அரை நூற்றாண்டை எட்டிய அப்சராஸ் ஆர்ட்ஸ்

அரை நூற்றாண்டை எட்டிய அப்சராஸ் ஆர்ட்ஸ்

7 mins read
2e316d5c-1b59-420f-9da7-5cda57976086
அப்சராஸ் ஆர்ட்ஸ் நடன நிறுவனத்தின் பொன்விழாவை முன்னிட்டு ‘அகப்பே – த ஹியூமன் கனெக்‌ஷன்’ நடனத் தயாரிப்பு இவ்வாண்டு ஆகஸ்ட் 21, 22ஆம் தேதிகளில் அரங்கேறவுள்ளது. - படம்: அப்சராஸ் ஆர்ட்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் இந்தியப் பாரம்பரிய நடனக் கல்வியின் தரத்தை உயர்த்தி, பரதநாட்டியக் கலையைப் பல இன மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் தொடங்கப்பட்ட அப்சராஸ் ஆர்ட்ஸ் நடன நிறுவனத்திற்கு இது பொன்விழாக் காலம்.

கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பாரம்பரியக் கலைகளைப் பேணிப் பாதுகாத்து வரும் அப்சராஸ ஆர்ட்ஸ், 1977ஆம் ஆண்டு ஒரு சிறிய சமூக மன்ற நடனப் பள்ளியாகத் தன் கலைப் பயணத்தைத் தொடங்கியது.

நாற்பது நாடுகளுக்குமேல் பயணம் செய்து, உலக அளவில் மதிக்கப்படும் புகழ்பெற்ற ‘ரெபர்டரி’ (Repertory) நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.

சிங்கப்பூரின் நான்கு முக்கிய இந்திய உள்ளூர்க் கலை நிறுவனங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படும் அப்சராஸ் ஆர்ட்ஸ் அமைப்பின் ஐம்பதாண்டுக் கலைப் பயணம், பல்வேறு சுவையான பரிமாணங்களைக் கொண்டுள்ளது.

நிறுவனர்களின் அர்ப்பணிப்பில் உருவான அடித்தளம்

அப்சராஸ் ஆர்ட்ஸ் அமைப்பிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தவர்கள் அதன் நிறுவனர்களான சத்யலிங்கம் சுந்தரலிங்கமும் அவரது மனைவி நீலா சத்யலிங்கமும் ஆவர். இந்தியாவின் புகழ்பெற்ற கலாக்ஷேத்ரா (Kalakshetra) நடனப் பள்ளியின் முன்னாள் மாணவர்களான இருவரும் சிங்கப்பூரின் பல இனச் சூழலுக்கு ஏற்ப நடனக் கலையை வளர்த்தெடுத்தனர்.

அப்சராஸ் ஆர்ட்ஸ் அமைப்பின் நிறுவனர் சத்யலிங்கம் சுந்தரலிங்கம்.
அப்சராஸ் ஆர்ட்ஸ் அமைப்பின் நிறுவனர் சத்யலிங்கம் சுந்தரலிங்கம். - படம்: அப்சராஸ் ஆர்ட்ஸ்

1970களில் சிங்கப்பூருக்கு வந்த திருவாட்டி நீலா, 1972ஆம் ஆண்டு கமலா கிளப்பில் நடன வகுப்புகளைத் தொடங்கினார். பின்னர் காலாங், கேர்ன்ஹில் சமூக மன்றங்கள், மக்கள் கழகம் என அவரது கலைப்பணி விரிவடைந்தது.

அப்சராஸ் ஆர்ட்ஸ் அமைப்பின் நிறுவனர் நீலா சத்யலிங்கம்.
அப்சராஸ் ஆர்ட்ஸ் அமைப்பின் நிறுவனர் நீலா சத்யலிங்கம். - படம்: அப்சராஸ் ஆர்ட்ஸ்

பரதநாட்டியக் கலைக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காகத் திருவாட்டி நீலாவுக்கு 1989ஆம் ஆண்டு சிங்கப்பூர் அரசாங்கத்தின் உயரிய விருதான கலாசாரப் பதக்கம் வழங்கப்பட்டது. 2014ல் அவர் சிங்கப்பூரின் புகழ்பெற்ற மாதர் பட்டியலில் (Singapore Women’s Hall of Fame) இடம்பெற்றார்.

