தொன்மையான இந்திய மரபுக்கலைகள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் வகையில் ‘ஆட்டம்’ படைக்கவிருக்கும் ஆனந்தக் கொண்டாட்டம் 2025 நிகழ்ச்சி அமையவிருக்கிறது.
‘நன்றியுணர்வும் கொண்டாட்டமும்’ என்ற கருப்பொருளைப் பறைசாற்றும் வண்ணம் மக்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில் இந்திய மரபுக்கலைகள் ஒரே இடத்தில் மேடையேறுவதை கூடிய விரைவில் காணலாம்.
தலைமுறை தலைமுறையாகக் கடந்து வந்த பாரம்பரியக் கலை வடிவங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் வகையில், ‘ஆட்டம்’ இரண்டாவது முறையாக இந்த நிகழ்ச்சியைப் படைக்கிறது.
உள்ளூர் கலை அமைப்புகள், பள்ளிகள், சமூக அமைப்புகள், இந்தியாவைச் சேர்ந்த கலைஞர்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் தேவராட்டம், துடும்பாட்டம், கர்பா என பலதரப்பட்ட கலைப் படைப்புகளைப் பார்வையாளர்களுக்கு வழங்கவிருக்கின்றனர்.
ஆனந்தக் கொண்டாட்டம் 2025ன் முன்னோட்ட நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் இடம்பெற்றது.
ராஜஸ்தானில் பாம்பாட்டி சமூகத்திலிருந்து தோன்றிய கல்பேலியா நடனம், ராஜஸ்தானிய கலாசாரத்தின் ஒரு முக்கியச் சின்னமாகும்.
கறுப்பு நிறத்தில் பளபளப்பான பாவாடைகள் அணிந்து, நுட்பமான நகைகளால் அலங்கரிக்கப்பட்ட பெண் நடனக் கலைஞர்கள், பாம்புகளைப்போல சுழன்று, வளைந்து நெளிந்து செல்லும் அசைவுகளைப் பார்வையாளர்கள் காணலாம்.
“ஆட்டம் மூலம் நான் ராஜஸ்தான் சென்று கல்பேலியா நடனக் கூறுகளைக் கற்றுக்கொண்டேன். இரண்டு நாள்கள் வகுப்புகளுக்குச் சென்ற பிறகு இந்த நடனத்தை ஆனந்தக் கொண்டாட்டத்தில் படைக்க நான்கு மாதங்கள் பயிற்சி மேற்கொண்டோம். சிங்கப்பூரில் இந்த நடனத்தைப் பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனந்தக் கொண்டாட்டத்தில் இதைப் படைப்பது ஒரு நல்ல அறிமுகம்,” என்றார் நடனப் பயிற்றுவிப்பாளர் ஸ்ரீதேவி, 53.
தொடர்புடைய செய்திகள்
துடும்பாட்டம், வரலாற்று ரீதியாக தமிழ்நாட்டின் கொங்கு பகுதியைச் சேர்ந்தது. கிண்ண வடிவிலான துடும்பு, தபலா இசைக்கருவிபோல இருக்கும். இது மண்ணால் செய்யப்பட்டு அதன் ஒருபுறம் விலங்குகளின் தோலால் மூடப்பட்டிருக்கும். இது, இரண்டு குச்சிகளைக் கொண்டு இசைக்கப்படுகிறது.
“மூன்று மாதங்களாக நான் துடும்பாட்டம் கற்றுக்கொண்டு வருகிறேன். துடும்பாட்டம் பலருக்குத் தெரியாத ஒரு மரபுக்கலை. இளையர்கள் பலரையும் இந்தக் கலை எட்ட வேண்டும் என்பது எனது இலக்கு,” என்று துடும்பாட்டம் படைக்கவிருக்கும் ஷாஹிரா, 31, கூறினார்.
இந்தத் தனித்துவம் வாய்ந்த துடும்பாட்டத்தையும் பார்வையாளர்கள் எதிர்பார்க்கலாம்.
இந்த ஆண்டு 20 இந்திய மரபுக்கலை வடிவங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பல கலை வடிவங்கள் இதுவரை இந்த நிகழ்ச்சியில் இடம்பெறாதவை.
இந்த ஆண்டு 200க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் இளையர்களே.
சிங்கப்பூரின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆனந்தக் கொண்டாட்டம், சிங்காட்டம் மூலம் நாட்டின் பன்முகக் கலாசாரத்தை வெளிக்காட்டவுள்ளது.
நிகழ்ச்சியின் இன்னொரு சிறப்பம்சமாக, சிங்கப்பூரின் தமிழ் ராப் பாடகர் யங் ராஜா உருமி மேளம், செண்டை மேளம் இரண்டுடன் இணைந்து அதிவேக ராப் இசையைப் பாரம்பரிய தாளங்களுடன் கலந்து வழங்கவுள்ளார்.
சீன, மலாய் தாள இசையின் துடிப்பான ஆற்றலையும் ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்ற பாரம்பரிய இந்திய நாட்டுப்புறக் கலைகளின் துடிப்பையும் கலந்து இந்த நிகழ்ச்சி கிராமப்புறக் கலை மரபுகளையும் படைக்கவிருக்கிறது.
“மரபுக்கலைகள் மக்களை இணைப்பவை. இதற்கு சிங்கப்பூர் ஒரு சிறந்த தளம். சிங்கப்பூரில் பல்வேறு சமூகங்கள் இணைவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த மரபுக்கலைகளை பிறருக்குக் கற்றுத் தரும்போது அது மக்களை ஒன்றிணைக்க உதவுகிறது,” என்றார் ‘ஆட்டம்’ தலைமை நிர்வாக அதிகாரி சுப்பு அடைக்கலவன், 30.
ஆனந்தக் கொண்டாட்டம் சென்றாண்டு முதல்முறையாக அறிமுகம் கண்டபோது 18,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் நேரில் காண வந்திருந்தனர்.
ஆகஸ்ட் 29, 30ஆம் தேதிகளில் எஸ்பிளனேட் வெளிப்புற அரங்கத்தில் ஆனந்தக் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். கூடுதல் விவரங்களுக்கு www.atam.sg. இணையத்தளத்தை நாடலாம்.