அமராவதி – பாதி தோண்டப்பட்ட பள்ளத்திற்கு அருகே, நீல நிறத் தகர மறைப்புகளுக்குப் பின்னால் உயர்ந்து நிற்கும் வானுயர் கட்டடங்களைப் பார்க்கும்போது, ஒரு நகரம் அதிவேகமாகத் தன்னைத்தானே கட்டமைத்துக்கொள்ளும் உணர்வு தோன்றுகிறது.
2019ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதியில் கட்டுமானப் பணிகள் ஐந்து ஆண்டுகளுக்கு முடங்கிக்கிடந்தன. ஆயினும், திரு சந்திரபாபு நாயுடு மீண்டும் தேர்தலில் வென்று ஆட்சிப் பொறுப்பேற்றபின், அமராவதியை ஓயாத அவசரமும் வேகமும் தொற்றிக்கொண்டுள்ளன.
இந்திய வெளியுறவு அமைச்சு ஏற்பாடு செய்திருந்த ஒரு வாரகால ஊடகப் பயணத்தின்போது, மாநிலத் தலைவர்கள் தங்களது ஆட்சித் தத்துவத்தை ஒற்றை வரியில் சுருக்கமாகக் கூறினர்: “செயலே முக்கியம்.”
அந்த அவசரம் அங்குள்ள இரும்பிலும் மண்ணிலும் கண்கூடாகத் தெரிகிறது. அமராவதியின் பெரும்பகுதி இன்னும் ஒரு பரந்து விரிந்த கட்டுமானத் தளமாகவே காட்சியளித்தாலும், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகளும் நிறைவடையும் தறுவாயில் உள்ளன.
அருகிலேயே, ‘குவான்டம் வேலி’ எனப்படும் பகுதியில் ஐபிஎம் மற்றும் டாடா ஆலோசனைச் சேவை நிறுவனங்களுடன் இணைந்து ‘குவான்டம்’ கணினி ஆய்வு மையத்திற்கான அலுவலகக் கட்டடங்கள் உருவாக்கப்படுகின்றன.
இழந்ததை ஈடுகட்ட அதிவேக ஓட்டம்
ஆந்திர மாநிலத்தில் வேகம் என்பது ஒரு தேவையாகக் கருதப்படுகிறது.
2014ஆம் ஆண்டில் மாநிலம் பிரிக்கப்பட்டபோது, அதுவரை தலைநகராக இருந்த ஹைதராபாத் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகராகிவிட்டது. அதனால், ஆந்திர மாநிலம் வேளாண்மையைப் பெரிதும் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
தற்போது, இழந்த பத்தாண்டுகால வளர்ச்சியை வெறும் ஐந்தாண்டு ஓட்டத்தில் ஈடுகட்ட அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.
மாநிலத்தின் ‘தொலைநோக்கு 2047’ (Vision 2047) திட்டம் குறித்து விளக்கிய திட்டமிடல் துறை இணைச் செயலாளர் அனந்த் சங்கர், ஆண்டுதோறும் 10 விழுக்காட்டிற்கும் அதிகமான வளர்ச்சியைத் தக்கவைப்பதன் மூலம் ஆந்திராவை 200 பில்லியன் அமெரிக்க டாலர் பொருளியலிலிருந்து 2.4 டிரில்லியன் டாலர் பொருளியலாக உயர்த்தும் இலக்கை முன்வைத்தார்.
அதனை எட்ட, அடுத்த ஐந்தாண்டுகளில் மூன்று பொருளியல் வழித்தடங்கள் மூலம் 450 பில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்க்க மாநிலம் முனைப்பு காட்டுகிறது. குறிப்பாக, அறிவுசார், ‘குவான்டம்’ தொழில்நுட்ப மையமாக அமராவதி உருவெடுக்கவுள்ளது.
இந்தத் தீவிர முயற்சியால், இந்தியாவின் அண்மைய முதலீடுகளில் 25 விழுக்காட்டை 23 தொழில்துறைத் தொகுப்புகள்மூலம் ஆந்திரா ஏற்கெனவே ஈர்த்துள்ளதாக மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நர லோகேஷ் தெரிவித்தார்.