2015ஆம் ஆண்டு சிங்கப்பூர் பொன்விழா கொண்டாடியபோது, அப்சராஸ் ஆர்ட்ஸ் நிறுவனர்கள் இருவரும் சிங்கப்பூர்க் கலைத்துறையின் முன்னோடிகளாக அதிகாரபூர்வமாகக் கௌரவிக்கப்பட்டனர்.

அப்சராஸ் ஆர்ட்ஸ் அமைப்பின் நிறுவனர்கள் சத்யலிங்கம் சுந்தரலிங்கம், நீலா சத்யலிங்கம்.
அப்சராஸ் ஆர்ட்ஸ் அமைப்பின் நிறுவனர்கள் சத்யலிங்கம் சுந்தரலிங்கம், நீலா சத்யலிங்கம். - படம்: அப்சராஸ் ஆர்ட்ஸ்

மாணவியாகத் தொடங்கி முதல்வர் வரை

அப்சராஸ் ஆர்ட்சில் தற்போதைய ஆசிரியர்கள், செயற்குழு உறுப்பினர்களில் பலர், இதே பள்ளியில் நாட்டியம் பயின்ற முன்னாள் மாணவர்கள்.

அதன் தற்போதைய முதல்வரான 55 வயது விஜயா நடேசன், 1977ஆம் ஆண்டு, ஆறு வயதில் மாணவியாக அங்குச் சேர்ந்தார். மாணவர்களால் அன்புடன் ‘மாமி’ என்று அழைக்கப்படும் திருவாட்டி நீலா, நடன ஆசிரியர் என்பதைத் தாண்டி, தாயைப் போன்று தங்கள்மீது அக்கறை கொண்டிருந்தார் என்று திருவாட்டி விஜயா குறிப்பிட்டார்.

1989ல் கலாசாரப் பதக்கத்தைப் பெற்ற அப்சராஸ் ஆர்ட்ஸ் நடன நிறுவனத்தின் நிறுவனர் நீலா சத்யலிங்கம்.
1989ல் கலாசாரப் பதக்கத்தைப் பெற்ற அப்சராஸ் ஆர்ட்ஸ் நடன நிறுவனத்தின் நிறுவனர் நீலா சத்யலிங்கம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெளிநாட்டுப் பயணங்களின்போது தங்களை மிகவும் அக்கறையுடன் கவனித்துக் கொண்டார் என்றும் திருவாட்டி விஜயா கூறினார். மிகுந்த அன்புடனும் அரவணைப்புடனும் நடனத்தைக் கற்றுக்கொடுத்த திருவாட்டி நீலா, ஒருபோதும் கோபப்பட்டதே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கதைகள் மூலம் தாளத்தையும் நடனக் குறிப்புகளையும் முத்திரைகளையும் சுவாரசியமாக விளக்கிய அவரது கற்பித்தல் முறை மிகவும் தனித்துவமானது என்ற திருவாட்டி விஜயா, அந்த அணுகுமுறையையே இன்றுவரை பாடத்திட்டமாகத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மூன்று தலைமுறைகளைப் பிணைத்த கலை

அப்சராஸ் ஆர்ட்ஸ், கலைஞர்களை ஒரு குடும்பமாகப் பிணைத்துள்ளது. அதற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார் அகாடமியின் மூத்த நடன ஆசிரியரும், சிகை அலங்காரப் பொறுப்பாளருமான 66 வயது செல்வி ராதாகிருஷ்ணன். 1984ஆம் ஆண்டு மக்கள் கழகத்தில் நாட்டியப் பயிற்சியைத் தொடங்கியதிலிருந்து அப்சராஸ் ஆர்ட்சுடன் தொடர்ந்து இணைந்துள்ளார்.

மூத்தவர், இளையவர் என்ற வேறுபாடின்றி ஒரு குடும்பமாகச் செயல்படுவதே தங்களது நிறுவனத்தின் மிகப்பெரிய பலம் என்றார் திருவாட்டி செல்வி. தாம், தமது மகள், தமது பேத்தி என மூன்று தலைமுறைகளாகத் தங்கள் குடும்பத்தினர் அப்சராஸின் அங்கமாகத் திகழ்வதாக அவர் பெருமிதத்துடன் கூறினார்.

