இஷ்தாரா ஜுவல்லரி நகைக்கடை தனது 40ஆம் ஆண்டு நிறைவு விழாவை சனிக்கிழமை (பிப்ரவரி 7) விமரிசையாகக் கொண்டாடியது.
எண் 111 சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள இந்த நகைக் கடையில் நடைபெற்ற இக்கொண்டாட்டத்திற்குப் பிரபல இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் பெரும் வரவேற்புடன் வருகையளித்தார்.
மழையைப் பொருட்படுத்தாமல் ஏறத்தாழ 150 ரசிகர்கள் நகைக் கடையை சுற்றித் திரண்டு நிற்க, செண்டை மேள இசையோடு அனிருத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கலாசார, சமூக, இளையர்துறை; மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தம் மனைவியோடு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
வழக்கமான வாடிக்கையாளர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் என ஏறத்தாழ 100 பேர் விழாவில் பங்கேற்றனர்.
“நீங்கள் வந்து மகிழ்ந்த என் இசைக் கச்சேரிகளுக்குப் பின் இருக்கும் முகம் பார்த்திபன். அவரது உழைப்பே கச்சேரிகளின் வெற்றிக்குக் காரணம்,” என ரசிகர்கள் முன்னிலையில் இஷ்தாரா ஜுவல்லரி உரிமையாளர் பார்த்திபன் முருகையனுக்குப் புகழாரம் சூட்டினார் அனிருத்.
உரையாற்றிய பின் ‘தங்கமே’ பாடலை அனிருத் பாட, ரசிகர் கூட்டத்தில் பலத்த கரவொலி எழுந்தது.
இஷ்தாரா ஜுவல்லரி தனது 40ஆம் ஆண்டுவிழாவை முன்னிட்டு, தனது சிராங்கூன் சாலை நகைக் கடையைப் புதுப்பொலிவுடன் விரிவுபடுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அனிருத், துணை அமைச்சர் தினேஷ், இஷ்தாரா ஜுவல்லரி கடைத் தலைவரும் அதன் நிர்வாக இயக்குநருமான பார்த்திபன் முருகையன் ஆகிய மூவரும் இணைந்து விரிவடைந்துள்ள நகைக் கடையைத் திறந்துவைத்தனர்.
சந்தர் ரோட்டில் ஒரேயொரு கிளையோடு 1986ல் நிறுவப்பட்ட இந்தியன் ஜுவல்லர்ஸ், 2015ல் இஷ்தாரா ஜுவல்லரி என்று பெயர் மாற்றம் கண்டது.
இன்று, ‘லுவேனஸ்’ என்ற அனைத்துலகத் துணை நிறுவனத்தின் கிளைகள் உட்பட உலகம் முழுதும் ஒன்பது கிளைகளோடு இஷ்தாரா ஜுவல்லரி செயல்பட்டு வருகிறது.
இஷ்தாரா ஜுவல்லரியின் 40ஆம் ஆண்டு நிறைவு விழாவின் ஓர் அங்கமாக, ‘மைஇஷ்தாரா’ (MyIshtara) என்ற புதிய செயலி அறிமுகம் கண்டது.
வீட்டிலிருந்தே தங்கம் வாங்குவது, செயற்கை நுண்ணறிவு அம்சங்கள், சலுகை, சேமிப்புத் திட்டம் என வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மெருகூட்ட பல வசதிகளை இச்செயலி கொண்டுள்ளது.
இந்தியச் சமூகத்தினரின் தேவைகளுக்கேற்ப தொடர்ந்து சேவை வழங்கி உலகளவில் பிரபல நகைக் கடையாக உருவெடுப்பதே இஷ்தாரா ஜுவல்லரியின் நோக்கம் என்றார் திரு பார்த்திபன், 55.
“அனைத்து வயதிலும் எங்களுக்கு வாடிக்கையாளர்கள் இருப்பதால், அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் அனிருத்தின் வருகை அமைந்தது. இது மேலும் விழாவிற்குச் சிறப்பு சேர்த்தது,” என்றார் அவர்.
இஷ்தாரா ஜுவல்லரி அதன் 40ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, இவ்வாண்டு முழுவதும் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புச் சலுகைகளை வழங்குகிறது.

