முன்னோட்ட நிகழ்ச்சிகளோடு விரிவடைகிறது ‘ஆனந்தக் கொண்டாட்டம் 2026’

முன்னோட்ட நிகழ்ச்சிகளோடு விரிவடைகிறது ‘ஆனந்தக் கொண்டாட்டம் 2026’

3 mins read
f438204a-159b-41a5-a20b-fe26cd09f2b2
ஆனந்தக் கொண்டாட்டம் 2026இன் ஏற்பாட்டுக் குழுவினரோடு நிகழ்ச்சியைப் படைக்கவிருக்கும் கலைஞர்களுள் சிலர். - படம்: செய்யது இப்ராகிம்
Google News Preferred Icon

இந்தியப் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கும் நோக்கோடு ‘ஆட்டம்’ அமைப்பு ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் ஆனந்தக் கொண்டாட்டம் கலைத் திருவிழா இவ்வாண்டு புதுப் பொலிவுடன் விரிவடைந்துள்ளது.

எஸ்பிளனேட் வெளிப்புற அரங்கில் ஆகஸ்ட் 14ஆம் தேதி நடைபெறவிருக்கும் பிரம்மாண்டக் கலை நிகழ்ச்சிக்கு முன்னர், மூன்று நாள்களுக்கு முன்னோட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதில் கலாசாரப் பயிலரங்குகள், கலந்துரையாடல், சமூகப் பங்கேற்பு நிகழ்ச்சி என ஐந்து சிறப்பு அங்கங்கள் ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 13 வரை இடம்பெறுகின்றன.

முன்னோட்ட நிகழ்ச்சிகள் முதல் பிரதான ஆனந்தக் கொண்டாட்டத் திருவிழா வரை அனைத்து நிகழ்வுகளுக்கும் அனுமதி முற்றிலும் இலவசம்.

70 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட இளையர்களைக் கலைஞர்களாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இவ்வாண்டின் ஆனந்தக் கொண்டாட்டம், மரபுக்கலைகள் அடுத்த தலைமுறைக்கும் தடையின்றிச் சென்றடைவதை உறுதிசெய்கிறது. ‘பார்டர்லெஸ் பேமென்ட்ஸ்’, ‘நீலமணி ஃபவுண்டேஷன்’ அமைப்புகள் இவ்விழாவின் முக்கியப் புரவலர்கள்.

வரும் வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்குத் தொடங்கவிருக்கும் இவ்விழாவில் 100க்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டுக் கலைஞர்கள் ஒன்றிணைந்து மொத்தம் 18 பாரம்பரியக் கலைகளை மேடையேற்றவுள்ளனர். இதில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட 10 மரபுக்கலைகளும் ஐந்து பிற இந்தியக் கலைகளும் இடம்பெறுகின்றன.

இயற்கையோடு இயைந்த நாட்டுப்புறக் கலைகளை அழியாமல் மீட்டெடுத்து, வரும் தலைமுறையினருக்கு அவற்றைக் கொண்டுசேர்ப்பதே இத்திருவிழாவின் முதன்மை இலக்காகும்.

பல்லினச் சூழலைப் பிரதிபலிக்கும் கலைச் சங்கமம்

சிங்கப்பூரின் பல்லினப் பண்பாட்டுச் சூழலைப் பிரதிபலிக்கும் வகையில் மலாய், சீனக் கலாசார அங்கங்களும் விழாவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

ஜாவானியப் பாரம்பரியத்தைக் கொண்ட ‘குடா கெப்பாங்’ நடனமும் சீனர்களின் பாரம்பரியச் சிங்க நடனமும் இந்திய நாட்டுப்புறக் கலைகளோடு மேடையேறுகின்றன.

ஜாவானியப் பாரம்பரியத்தைக் கொண்ட ‘குடா கெப்பாங்’ நடனம்.
ஜாவானியப் பாரம்பரியத்தைக் கொண்ட ‘குடா கெப்பாங்’ நடனம். - படம்: செய்யது இப்ராகிம்

“வெவ்வேறு பின்னணியைக் கொண்ட கலைஞர்கள் ஒன்றிணைந்து அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ளும்போது, பாரம்பரியக் கலைகளின் எல்லை விரிவடைகிறது,” என்றார் ‘குடா கெப்பாங்’ நடனத்தை வழங்கும் ‘கேசெனியான் தேட்ஜா திமூர்’ கலைக்குழுவின் தலைவர் இஸ்வண்டியார்ஜோ, 43.

