அன்னையர் தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) மகளிர் பிரிவு சனிக்கிழமை (மே 17) ‘அம்மாவும் நானும்’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.
வீட்டிலிருந்தபடியே செயல்படும் 15 வணிகர்கள் ஒன்றிணைந்து ஆடை அணிகலன்கள், உணவு போன்றவற்றை நிகழ்ச்சியில் விற்பனை செய்தனர்.
அத்துடன் 28 தாய்-பிள்ளை இணைகளுக்கான நெருப்பில்லா சமையல் போட்டி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.
“லிஷா மகளிர் பிரிவு, சமூக அளவில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இருப்பினும் ஒரு சிறிய அளவில், குறிப்பாக, வீட்டிலிருந்து இயங்கும் வணிகங்களுக்கு ஓர் ஊக்கமாக இந்த நிகழ்ச்சி விளங்குகிறது,” என்றார் லிஷா மகளிர் பிரிவின் தலைவர் எலிஷா வாணி, 41.
“பங்கேற்ற அனைத்து வர்த்தகர்களும், தங்கள் வணிகத்தை மேம்படுத்த எதிர்காலத்தில் பல திட்டங்களை எதிர்பார்க்கலாம்,” என்றார் திருவாட்டி எலிஷா.
ஃபேரர் பார்க்கில் அமைந்துள்ள ‘லிஃப்’ வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.
முற்றிலும் பெண் வணிகர்கள் வழிநடத்தும் ‘லியோ’ நிறுவனத்திலிருந்து நான்கு வணிகர்கள் நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்.
பிள்ளைகள் தங்கள் அன்னையருக்குப் பரிசு வாங்கித் தருவதை ஊக்கப்படுத்த நிகழ்ச்சியில் சில பொருள்களை மலிவாக விற்றதாக வணிக உரிமையாளர் நீலாம்பிகை ராஜேந்திரன், 39, கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இதுபோன்ற நிகழ்ச்சிகள்மூலம் மற்ற வர்த்தகர்களைச் சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் சொன்னார். எனினும், நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் முயற்சிகள் சற்று முன்னதாகவே நடந்திருக்கலாம் என்று அவர் கருத்துரைத்தார்.
பாலிமர் களிமண்ணால் செய்யப்பட்ட காதணிகளைக் கடந்த ஓராண்டாகச் செய்து வருகிறார் ‘காதணி’ இல்ல வர்த்தக உரிமையாளர் மேனகா, 30.
இணையத்தில் இயங்கிவரும் தனது வர்த்தகத்தை முதல்முறையாக நிகழ்ச்சி ஒன்றில் அவர் அறிமுகப்படுத்தினார்.
“இதனால் மக்களுக்கு என்ன பிடிக்கும் என்பதையும் அறிந்துகொண்டு என் வர்த்தகத்தைத் தொடர்ந்து மேம்படுத்தலாம்,” என்றார் அவர்.

