்டிய பணம் வீணாகாமல் அவர்களது எதிர்காலத்திற்குப் பயன்பட வேண்டும்,” என்றார்.
தாம் நிதித்துறையில் பணியாற்றுவதால், தமக்குத் தெரிந்த நிதி மேலாண்மைத் திறன்களைக் கற்றுக்கொடுத்துப் பணிப்பெண்களின் வருங்காலத்துக்குத் தம்மால் முடிந்த பங்களிப்பைச் செய்யவிரும்புவதாக அவர் சுட்டினார்.