விழாவின் மற்றோர் அங்கமாகச் சீன இசைக்கருவியான ‘எர் ஹு’ இசையோடு ஒப்பாரிப் பாட்டும் இணைக்கப்பட்டு, ரசிகர்களுக்குப் புதியதோர் இசை அனுபவத்தை வழங்கவுள்ளது ஆனந்தக் கொண்டாட்டம்.

“சிங்கப்பூரின் தனித்துவமான பல்லினப் பண்பாட்டுச் சூழலைப் பிரதிபலிக்கும் வகையில், பல்லினக் கலாசாரக் கூறுகளையும் பல்வேறு பின்னணிகளைக் கொண்ட கலைஞர்களையும் ஒன்றிணைத்து மேடையேற்றுகிறோம்,” என்று ‘ஆட்டம்’ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஆ. விஷ்ணு வர்தினி தெரிவித்தார்.

மேடையேறும் புதிய கலை வடிவங்கள்

இவ்வாண்டு மொத்தம் 10 புதிய பாரம்பரியக் கலை வடிவங்கள் முதன்முறையாக மேடையேற்றப்படுகின்றன.

அவற்றில் ஒன்றான சலங்கை கிட்டியாட்டம், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திற்குரிய வேகமும் விறுவிறுப்பும் நிறைந்த நாட்டுப்புறக் கலைவடிவம். இந்நிகழ்ச்சியை சிங்கப்பூர் இளையரே முழுமையாக இயற்றி மேடையில் படைக்கவும் உள்ளனர்.

கோவில் திருவிழாக்களில் ஆடப்படும் கொங்குப் பகுதியின் கம்பத்தாட்டம் இம்முறை மேடையேறும் மற்றொரு புதிய கலை வடிவம். இதுவே இன்றைய திரைப்படக் ‘குத்து’ நடனங்களுக்கு முன்னோடியாக விளங்கியிருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

கொங்குப் பகுதியின் கம்பத்தாட்டம் இம்முறை மேடையேறும் மற்றொரு புதிய கலை வடிவம்.
கொங்குப் பகுதியின் கம்பத்தாட்டம் இம்முறை மேடையேறும் மற்றொரு புதிய கலை வடிவம். - படம்: செய்யது இப்ராகிம்

உருட்டு, ஜால்ரா இசைக்கருவிகளை இணைத்து வழங்கப்படும் புதுமையான இசைக் கோவையை முழுமையாகத் தொடக்கப்பள்ளி மாணவர்கள் வாசிக்கவுள்ளனர்.

மேடையில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களும் புதிதாக உருவாக்கப்பட்டு வரிகள் எழுதப்பட்டு நேரலை இசையாக வழங்கப்படவுள்ளன.

ஒற்றுமையைப் பறைசாற்றும் பண்பாட்டுப் பாலம்

தற்போதைய காலகட்டத்திற்குப் பொருத்தமான வகையில், ‘அமைதியும் நல்லிணக்கமும்’ என்ற கருப்பொருளைக் கொண்டு ‘ஆனந்தக் கொண்டாட்டம் 2026’ வடிவமைக்கப்பட்டுள்ளது.

சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தக் கலையும் இசையும் பாலமாகச் செயல்பட முடியும் என்பதை இவ்விழா உணர்த்துகிறது.

“பாரம்பரியக் கலைகளுக்குத் தகுந்த அங்கீகாரத்தை வழங்குவது நம் சமூகத்தின் கடமை,” என்று வலியுறுத்தினார் ‘ஆட்டம்’ ஆலோசனைக் குழுவின் தலைவரும் தமிழ் முரசு ஆசிரியருமான திரு த. ராஜசேகர்.

குறிப்புச் சொற்கள்