சிங்கப்பூர்க்கு முக்கியப் பங்கு
இந்த மறுகட்டமைப்பில் சிங்கப்பூர் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கிறது.
அமராவதி மேம்பாடு தொடர்பில் சிங்கப்பூர் நிறுவனக் கூட்டமைப்புடன் 2017ல் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம், 2019 ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2025 நவம்பரில் கையெழுத்தான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்மூலம் இரு தரப்பும் உறவைப் புதுப்பித்துள்ளன.
திரு லோகேஷ் வெளிப்படையாகக் குறிப்பிட்டதுபோல, சிங்கப்பூர் இனி தொடக்க மூலதனத்தை வழங்கப்போவதில்லை; அமராவதியும் சிங்கப்பூரின் வெறும் ‘நகலாக’ (copy-paste) இருக்கப்போவதில்லை.
மாறாக, சிங்கப்பூர் ஒரு தொழில்நுட்ப ‘அறிவுசார் பங்காளியாக’ செயல்படுகிறது. கூட்டுச் செயலாக்கக் குழுக்கள், மூத்த அதிகாரிகளுக்கான ‘சேஜ்’ (SAGE) பயிற்சித் திட்டம் போன்றவற்றின்மூலம் மாவட்டக் குளிரூட்டல், நீர் மேலாண்மை, நகர்ப்புற நிர்வாகம் ஆகியவற்றில் சிங்கப்பூர் தனது நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்கிறது.
சிங்கப்பூரின் பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தை (Punggol Digital District) முன்மாதிரியாகக் கொண்டு அமராவதியில் ஒருங்கிணைந்த நகரியம் ஒன்றை உருவாக்குவது இந்த ஒத்துழைப்பின் முக்கிய அம்சமாகும்.
சவால்களும் சட்டப் பாதுகாப்புகளும்
இருப்பினும், வேகம் மட்டுமே ஒரு தலைநகரத்தை உருவாக்க இயலாது. கடந்தகாலக் கொள்கை மாற்றங்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அசைத்துப் பார்த்ததையும், செயற்கை நுண்ணறிவு, ‘குவான்டம்’ கணினியியல் போன்ற துறைகளுக்கு ஏற்ப பணியாளர்களுக்குத் திறன் பயிற்சி அளிப்பது சவாலானது என்பதையும் திட்டமிடுபவர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
உலகளாவிய நிறுவனங்களையும் இளங்குடும்பங்களையும் அமராவதியை நோக்கி ஈர்க்க, உள்கட்டமைப்புடன் சமூக, சட்டப் பாதுகாப்புகளையும் அரசாங்கம் இணைத்து வருகிறது.
அலுவலகக் கட்டடகளுடன் பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைக் கட்டமைப்புகள், சமூகப் பாகுபாட்டைத் தவிர்க்கும் வகையில் குறைந்த, நடுத்தர வருமானம் ஈட்டுவோர்க்கான ஒருங்கிணைந்த வீடமைப்புத் திட்டங்கள் ஆகியவற்றையும் நகர வடிவமைப்பில் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேவேளையில், எதிர்கால அரசியல் மாற்றங்களால் திட்டங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக் கழகத்தை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆந்திரப் பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் கட்டமைப்புகளையும், அமராவதிக்குத் தலைநகருக்கான சட்டநிலைத் தகுதியை வழங்கும் வகையில் இந்திய நாடாளுமன்றம் ஏப்ரல் மாதம் நிறைவேற்றிய ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத் திருத்தத்தையும் மாநில அரசு நம்பியுள்ளது.
கிருஷ்ணா நதிக்கரையில் இரவு பகலாக நடக்கும் கட்டுமானப் பணிகளைக் கடந்து செல்லும்போது, ஆந்திர மாநிலத் தலைவர்கள் அரசியல் காலக்கெடுவுடன் போட்டி போடுவது தெளிவாகத் தெரிகிறது.
ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வேகத்திற்கு இணையாகக் கட்டடங்களையும் எழுப்புவதன்மூலம், அமராவதியின் எழுச்சியை இனி எவராலும் தடுத்து நிறுத்த முடியாத ஒன்றாக மாற்றுவதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.
