மருத்துவப் படிப்பைத் தொடங்குவதற்குச் சிறிது நாள் முன்பு, 23 வயதான அபர்ணா கிரி சங்கர், தனது சிறுவயதுக் குறிப்பேடுகளைப் புரட்டிப் பார்த்தார். அப்போது, குழந்தைத்தனமான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு பக்கம் அவர் கண்ணில் பட்டது.
அதில், இந்தியாவின் மறைந்த முன்னாள் அதிபர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எழுதிய ‘இக்னைடெட் மைண்ட்ஸ்’ (Ignited Minds) புத்தகத்தின் நோயியல் (Pathology) குறித்த வரிகளை அடிப்படையாகக் கொண்டு, தமது எதிர்காலத்தைப் பற்றி அபர்ணா எழுதியிருந்த உறுதிமொழி இடம்பெற்றிருந்தது.
‘நோயியல்’ என்ற சொல்லின் பொருள்கூட அந்த வயதில் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. இருப்பினும், “நோயாளிகளின் வேதனையைக் குறைப்பதுடன், மனித உடல் இயங்கும் விதத்தைக் கண்டறியும் ஆய்வுகளிலும் ஈடுபடவேண்டும்,” என்று அவர் உறுதியெடுத்திருந்தார்.
“அது ஒரு பெரிய வார்த்தை. ஆனால், இயல்பாகவே அது என்னை ஈர்த்தது,” என்று அபர்ணா குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் 14ஆம் தேதி நடைபெற்ற டியூக்-என்யுஎஸ் (Duke-NUS) மருத்துவக் கல்லூரியின் புதிய மாணவர்கள் மருத்துவப் பற்றுறுதி எடுக்கும் நிகழ்ச்சியில் (White Coat Ceremony) பங்கேற்ற மருத்துவ மாணவர்கள் 77 பேரில் அபர்ணாவும் ஒருவர். எதிர்காலத்தில் மருத்துவராவதற்கான அதிகாரபூர்வப் பயணத்தை அவர் இதன்மூலம் தொடங்கினார்.
இவ்வாண்டு இக்கல்லூரியில் அதிக எண்ணிக்கையிலான மாணவிகள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். மொத்தமுள்ள 49 மாணவிகளில் 38 பேர் வேறு துறைகளில் பணியாற்றிய பின்னர் மருத்துவப் படிப்புக்கு மாறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அபர்ணா, பொதுச் சுகாதாரத் துறையிலிருந்து வந்தவர். மனிதர்களை நேரடியாக அணுகுவதைவிட, ஒட்டுமொத்த மக்கள்தொகையைக் குறிக்கும் தரவுகளையும் புள்ளிவிவரங்களையும் ஆய்வு செய்வதே அவரது பணியாக இருந்தது.
“அவை பெரிய எண்களாக இருக்கலாம். ஆனால், ஒவ்வோர் எண்ணும் ஒரு மனிதரைக் குறிக்கிறது; அவருக்கென்று ஒரு குடும்பமும் சூழலும் இருக்கிறது,” என்றார் அவர்.
அந்த எண்ணமே அபர்ணாவை வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு இட்டுச்சென்றது. சிறுவயதில் மனத்தில் உதித்த ஆசையின் தொடர்ச்சியாக நோயியல் துறையில் இணைவது அவருக்கு இயல்பான ஒன்றாக அமைந்தது.
கடந்த ஆண்டு பட்டப்படிப்பை முடித்தவுடன், தேசியச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் மக்கள் சுகாதார அலுவலகத்தில் சேர்ந்தார். அங்கு நோய்களின் தாக்கம், உடல் பலவீனம், சிகிச்சை முடிவுகள் போன்றவை குறித்து அவர் ஆய்வு செய்தார்.
“உணவுவழி ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் (dietary antioxidants), டெங்கிக் கிருமி பரவும் வழிகள் குறித்து ஆய்வு செய்தோம். இவற்றை மக்கள்தொகையின் ஒட்டுமொத்தச் சுகாதார மேம்பாட்டிற்குப் பயன்படுத்துவது குறித்து அறிய விரும்பியதே, பொதுச் சுகாதாரத்தைப் பகுதிப் பாடமாகத் தேர்ந்தெடுக்கக் காரணமானது,” என்று ‘தப்லா!’ வார இதழிடம் அவர் கூறினார்.
புதிய மருந்தைக் கண்டுபிடிப்பதும் நோய்களின் இயங்குமுறையைப் புரிந்துகொள்வதும் ஆர்வமூட்டுவதாக இருந்தாலும், அதனை மனித உடலில் நேரடியாகச் செயல்படுத்திப் பார்க்கும் வாய்ப்பு விடுபடுவதாக அபர்ணா உணர்ந்தார்.
இந்த இலக்கை அடைய தமது குடும்பத்தினர் அளித்த அளப்பரிய ஆதரவையும் அவர் நினைவுகூர்ந்தார்.
அவரைவிட எட்டு வயது மூத்த அவரது அண்ணன் தரவு ஆய்வாளராகப் பணியாற்றுகிறார். சொந்தத் திறமைகள் குறித்தோ முடிவுகள் குறித்தோ சந்தேகம் எழும்போது, அபர்ணா முதலில் அணுகுவது அவரைத்தான். மருத்துவத் துறையின் சவால்களை அபர்ணா உணர்வதற்கு முன்பே அவரது பெற்றோர் புரிந்துகொண்டிருந்தனர்.
“இவ்வளவு பெரிய பயணத்தை மேற்கொள்வது தனிப்பட்ட விஷயமன்று. குடும்பமாக இணைந்து மேற்கொள்ளவேண்டிய கடப்பாடும் தியாகமும் இது,” என்றார் அபர்ணா.
படிப்புக்கு அப்பாற்பட்டு, நான்கு வயதிலிருந்தே கர்நாடக இசையைக் கற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கட்டுப்பாடுகளுடன் கூடிய கலைவடிவமாக இருந்தாலும், அடிப்படைகளைக் கற்றுக்கொண்ட பிறகு ராக ஆலாபனை வழி சொந்தப் பாணியை உருவாக்க இசை வழிவகுக்கிறது என்பது அவரது கருத்து.
மருத்துவத்திற்கும் இசைக்கும் இடையே அவர் ஒரு தொடர்பைக் காண்கிறார். இரண்டும் தொடர்புகொள்வதற்கான வடிவங்கள்; தேவைப்படுவோர்க்கு ஆறுதலையும் தெளிவையும் வழங்குபவை. இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலை தமக்கு வரக்கூடாது என்பதே அவரது விருப்பம்.
எந்தத் துறையில் சிறப்பு நிபுணத்துவம் பெறுவது என்பதைப் பற்றி அபர்ணா இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், தாம் அடைய விரும்பும் இலக்கு குறித்துத் தெளிவான பார்வை கொண்டுள்ளார்.
“என்னுடைய நோயாளிகளின் சுகாதாரப் பயணத்தில் சிறிய அளவிலாவது ஆக்ககரமான மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தால், அதுவே எனக்குக் கிடைக்கும் மிகப்பெரிய வெற்றி,” என்று அபர்ணா கூறினார்.

