எண்பது வயதானபோதும் பிறர் உதவியின்றித் தனது வேலைகளைத் தானே செய்துகொள்ளும் சுதந்திர மனப்பான்மை கொண்டவர் திரு வி.எம்.சந்திரன்.
ஆனால், தோள்பட்டைகளில் ஏற்பட்ட கடுமையான வலி அவரை எந்நேரமும் வாட்டியது.
மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு போன்ற நோய்களும் இருந்ததால், வழக்கமான அறுவை சிகிச்சை செய்வது மிகுந்த ஆபத்தானது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆயினும், 2022ல் இவர் முழு மயக்க மருந்து இன்றி, மருத்துவர்களிடம் பேசிக்கொண்டே கிட்டத்தட்ட 20 நிமிடங்களில் அச்சிகிச்சையை அவர் செய்து கொண்டார்.
வலி பெரிதும் குறைந்ததால், அன்றைய இரவே அவர் யாருடைய உதவியுமின்றி, தம் கைகளாலேயே உணவு எடுத்துச் சாப்பிடத் தொடங்கினார்.
இவரைப் போல 60 முதல் 90 வயது வரையிலான தீவிர உடல்நலச் சிக்கல்கள் கொண்ட நோயாளிகளுக்கான இந்தச் சிகிச்சை தொடர்பாக டான் டோக் செங் மருத்துவமனை மருத்துவர்கள் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தோள்பட்டைத் தசைநார் கிழிசல் மற்றும் மூட்டுத் தேய்மானத்தால், அன்றாடச் செயல்களைக்கூடச் செய்ய முடியாமல் தவிக்கும் முதியவர்களுக்கு, ஊடுருவல் குறைந்த ‘சப்அக்ரோமியல் பலூன் ஸ்பேசர்’ (Percutaneous Subacromial Balloon Spacer) என்ற புதுவித மருத்துவச் சிகிச்சை முறை நம்பிக்கை தந்துள்ளது.
முதியோரை முடக்கும் தோள்பட்டைத் தசைநார் நோய்
சிங்கப்பூரில் முதியோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் சூழலில், வயது முதிர்வால் ஏற்படும் சுழற்றிப்பட்டை கிழிசலால் (degenerative rotator cuff tears) பாதிக்கப்படுவதும் கூடியுள்ளது.
தோள்பட்டை மூட்டைப் பிணைத்து வைக்கும் தசைநார்கள் வலுவிழந்து கிழிந்துபோகும்போது, மேல் கை எலும்பின் தலைப்பகுதி மேலே நகர்ந்து, தோள்பட்டையின் மேலெலும்புடன் (Acromion) நேரடியாக உரசத் தொடங்குகிறது. நீண்ட காலமாக இந்த அறிகுறிகளுடன் தவிக்கும் நோயாளிகளுக்கு, வலியே முக்கியப் பிரச்சினையாக மாறுகிறது.
கையை உயர்த்த முடியாமல் போவது, சட்டை அணிவதில் சிரமம், குளித்தபின் துண்டால் உடலைத் துடைக்க இயலாமை, கழிப்பறைத் தேவைகளைத் தானே செய்ய இயலாமை போன்ற பாதிப்புகளை இத்தகைய நோயாளிகள் எதிர்கொள்வர்.
குறிப்பாக, இரவில் படுக்கும்போது தோள்பட்டை எலும்புகள் உரசுவதால் ஏற்படும் வலி, அவர்களின் தூக்கத்தைப் பறித்து, மனத்தளவிலும் அவர்களைப் பெரிதும் பாதிக்கிறது.
வழக்கமான அறுவைசிகிச்சைகளும் அபாயங்களும்
பொதுவாக, கடுமையான தோள்பட்டைத் தசைநார் கிழிசல்களுக்குப் பகுதித் தசைநார் சீரமைப்பு (Partial repair), மேல் பொதியுறைச் சீரமைப்பு (Superior capsular reconstruction), தசைநார் மாற்று அறுவை சிகிச்சை (Tendon transfers) அல்லது தோள்பட்டை செயற்கை மூட்டுப் பொருத்துதல் (Shoulder arthroplasty) ஆகியவை மேற்கொள்ளப்படும்.
