மலேசிய உணவங்காடி ஒன்றில், உண்ணத்தக்க உணவுப் பொருள்கள் குப்பையில் வீசப்பட்டு விரயமாவதைக் கண்ட 30 வயது ஹரிஹரன் நாகேந்திரன், இப்பிரச்சினைக்கு நிலையான தீர்வு காண வேண்டும் என உறுதிபூண்டார்.
பொதுவாக மலேசியாவில், மீதமான உணவை ஆதரவற்றோர் இல்லங்களுக்கும், உணவுத் தொண்டு இயக்கங்களுக்கும் சில உணவகங்கள் நன்கொடையாக வழங்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளதாகத் திரு ஹரிஹரன் குறிப்பிட்டார்.
இருப்பினும், பெரும்பாலான உணவக உரிமையாளர்கள் உன்னதமாக இந்தச் செயலைச் செய்ய முன்வருவதில்லை என அவர் சுட்டினார்.
“மீதமுள்ள உணவுகளைத் தானமாக வழங்கும்போது அவை கெட்டுப்போவது போன்ற சிக்கல்கள் ஏற்படுமோ எனப் பல உணவு வணிகங்கள் அஞ்சுகின்றன,” என்றார் அவர்.
அதுமட்டுமன்றி, அந்த உணவுகளைப் பாதுகாப்பாக உரிய இடத்திற்குக் கொண்டு சேர்ப்பதற்கான போக்குவரத்து வசதி, மனிதவளம் போன்ற நடைமுறைச் சவால்களும் உணவைக் கையாள்வதை மிகவும் கடினமாக்குகின்றன என்றும் அதன் பின்னணியில் உள்ள உண்மை நிலையை ஹரிஹரன் விவரித்தார்.
இந்தச் சிக்கலைச் சமாளிக்கும் நோக்கில் ‘வேல்யூ ஃபுட்’ (value food) என்ற செயலி நிறுவப்பட்டது.
ஒவ்வொரு நாளும் மீதமுள்ள உணவுப் பொருள்களை உணவகங்களில் கணக்கெடுத்துக் குறைந்த விலையில் விற்க ‘வேல்யூ ஃபுட்’ உதவும்.
தங்களுக்குத் தேவையான உணவுக்கு வாடிக்கையாளர்கள் இந்தச் செயலி மூலம் பணத்தைச் செலுத்திவிட்டு நேரடியாக அந்தந்த உணவகங்களிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
மலிவான விலை, எளிதாகப் பயன்படுத்தக்கூடிய வசதி ஆகியவற்றின் காரணமாக, இந்தச் செயலியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் பல்கலைக்கழக மாணவர்கள் என்று செயலியை இணையாக நிறுவிய ஹரிஹரன் தெரிவித்தார்.
விற்கப்படும் மீதமுள்ள உணவுகள் அனைத்தும் ‘சர்ப்ரைஸ் பேக்ஸ்’ (Surprise Bags) என்று அழைக்கப்படும் பைகளில் வழங்கப்படும் என்பது இதன் சிறப்பு.
“அன்றைய நாள் எந்த உணவு மிஞ்சுகிறதோ, அது மட்டும்தான் அந்தப் பையில் இருக்கும்.
எனவே, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பையிலும் என்ன வகையான உணவு இருக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது,” என்று அவர் கூறினார்.
தற்போது ‘வேல்யூ ஃபுட்’ செயலி வழி 200க்கும் மேற்பட்ட பேக்கரிகள், உணவகங்கள், விடுதிகள், உணவு விற்பனை நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவை செயல்படுகின்றன.
செயலி வழி அன்றாடம் சராசரியாக 550 பைகள் விற்கப்படுகின்றன என்று செயலியின் சந்தாவுக்குப் பொறுப்பு வகிக்கும் விஷ்ணு பத்மநாபன், 33, தெரிவித்தார்.
மலேசியாவில் தினமும் கிட்டத்தட்ட 17 மில்லியன் டன் எடையுள்ள உணவு குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படுவதாக மலேசியா திடக்கழிவு மற்றும் பொதுத் தூய்மை மேலாண்மைக் கழகம் கண்டறிந்தது.
அதில் 24 முதல் 27 விழுக்காடு உணவுப்பொருள்கள் உண்ணத்தக்கவையாக உள்ளன.
சுற்றுச்சூழல், நீடித்த நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் இத்தகைய பசுமை முயற்சிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புதிதன்று என்றாலும், மலேசியா,சிங்கப்பூர் போன்ற தென்கிழக்காசிய நாடுகளில் இன்னும் புதிதாக ஆராயப்பட்டு வருகின்றன என்று திரு விஷ்ணு சுட்டிக்காட்டினார்.
“இந்தத் தனித்துவமான முயற்சி, நல்ல உணவு வீசப்படுவதைக் குறைப்பது மட்டுமன்றி, உணவகங்கள் வருங்காலப் புதிய வாடிக்கையாளர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்கும் ஒரு சிறந்த விளம்பர உத்தியாகவும் திகழ்கிறது,” என்றும் அவர் விவரித்தார்.
‘வேல்யூ ஃபுட்’ நிறுவனம் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில், கிட்டத்தட்ட ஓராண்டாகச் செயல்பட்டு வருகிறது.
சில நாள்கள் பெற்றுக்கொள்வதற்கு ‘சர்ப்ரைஸ் பேக்ஸ்’ பைகள் எதுவும் இருக்காது.
“அப்படியென்றால் அந்த உணவகத்தில் அன்று மீதம் உணவு பொருள்கள் மீதமில்லை என்பது அர்த்தம். அதுவும் சிறந்தது தானே?” என்று திரு விஷ்ணு சிரித்தவாறு கேட்டார்.
‘சர்ப்ரைஸ் பேக்ஸ்’ உணவுப் பைகள், சத்தான உணவு வாங்கப் போதிய வசதியில்லாத குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் பசியையும் ஆற்றுவதாக ஹரிஹரன் குறிப்பிட்டார்.
“எங்களிடம் வழக்கமாக வரும் வாடிக்கையாளர் ஒருவர், ஒவ்வொரு நாளும் தவறாமல் 20க்கும் மேற்பட்ட உணவுப் பைகளை அள்ளிச் செல்வார். ஒருநாள் அவரைத் தொடர்பு கொண்டு பேசியபோதுதான் அந்தப் பைகள் அனைத்தையும் அவர் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு நற்பண்போடு நன்கொடையாக வழங்கி வருகிறார்,” என்று திரு ஹரி கூறினார்.
இதுபோன்ற முயற்சிகளின் மூலம் வரவிருக்கும் ஆண்டுகளில் மலேசியாவின் ஒட்டுமொத்த உணவு வீண் போகும் பிரச்சினையை குறைந்தபட்சம் 10 விழுக்காடாவது குறைக்க முடியும் எனத் திரு விஷ்ணு உறுதியாக நம்புகிறார்.
‘வேல்யூ ஃபுட்’ செயலி, அண்மை காலமாக ஹோட்டல்களுடனும் செயல்படத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஹோட்டல்களில் உணவு அதிக அளவில் சமைக்கப்படுவதால் அங்கு உணவு வீணாவதைத் தடுப்பது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று திரு விஷ்ணு கூறினார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சேவையை மேம்படுத்தும் தொலைநோக்கு இலக்குடன் மிக விரைவில் சிங்கப்பூருக்கும் ‘வேல்யூ ஃபுட்’ செயலியை விரிவுபடுத்த திட்டங்கள் இருப்பதாகத் திரு ஹரிஹரன் குறிப்பிட்டார்.