2000களின் தொடக்கத்தில் தாமும் தமது மகளும் இணைந்து மேடையில் நடனமாடியதும், மகளின் அரங்கேற்றத்திற்குத் தாமே ஆடை வடிவமைத்து, உருவாக்கியதும் தமது வாழ உன்னதமான தருணங்கள் என்றார் அவர்.

மேடையில் தனித்துவம் தரும் ஆடை வடிவமைப்பு

மேடையில் அப்சராஸ் கலைஞர்களின் நேர்த்தியான ஆடைகளும் ஒப்பனையும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்ப்பதுண்டு.

“மேடையில் நடனக் கலைஞர்களின் ஆடைகளைப் பார்த்தவுடனே இது அப்சராஸ் குழு என்று மக்கள் எளிதில் அடையாளம் கண்டுவிடுவார்கள்,” என்று கூறினார் ஆடை வடிவமைப்பு மேலாளரான 54 வயது திருவாட்டி நாகலெட்சுமி பாலசுப்பிரமணியம். 1986ஆம் ஆண்டு அப்சராசில் மாணவியாக இணைந்த இவர், தற்போது அமைப்பின் ஆடை நிர்வாகப் பொறுப்புகளைக் கவனித்து வருகிறார்.

முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனுடன் 2014ல் அப்சராஸ் ஆர்ட்ஸ் கலைஞர்கள்.
முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனுடன் 2014ல் அப்சராஸ் ஆர்ட்ஸ் கலைஞர்கள். - படம்: அப்சராஸ் ஆர்ட்ஸ்

“ஆடை வடிவமைப்பிலும் நேர்த்தியிலும் மாமி மிகவும் கண்டிப்புடன் இருப்பார். சிறு ஆபரணம்கூட மேடையில் கழன்று விழக்கூடாது என்பார். அது நடனக் கலைஞரின் கவனத்தைச் சிதறடிக்கும் என்பார்,” என்றார் அவர்.

பாரம்பரியப் படைப்புகளுக்கு பாரம்பரிய ஆடைகளையும், தற்காலப் படைப்புகளுக்குப் புதிய வடிவமைப்புகளையும் உருவாக்குவதாகக் குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு படைப்புக்கும் அதன் கருப்பொருளுக்கு ஏற்ப சிகை அலங்காரமும் ஆடைகளும் தயாரிப்பதற்கு எட்டு மாதங்கள்வரை திட்டமிட்டு உழைப்பதாகத் தெரிவித்தார்.

ரெபர்டரி நிறுவனமாக உருமாற்றம்

அப்சராஸ் ஆர்ட்ஸ் அமைப்பின் அரை நூற்றாண்டுப் பயணம் எதிர்காலத்திற்கான ஒரு புதிய தொடக்கமாக அமைகிறது.

காலமாற்றங்களுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் அப்சராஸ் ஆர்ட்ஸ் நிறுவனத்தை, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் பொறுப்பு 2005ஆம் ஆண்டு அமைப்பின் தற்போதைய கலை இயக்குநர் அரவிந்த் குமாரசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.

அப்சராஸ் ஆர்ட்ஸ் நடன நிறுவனத்தின் கலை இயக்குநர் அரவிந்த் குமாரசாமி.
அப்சராஸ் ஆர்ட்ஸ் நடன நிறுவனத்தின் கலை இயக்குநர் அரவிந்த் குமாரசாமி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தாம் பொறுப்பேற்றபோது, நடனப் பள்ளியாக மட்டுமே தொடர்ந்தால் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்பிருக்காது என்று திருவாட்டி நீலாவிடம் கூறியதாகத் திரு அரவிந்த் நினைவுகூர்ந்தார். முழுநேர நடனக் கலைஞர்களைக்கொண்ட ‘ரெபர்டரி’ (Repertory) நிறுவனமாக அப்சராஸ் உருவாக வேண்டும் என்ற தமது யோசனையைத் திருவாட்டி நீலா முழுமையாக ஏற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

அப்சராஸ் ஆர்ட்ஸ் நடன நிறுவனத்தின் ‘அரிசி’ நடன நாடகத் தயாரிப்பு.
அப்சராஸ் ஆர்ட்ஸ் நடன நிறுவனத்தின் ‘அரிசி’ நடன நாடகத் தயாரிப்பு. - படம்: அப்சராஸ் ஆர்ட்ஸ்

அன்றிலிருந்து அப்சராஸ் நடனப் பள்ளி என்பதோடு, முழுநேரப் படைப்புகளை உருவாக்கும் நிறுவனம், கலைத்துறையை மேம்படுத்தும் தளம் என மூன்று முக்கியத் தூண்களில் செயல்படத் தொடங்கியது.

