வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய சிங்கப்பூர் வரும் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு ஆதாரமாகவும் ஆதரவாகவும் விளங்கி வருகிறது அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம்.
புதிய பட்டதாரிகள் மட்டுமின்றி, இங்கு பணிபுரியும் முன்னாள் மாணவர்கள், அவர்களின் குடும்பத்தார் முதலியோர் இச்சங்கத்தின் உருவில் கடலுக்கப்பால் இங்கு ஒரு குடும்பத்தினைக் கண்டுள்ளனர்; பிணைப்புகளை வலுப்படுத்திக் கொண்டுள்ளனர்.
கடந்த 25 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேர்விட்டுள்ள இச்சங்கம், ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15ஆம் தேதி) வெள்ளிவிழா காண்கிறது. HomeTeam NS Khatibஇல் மாலை 5 மணிக்கு விழா நடைபெறும்.
சிங்கப்பூரில் சமூக சேவை செய்வதை தமது முதன்மையான நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளது இச்சங்கம். மக்கள் கழகத்தோடு ஈராண்டுகாலமாக தீவு முழுவதும் பல்வேறு அடித்தள நிகழ்வுகளில் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் தொண்டூழியர்களாகக் களமிறங்கி உள்ளனர்.
கடந்த 11 ஆண்டுகளாக தமிழ்மொழி மாதத்தின்போது தமிழுணர்வூட்டும் முன்னெடுப்புகளையும் இச்சங்கத்தினர் செயல்படுத்தி உள்ளனர். குறிப்பாக, இளம் மாணவர்களிடத்தில் தமிழ்மொழி புழக்கத்தைக் கூட்டும் நோக்கில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. தேசிய நூலக வாரியத்துடனான கூட்டு முயற்சியில், 2019 முதல் நூல் ஆய்வுகள் செய்வதிலும் இவர்களின் பங்களிப்பு இருந்துள்ளது.
கொவிட்-19 காலத்தில் எதிர்பட்ட சிக்கல்கள் பலவகை. சங்க தொண்டூழியர்கள், உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 15இலிருந்து 20 விழுக்காட்டினர் தாயகத்துக்கோ பிற நாடுகளுக்கோ புலம்பெயர்ந்ததாகக் கூறினார் சங்கத்தின் தலைவர் கருணாநிதி, 54. அவர்களில் பலருக்கு அறிவிப்பின்றி உடனடியாகப் புலம்பெயரவேண்டிய பொருளியல் நெருக்கடி.
“வேலை, வசதி வாய்ப்புகள் அக்காலத்தில் சரிந்தன; விலைவாசியும் ஏற்றம் கண்டது. அதற்கேற்ற ஊதிய உயர்வு தாழ்ந்தே இருந்தது. இத்தகைய சிக்கல்கள் சங்க உறுப்பினர்களின் நம்பிக்கையைச் சற்று குலைத்தன,” என்றார் விமானத்துறையில் பணியாற்றும் திரு கருணாநிதி.
உறுப்பினர்களுக்கு இடையேயான நல்லுறவுகளை மீண்டும் வலுப்படுத்தும் சவாலை 2022ஆம் ஆண்டில் தலைமை பொறுப்பு ஏற்ற திரு கருணாநிதி எதிர்கொண்டார். கூடுதலான ஒன்றுகூடல்கள், வாழ்க்கைத்தொழில் வழிகாட்டுதல்கள் போன்ற முயற்சிகள் சங்கத்துக்குப் புத்துணர்ச்சியும் புதுப்பொலிவும் ஊட்டியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இளரத்தத்தைப் பாய்ச்ச வேண்டி அவரும் சங்கத்தினரும் பாடுபட்டு, அவர்களை சரியான வேலை வாய்ப்புகளுக்கு இணைக்கும் பணியிலும் இறங்கியுள்ளனர். சிங்கப்பூர் வேலைத் துறையில் அத்தியாவசியமாக உள்ள பல்வேறு வாழ்க்கைத் திறன்களையும் தலைமைத்துவப் பண்புகளையும் இவ்விளையர்களிடத்தில் வளர்ப்பதும் அவர்களின் நோக்காகும். அதற்கான தளங்களாக தங்களின் ஏற்பாட்டில் நடந்தேறும் சமூக நிகழ்ச்சிகள் அமைகின்றன.
எதிர்மறையான விளைவுகள் இருப்பினும் கொவிட்-19 காலத்தில் பெண் தொழில்முனைவர்கள் சங்கத்தில் அதிகரித்ததை திரு கருணாநிதி கவனித்தார். வீட்டிலிருந்தே உணவுத் தயாரிப்பு, விநியோகத்தில் உள்ளோர், துணைப்பாடம் எடுப்போர், ஒப்பனைத் தொழிலில் உள்ளோர் என இவர்களுக்கான தனிக்கிளை ஒன்று கடந்தாண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது.
சிங்கப்பூரில் தொழில்புரியும் ஏறத்தாழ 75 அண்ணாமலை முன்னாள் மாணவர்களைத் தொடர்புகொண்டு அவர்களின் பரிந்துரைகளைக் கேட்டுக்கொண்டதோடு, அவர்களில் பலரைப் பெண் சிறுதொழில்முனைவர்களோடு இணைக்கும் முயற்சி இடம்பெற்றது.
அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களில் பலர் சிங்கப்பூரில் அடித்தள, சமூகத் தலைவர்களாக உருவெடுத்துள்ளனர். அவர்களின் கூட்டுறவுகளும் இச்சங்கம் சிங்கப்பூர் சமூகத்துக்கும் தங்களின் பல்கலைக்கழகத்துக்கும் பங்களிக்க கூடுதல் வாய்ப்புகள் அளித்திருப்பதாகக் கூறினார் திரு கருணாநிதி.
“செறிவான வழிகாட்டுதலுக்கான தளமாகவும் நாங்கள் விளங்க விழைகிறோம். இங்கு புலம்பெயர்ந்தோர் இங்குள்ள சூழலுக்குப் பக்குவப்பட்டு அதில் தொலைநோக்குப் பார்வையோடு நடைபோட வேண்டும் என்பது எங்கள் நோக்கம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் வேரூன்றித் தழைக்கும் எண்ணத்தில் வந்திறங்கும் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டதாரிகளின் குடும்பங்கள் குடியுரிமை பெற ஊக்குவிக்கப்படுவதோடு, அப்பயணத்துக்குத் தேவையான ஆதரவைச் சங்கத்திடமிருந்து பெறுகின்றனர்.
தற்போது இச்சங்கத்தில் 350 வாழ்நாள் உறுப்பினர்கள், 200 இளம் உறுப்பினர்கள் என மொத்தம் 1,200 உறுப்பினர்கள் இயங்கி வருகின்றனர். தொடர்ந்து காலமாற்றத்துக்கு ஏற்ப தேவையறிந்து நல்லாதரவையும் ஊட்டமும் அளிக்கும் முனைப்பில் அண்ணாமலை முன்னாள் மாணவர் சங்கம் உள்ளது.

