இளையர்களால் மேடையேற்றப்பட்ட ஆனந்தக் கொண்டாட்டம் 2026

இளையர்களால் மேடையேற்றப்பட்ட ஆனந்தக் கொண்டாட்டம் 2026

3 mins read
607d9e05-3f49-49c9-8a79-d6c89896d7d3
நிகழ்ச்சியின் இறுதியில் கலைஞர்கள் அனைவரோடும் மேடையேறி மகிழ்ந்த துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ். - படம்: பே. கார்த்திகேயன்
Google News Preferred Icon
நிகழ்ச்சியின் நிறைவில் எழுந்துநின்று பாராட்டுத் தெரிவித்த துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ்.
நிகழ்ச்சியின் நிறைவில் எழுந்துநின்று பாராட்டுத் தெரிவித்த துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ். - படம்: பே. கார்த்திகேயன்
இந்தியாவின் பல கலைகளையும் தாள வாத்தியங்களையும் ஒன்றிணைத்த மேடை.
இந்தியாவின் பல கலைகளையும் தாள வாத்தியங்களையும் ஒன்றிணைத்த மேடை. - படம்: பே. கார்த்திகேயன்

இளையர்களே முன்னின்று நடத்திய ‘ஆனந்தக் கொண்டாட்டம் 2026’ கலைத் திருவிழா பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கும் வகையில் பிரம்மாண்டமாக அரங்கேறியது.

‘ஆட்டம்’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இக்கலைத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) மாலை எஸ்பிளனேட் வெளிப்புற அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற 150க்கும் மேற்பட்டவர்களுள் 80 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் இளையர்கள்.

மூன்றாவது ஆண்டாக நடைபெற்ற ஆனந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சியில், 18 அரிய பாரம்பரியக் கலை வடிவங்கள் மேடையேற்றப்பட்டன. அவற்றில் 10 கலை வடிவங்கள் முதன்முறையாகப் படைக்கப்பட்டு பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன.

“பாரம்பரியக் கலைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல இளையர்களின் தீவிரப் பங்களிப்பு மிகவும் அவசியம்,” என்று நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர்துறை; மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தெரிவித்தார்.

இனம், மொழி, சமயம் கடந்து சமூகமாக அனைவரும் ஒன்றாக இணைந்து இந்நிகழ்ச்சியைப் படைத்ததைக் கண்டபோது நெகிழ்ச்சியாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

திரு தினேஷ் தலைமைதாங்கும் ‘இணை’ குழு இந்தியச் சமூகத்தை ஒன்றிணைப்பது போல, ‘ஆனந்தக் கொண்டாட்டம்’ இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கலை வடிவங்களை ஒரே மேடையில் ஒருங்கிணைத்துள்ளது என்றும் அவர் பாராட்டினார்.

வண்ணக் கைக்குட்டைகளோடும் சலங்கை ஒலியோடும் மேடையேறிய ஒயிலாட்டத்தோடு பிரம்மாண்டமாகக் கலை திருவிழா தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, பறையின் அதிரடி முழக்கத்தோடும் நேரடி இசையோடும் கலைஞர்கள் ஆடிய சக்கைக் குச்சியாட்டம் அரங்கை அதிர வைத்தது.

“கலைஞர்களின் அதீத ஆற்றலே இக்கலை வடிவங்களின் முதன்மைச் சவால். அதே வேகத்தோடு ஆடப் பயிற்சி எடுத்தோம்,” என்றார் கம்பத்தாட்டத்தில் முதன்முறையாகப் பங்கேற்ற 34 வயது கலைஞர் அவினாஷ் ராய்.

நிகழ்ச்சி முழுவதுமே நேரடி இசையோடு படைக்கப்பட்டது. மேடையில் பாடப்பட்ட அனைத்துத் தமிழ்ப் பாடல்களும் புதிதாக வரிகள் எழுதப்பட்டு இசையமைக்கப்பட்டவை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘ஆனந்தக் கொண்டாட்டம்’ நிகழ்ச்சிக்குத் தமிழ்ப் பாடல்களை எழுதிவரும் பாடலாசிரியர் விவேக் பாரதி, தாம் எழுதிய வரிகள் மேடையில் உயிர் பெறுவதை முதன்முறையாக நேரில் கண்ட மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

“நேரடியாக ஒலிக்கும் பாரம்பரிய இசையும் அதற்கேற்ற வரிகளும் நம் அடையாளத்தோடு நம்மை ஆழமாக இணைக்கின்றன,” என்றார் அவர்.

தென்னிந்தியப் பாரம்பரிய ‘ஒப்பாரி’ கலை வடிவம், சீனர்களின் ‘எர்ஹூ’ இசைக் கருவியின் உருக்கமான நாதத்தோடு இணைந்து மேடையேறியபோது அரங்கம் அமைதியில் ஆழ்ந்தது. நெஞ்சில் தேங்கிய துக்கத்தை நீக்கி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தனர் கலைஞர்கள்.

தொடக்கப்பள்ளி மாணவர்கள் வட இந்தியத் தாள வாத்தியங்களோடு உருட்டு வாசித்து பார்வையாளர்களின் கரவொலியைப் பெற்றனர்.

சிங்கப்பூரின் பல்லினக் கலாசாரப் பிணைப்பைப் பிரதிபலிக்கும் வகையில் மலாய்ப் பாரம்பரியக் கலையான ‘குடா கெப்பாங்’, சீனர்களின் சிங்க நடனம், தமிழர்களின் மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் ஆகிய நான்கு கலை வடிவங்களும் இணைந்து மேடையேறி விழாவை நிறைவு செய்தன.

“குடா கெப்பாங் நடனம் மேடையேற்றப்படும் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. நான் ஜாவானியப் பின்னணியைக் கொண்டதால், அந்தப் பாரம்பரியக் கலையை மேடையில் கண்டபோது நான் மெய்சிலிர்ந்து போனேன்,” என்றார் தம் தோழியோடு நிகழ்ச்சியைக் கண்டு கழிக்க வந்த சில்வியா சியூ, 24.

பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளை இளையர்களின் கரங்களில் ஒப்படைத்து, அவற்றை உயிர்ப்புடன் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ‘ஆட்டம்’ அமைப்பின் முயற்சிக்கு இவ்வாண்டின் ஆனந்தக் கொண்டாட்டம் சான்றாக அமைந்தது.

குறிப்புச் சொற்கள்