‘கிரியேட்டிவ் ஹேண்ட்ஸ்’ நிறுவனம் ஏற்பாடு செய்த வரைகதைப் பயிலரங்கு மாணவர்களுக்கு உயிரோவிய வரைகதைமூலம் தமிழ்மொழிமீது ஆர்வமூட்ட முனைந்தது.
தமிழில் உயிரோவியச் சிறுகதைகளை உருவாக்கி, செயற்கை நுண்ணறிவுத் திறன்களை மாணவர்கள் கற்றுக்கொள்ளவும் அந்தப் பயிலரங்கு உதவியது.
தமிழ் இளையர் விழாவையொட்டி செப்டம்பர் 12ஆம் தேதி காலை 10 மணியளவில் விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் ‘பாசிபிலிட்டி’ அரங்கில் அப்பயிலரங்கு நடைபெற்றது.
அதன் ஓர் அங்கமாக, ஆசிரியர்களும் மாணவர்களும் குழுக்களாகப் பிரிந்து, கலந்தாலோசித்து வரைகதையை உருவாக்கி மேடையில் படைத்தனர். ஒவ்வொரு குழுவும் தங்களது கதை உருவான விதம், கதாபாத்திரத்தின் வடிவமைப்புகள், வரைகதையைக் கற்றுக்கொண்ட அனுபவம், அதில் எதிர்கொண்ட சவால்கள் ஆகியவற்றை எடுத்துரைத்தனர்.
நட்பின் சுவை, மந்திரப் பென்சில், மாவீரன் சிட்டு, என்னப் போல யாரும் இல்லை போன்ற தலைப்புகளில் வரைகதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
நட்பின் சுவை என்ற தலைப்பில் வரைகதை உருவாக்கிய நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் ஐஸ்வர்யா, ஷிவாணி, ரேஷிகா, பிரித்தா ஆகியோர் முதல் பரிசைத் தட்டிச் சென்றனர்.
மற்றக் குழுக்கள் போலவே இந்தக் குழு பல வாரங்கள் கடின உழைப்பையும் நேரத்தையும் அர்ப்பணித்து இந்த உயிரோவிய வரைகதையை உருவாக்கியது.
“இந்த உயிரோவியத்தை உருவாக்க எங்களுக்கு இரண்டு மாதங்கள்வரை ஆனது. அதன் தயாரிப்பில் பல்வேறு கட்டங்கள் இருந்தன. எங்கள் குழுவில் ஒவ்வோர் உறுப்பினருக்கும் திரைக்கதை எழுதுதல், கதைப்பலகை வடிவமைப்பு, பட உருவாக்கம் போன்ற வெவ்வேறு பணிகள் ஒதுக்கப்பட்டன. இந்தப் படைப்பாக்கம் எவ்வாறு குழுவாகச் செயல்படுவது என்று எங்களுக்குக் கற்றுக்கொடுத்தது,” என்று கூறினார் பிரித்தா, 18.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த வரைகதைப் பயிலரங்கு நடைபெற்று வந்துள்ளது.
இப்பயிலரங்கை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான ‘கிரியேட்டிவ் ஹேண்ட்ஸ்’ நிறுவனர் ஜெகன்னாத் ராமானுஜம், 38, “மின்னூல்கள், உயிரோவியங்கள் போன்ற தமிழ் விளக்கப்படக் காட்சிகளின் மூலம் மாணவர்களுக்குக் கற்பித்தால், அவர்களுக்குக் கற்கும் ஆர்வம் அதிகரிக்கும். மேலும், அவர்களால் உயிரோவியத் திறன்களையும் தமிழ்மொழி கற்றலையும் மிக எளிதாக வளர்த்துக்கொள்ள முடியும்,” என்று சொன்னார்.
இவ்வாண்டுப் பயிலரங்கில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். படைக்கப்பட்ட ஆறு உயிரோவியக் கதைகளில், ஐந்து உயிரோவியக் கதைகள் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களால் தயாரிக்கப்பட்டன. அவற்றில் ஓர் உயிரோவியக் கதை உயர்நிலை 1 மாணவர்கள் இருவரால் உருவாக்கப்பட்டது என்றும் திரு ஜெகன்னாத் குறிப்பிட்டார்.
“இந்தத் தமிழ் உயிரோவியப் பயிலரங்கு எங்களுக்கு புதிய திறன்களைக் கற்பித்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற மேலும் பல உயிரோவியங்களை உருவாக்குவதற்கான ஆர்வத்தை இந்தப் பயிலரங்கம் என்னுள் வளர்த்துள்ளது,” என்று போவன் உயர்நிலைப் பள்ளி மாணவியான நிக்கித்தா சத்தியமூர்த்தி, 13, கூறினார்.