கலைப்பார்வையை விரிவுபடுத்திய புதுமை

2012ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்து அப்சராசில் இணைந்த, தற்போதைய இணைப் படைப்பு இயக்குநர் 37 வயது மோகனப்பிரியன் தவராஜா, இந்நிறுவனம் தமது கலைப்பார்வையைப் பெரிதும் விரிவுபடுத்தியுள்ளதாகக் கூறினார்.

அப்சராஸ் ஆர்ட்ஸ் நடன நிறுவனத்தின் இணைப் படைப்பு இயக்குநர் மோகனப்பிரியன் தவராஜா (இடது) கலை இயக்குநர் அரவிந்த் குமாரசாமி.
அப்சராஸ் ஆர்ட்ஸ் நடன நிறுவனத்தின் இணைப் படைப்பு இயக்குநர் மோகனப்பிரியன் தவராஜா (இடது) கலை இயக்குநர் அரவிந்த் குமாரசாமி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தாம் இந்தியாவிலிருந்து வந்தபோது தமது கலைப்பார்வை முற்றிலும் மரபுவழி நடனத்தை மட்டுமே சார்ந்திருந்தது என்றார் அவர். ஆனால் அப்சராசில் சிறுவர்களுக்கான ‘சீதாவின் மாயக்காடு’ (Sita’s Magical Forest) என்ற படைப்பில் பணியாற்றியபோது, நகர்ப்புற ரசிகர்களுக்கேற்ப கலையைக் கொண்டுசேர்க்கும் புதுமையான அணுகுமுறை தமது கலைப்பார்வையை மாற்றியதாக அவர் விவரித்தார்.

அப்சராஸ் ஆர்ட்ஸ் நடன நிறுவனத்தின் ‘சீதாவின் மாயக்காடு’ நடன நாடகத் தயாரிப்பு.
அப்சராஸ் ஆர்ட்ஸ் நடன நிறுவனத்தின் ‘சீதாவின் மாயக்காடு’ நடன நாடகத் தயாரிப்பு. - படம்: அப்சராஸ் ஆர்ட்ஸ்

ஜாவா, பாலி, கம்போடியா உள்ளிட்ட தென்கிழக்காசியப் பாரம்பரியக் கலைஞர்களுடனான ஆழமான கூட்டுப் படைப்புகள் அப்சராசின் படைப்பாற்றலை உலகத் தரத்திற்கு உயர்த்தியதாக மோகனப்பிரியன் குறிப்பிட்டார்.

அடுத்த தலைமுறை உருவாக்கம்

1993ஆம் ஆண்டு மாணவியாக இணைந்து தற்போது துணை முதல்வராகவும் மூத்த நடனக் கலைஞராகவும் உள்ள 41 வயது சீமா ஹரிகுமார், இளம் கலைஞர்களுக்கு அப்சராஸ் வழங்கும் வாய்ப்புகள் பற்றிப் பேசினார்.

அப்சராஸ் ஆர்ட்ஸ் நடன நிறுவனத்தின் துணை முதல்வர் சீமா ஹரிகுமார்.
அப்சராஸ் ஆர்ட்ஸ் நடன நிறுவனத்தின் துணை முதல்வர் சீமா ஹரிகுமார். - படம்: அப்சராஸ் ஆர்ட்ஸ்

சிறு வயதில் நடன ஆசிரியர்கள் தமக்கு மேடை வாய்ப்புகளை வழங்கியதைச் சுட்டிக்காட்டிய திருவாட்டி சீமா, 1997ஆம் ஆண்டு முதல் சிங்கே ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு சமூக நிகழ்ச்சிகளில் தாம் நடனமாடியுள்ளதாகக் கூறினார்.

இன்று தங்கள் மாணவர்களும் அதேபோன்று பல்வேறு சமூக நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துத் தங்கள் மேடைத் திறன்களை வளர்த்துக்கொள்கிறார்கள் என்றார் அவர்.