இருந்தபோதும், 60 அல்லது 70 வயதைக் கடந்த, ஏற்கெனவே இதய நோய், உயர் ரத்த அழுத்தம், தீவிர நோய், சிறுநீரகக் கோளாறுகள் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் (ஏஎஸ்ஏ 3 அல்லது 4) கொண்ட முதியவர்களுக்கு, வழக்கமான அறுவை சிகிச்சை பொருந்தாதவையாகவோ அல்லது உயிருக்கு ஆபத்தானவையாகவோ அமையலாம்.
சிக்கல்கள் இன்றித் தேறிவந்த உடல்நலம்
சிறிய துளை ஒன்றின் வழியாகப் புகுத்தப்படும் இந்தப் ‘பலூன் ஸ்பேசர்’, தோளுக்கும் மேற்கைக்குமான இடைவெளியில் மெத்தை போலச் செயல்பட்டு, தோள்பட்டை எலும்புகள் ஒன்றோடொன்று உரசுவதைத் தடுத்து வலியைப் போக்குகிறது.
முழு மயக்க மருந்து தேவையில்லை என்பதாலும் மிகக் குறுகிய நேரத்தில் இந்தச் சிகிச்சை முடிந்துவிடுவதாலும் அறுவை சிகிச்சையால் ஆபத்து அதிகம் உள்ள முதியவர்களுக்கு இது பாதுகாப்பான மாற்று வழியாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
இச்சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை முடிந்த கிட்டத்தட்ட 2 வாரங்களிலேயே வலி அளவீட்டில் (Visual Analog Scale - VAS) குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது.
இந்த வலி முழுமையாக நீங்க ஆறு மாதங்கள் முதல் ஓராண்டுவரை நீடித்தாலும் வலி படிப்படியாகக் குறைந்ததாகக் கூறப்பட்டது.
தோள்பட்டைப் பகுதியில் செலுத்தப்படும் பலூன்
உடலுக்குள் செலுத்தப்படும் இந்த பலூன் ஸ்பேசர், மட்கும் தன்மையுடையது என்பதால், கிட்டத்தட்ட 6 முதல் 12 மாதங்களுக்குள் அது தானாகவே கரைந்துவிடும்.
பலூன் கரைந்துவிட்டால் வலி மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சங்களுக்குப் புறம்பாக, பலூன் கரைந்த பின்னரும் நோயாளிகளுக்கு வலிநீக்கம் நீண்ட காலத்திற்கு நீடிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நோயாளியும் மருத்துவரும் எடுத்த கூட்டு முடிவு
திரு சந்திரனுக்குத் தெளிவாகப் புரியும் வகையில் அனைத்து மாற்று வழிகளும் விளக்கப்பட்டதாக டான் டோக் செங் மருத்துவமனையின் எலும்பியல் அறுவை சிகிச்சைத் துறையின் மூத்த ஆலோசகரும், விளையாட்டு அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவப் பிரிவின் தலைவருமான டாக்டர் ஷான் ஹோ தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
“திரு சந்திரன் தனக்கு என்ன வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். நோயாளியின் விருப்பம், குடும்பத்தினரின் புரிந்துணர்வு, மருத்துவர்களின் வெளிப்படையான மருத்துவ ஆலோசனை ஆகியவை இணைந்த ஒரு கூட்டு முடிவால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆபத்துக் குறைவான பலூன் சிகிச்சை திரு. சந்திரனுக்கு மீண்டும் ஒரு வலியில்லாத வாழ்க்கையைத் திருப்பிக் கொடுத்துள்ளது,” என்று டாக்டர் ஹோ சொன்னார்.

