சிங்கப்பூரில் விலங்குகள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துள்ள நிலையில், எவ்வாறு விலங்கு பாதுகாப்பை மேம்படுத்துவது என்பது குறித்து மக்கள் செயல் கட்சி (மசெக), சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் (சிஜக) இளையர் பிரிவுகள் பொதுமக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தின.
மே 31ஆம் தேதி மசெகவும் ஜூன் 15ஆம் தேதி சிஜகவும் அக்கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடு செய்தன.
ஊடகங்களில் தெரிவிக்கப்படும் விலங்குத் துன்புறுத்தல் சம்பவங்களைத் தாண்டி, நாம் கேள்விப்படாத எத்தனையோ துன்புறுத்தல் சம்பவங்கள் நிகழ்கின்றன என்ற கருத்தைப் பலரும் தெரிவித்தனர்.
சிஜகவின் கலந்துரையாடலில் பங்கேற்ற பூனை பராமரிப்பு ஆலோசகர் ஷெல்பி தோஷி, “பொது இடங்களிலேயே பெரும்பாலான துன்புறுத்தல்கள் நிகழ்கின்றன. அவற்றில் பலவும் தெருப்பூனைகளுக்கு நேர்ந்தவை,” என்றார்.
மனிதர் சார்ந்த குற்றங்களும் விலங்கு சார்ந்த குற்றங்களும் வெவ்வேறு முறைகளில் கையாளப்படுவதை அவர் சுட்டினார். “விலங்குத் துன்புறுத்தல் சம்பவங்களைத் தேசியப் பூங்காக் கழகம், விலங்குநல மருத்துவச் சேவை ஆகிய அமைப்புகளே பெரும்பாலும் விசாரிக்கும்,” என்றார் அவர்.
சிங்கப்பூரில் பெரும்பாலான இடங்களில் கண்காணிப்புக் கருவிகள் இருந்தும் விலங்குகளைத் துன்புறுத்தியவர்களைப் பல நேரங்களில் பிடிக்கமுடியவில்லை என்றார் திருவாட்டி தோஷி. “ஓர் இடத்தில் கண்காணிப்புக் கருவி இருப்பது தெரிந்தால் யாரேனும் விலங்குகளைத் துன்புறுத்துவார்களா?” என்றும் அவர் கேட்டார்.
இதனால் பல பராமரிப்பாளர்களும் துன்புறுத்தல் சம்பவங்கள் பற்றிப் புகாரளிக்கத் தயங்குவதாக அவர் கூறினார்.
“பலரும் புகைப்படங்கள் எடுத்து அனுப்புகின்றனர். ஆனால், குற்றவாளிகளைப் பிடிக்கமுடியாதபோது அவர்கள் தங்கள் முயற்சி பயனற்றது எனக் கருதுகின்றனர்,” என்றார் திருவாட்டி தோஷி.
தொடர்புடைய செய்திகள்
இதற்குத் தீர்வுகாண சமூகத்தினர் செய்ய வேண்டியது குறித்தும் அவர் கருத்துரைத்தார்
“உங்கள் வட்டாரத்தில் உள்ள பூனைகளுடன் உறவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஏதேனும் பூனை திடீரெனக் காணாமல் போனதா? உடனே புகாரளியுங்கள். குற்றவாளி பிடிபடாவிட்டாலும் தரவுகளுக்காவது புகாரளியுங்கள்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
கட்டமைப்புகளின் அளவில் சில மாற்றங்களையும் திருவாட்டி தோஷி பரிந்துரைத்தார்.
அண்மைய துன்புறுத்தல் சம்பவங்கள் எதனால் சாலை விபத்துகளாக வகைப்படுத்தப்பட்டன என்பது குறித்து மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றார் அவர். அமைப்புகள் விலங்குப் பராமரிப்பாளர்களுடன் நெருக்கமாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விலங்குத் துன்புறுத்தலுக்கான காரணம்
விலங்குகளைத் துன்புறுத்துவோரை உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள், விலங்குகளை நிராகரிப்பவர்கள், வேண்டுமென்றே துன்புறுத்துபவர்கள் என மூன்று வகையினராகப் பிரித்தார் மூத்த மனநல ஆலோசகரான டாக்டர் ஜேக்கப் ராஜேஷ்.
“சிலர் சுற்றத்தார்மீதுள்ள கோபத்தை விலங்குகள்மீது காட்டுவர். சிலர் தாமே சிறுவயதில் துன்புறுத்தலுக்கு ஆளானதால் கசப்பான நினைவுகள் திரும்பும்போது அவ்வாறு செய்வர். சிலர் தனிமையைப் போக்க அவ்வாறு செய்வர்,” எனச் சில காரணங்களை அவர் சுட்டினார்.
பெற்றோர் விலங்குகளைத் துன்புறுத்தினால் பிள்ளைகளும் அதிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடும் என்றார் அவர்.
“மனநல மருத்துவராக என் பணி, குற்றவாளிக்கு ஏதேனும் மனநலப் பிரச்சினை இருக்கிறதா, அதற்கும் அவர் துன்புறுத்தியதற்கும் தொடர்பு உள்ளதா என்பதைக் காண்பதே. அப்படித் தொடர்பு இருந்தால், சிறைத்தண்டனைக் காலம் குறைக்கப்படலாம் அல்லது கட்டாய சிகிச்சை உத்தரவு விதிக்கப்படலாம்,” என்றார் டாக்டர் ஜேக்கப்.
‘கூடுதல் தண்டனை தேவை’
“தற்போது விலங்குகளைத் துன்புறுத்துவோர்க்கு, குறைந்தது ஓராண்டுக்கு எந்தச் செல்லப்பிராணியையும் வைத்திருக்கமுடியாத வகையில் தகுதிநீக்க ஆணை (Disqualification Order) பிறப்பிக்கப்படலாம்.
“ஆனால், அந்தக் குற்றவாளியுடன் தங்குபவர்கள் தொடர்ந்து செல்லப்பிராணிகளை வைத்திருக்கலாம். அப்போது, குற்றவாளிக்கும் செல்லப்பிராணியோடு தொடர்ந்து தொடர்பு இருக்கக்கூடுமே!” என்பதைச் சுட்டினார் குற்றவியல் வழக்கறிஞர் ஜேம்ஸ் கோமெஸ் மெசாயா.
அதனால், “தகுதிநீக்க ஆணை குறைந்தது 12 முதல் 24 மாதங்கள் வரையிலும் விதிக்கப்பட வேண்டும். குற்றவாளியுடன் வாழ்பவருக்கும் அது பொருந்தவேண்டும். மறுபடியும் துன்புறுத்துவோருக்கு அந்த ஆணை வாழ்நாள் முழுவதும் நீட்டிக்கப்பட வேண்டும். செல்லப்பிராணியை ஒருவரிடம் விற்பதற்குமுன் அவர் முன்பு குற்றம் புரிந்தவரா என்பதைத் தெரிந்துகொள்ள உதவும் பதிவேட்டைத் தயாரிக்கவேண்டும்,” என்பன போன்ற ஆலோசனைகளை அவர் முன்வைத்தார்.
பெரும்பாலான விலங்குத் துன்புறுத்தல் குற்றங்களுக்குத் தேசியப் பூங்காக் கழகமே நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் நிலையில், அதற்குப் பதிலாக மற்ற குற்றங்களைப்போல் அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரியே வழக்குத் தொடுக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
காவல்துறைக் கண்காணிப்புப் படக்கருவிகளை தேசியப் பூங்காக் கழகம் பார்வையிடுவதற்கான செயல்முறையை இன்னும் எளிதாக்கவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
சொந்த அனுபவத்தால் பிறந்த சமூக முயற்சி
தம் மூன்று நாய்களை ஆறு மாதங்களில் புற்றுநோய்க்கும் கிருமிக்கும் இழந்த மெலடி டான், சமூகத்தில் விழிப்புணர்வை அதிகரிக்க ‘ஹோப் ஃபார் அனிமல்ஸ்’ எனும் லாப நோக்கற்ற அமைப்பைத் தொடங்கினார்.
“சிறுவர்களே நம் எதிர்காலம். அதனால் பள்ளிகளில் விலங்குநலன் பற்றிப் பயிலரங்குகளை நடத்த விரும்புகிறோம். செல்லப்பிராணி தொடர்பான இணைப்பாடங்களையும் அறிமுகப்படுத்த விரும்புகிறோம்,” என்றார் அவர்.
தரவுச் சேகரிப்பு
சிஜக தலைவர் பால் தம்பையா, “அரசாங்கம் தரவுகளின் அடிப்படையில் இயங்குகிறது. அதனால், வெவ்வேறு குழுக்கள் விலங்குத் துன்புறுத்தலால் மனத்தளவிலும் பொருளியல் சார்ந்தும் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தரவுகளாகக் காட்ட வேண்டும். தற்போது சிஜக, குடிமைச் சமூக அமைப்புகளுடன் கலந்துரையாடுகிறது. அதன்வழி கிடைக்கும் பரிந்துரைகளை சிஜக அறிக்கையாக வெளியிட வாய்ப்புள்ளது,” என்றார் .
தேசிய சுற்றுப்புற வாரியம் சுற்றுப்புறத் தூய்மைக்குச் செய்வதுபோல், விலங்குத் துன்புறுத்தலைத் தடுக்கவும் தொண்டூழியர்களுக்குப் பயிற்சியளிக்கலாம் என்ற பரிந்துரை தம்மைக் கவர்ந்ததாகவும் அவர் கூறினார்.