முன்பு நடனம் என்பது பொழுதுபோக்காக மட்டுமே இருந்த நிலையில், இன்று சிங்கப்பூர் இளையர்கள் பலர் நடனக் கலையை முழுநேரத் தொழிலாகத் தேர்ந்தெடுக்கத் தேவையான சிறந்த தளங்களையும் பயிற்சிகளையும் அப்சராஸ் வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அனைத்துலக அரங்கில் சிங்கப்பூரின் தமிழ் முழக்கம்

தமிழ் மொழியையும் இலக்கிய விழுமியங்களையும் விட்டுக்கொடுக்காமல், அனைத்துலகத் தரத்தில் தனித்துவமான படைப்புகளை உருவாக்குவதே அப்சராஸ் ஆர்ட்ஸ் அமைப்பின் அனைத்துலக வெற்றிக்கு மூல காரணமாகும்.

அனைத்துலக மேடைகளில் தங்களது படைப்புகளைக் கொண்டுசெல்லும்போது, வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்காக அதன் அசல் தன்மையை ஒருபோதும் மாற்றுவதோ, தளர்த்துவதோ இல்லை என்று திரு அரவிந்த் உறுதியுடன் கூறினார்.

அப்சராஸ் ஆர்ட்ஸ் நடன நிறுவனத்தின் ‘அமாரா’ நடனத் தயாரிப்பு.
அப்சராஸ் ஆர்ட்ஸ் நடன நிறுவனத்தின் ‘அமாரா’ நடனத் தயாரிப்பு. - படம்: அப்சராஸ் ஆர்ட்ஸ்

பாரதியார், பாரதிதாசன், தேசிக விநாயகம் பிள்ளை, கண்ணதாசன் ஆகியோரின் தமிழ்ப் பாடல்களையும், சங்க இலக்கியங்களையும் தங்களது படைப்புகளில் பயன்படுத்துவதாக அரவிந்த் குறிப்பிட்டார்.

இத்தகைய தெளிவான தொலைநோக்கு உத்தியுடன், இம்மாதம் உலகப் புகழ்பெற்ற எடின்பரோ கலை விழாவில் (Edinburgh Festival Fringe) அப்சராஸ் ஆர்ட்ஸ் தங்களது ‘அகதி’ படைப்பின் மூலம் முதன்முறையாகத் தடம் பதிக்கவுள்ளது.

அப்சராஸ் ஆர்ட்ஸ் நடன நிறுவனத்தின் ‘அகதி’ நடன நாடகத் தயாரிப்பு.
அப்சராஸ் ஆர்ட்ஸ் நடன நிறுவனத்தின் ‘அகதி’ நடன நாடகத் தயாரிப்பு. - படம்: அப்சராஸ் ஆர்ட்ஸ்

‘அகப்பே’ – மனித நேயத்தின் புதிய பரிமாணம்

இந்தப் பொன்விழா ஆண்டின் மணிமகுடமாக, எஸ்பிளனேட் தியேட்டரில் ‘அகப்பே – த ஹியூமன் கனெக்‌ஷன்’ (Agápe – The Human Connection) என்ற நவீன படைப்பை 2026 ஆகஸ்ட் 21, 22ஆம் தேதிகளில் அப்சராஸ் ஆர்ட்ஸ் மேடையேற்றவுள்ளது.

கிரேக்க மொழியில் ‘அகப்பே’ என்றால் ‘உலகளாவிய அன்பு’ அல்லது ‘மனிதநேயம்’ என்று பொருள். இன்றைய மின்னிலக்க உலகில் மனிதர்களிடையே குறைந்து வரும் நேசத்தையும், மனநலச் சவால்களையும், தனிமையையும் போக்கும் கலை ரீதியான மருந்தாக இப்படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து வழங்கப்படும் இந்த 75 நிமிடப் படைப்பு, மூன்று ஆண்டுகால உழைப்பில் உருவானது.

அப்சராஸ் ஆர்ட்ஸ் நடன நிறுவனத்தின் பொன்விழாவை முன்னிட்டு அரங்கேறவுள்ள ‘அகப்பே – த ஹியூமன் கனெக்‌ஷன்’.
அப்சராஸ் ஆர்ட்ஸ் நடன நிறுவனத்தின் பொன்விழாவை முன்னிட்டு அரங்கேறவுள்ள ‘அகப்பே – த ஹியூமன் கனெக்‌ஷன்’. - படம்: அப்சராஸ் ஆர்ட்ஸ்

வழக்கமாக இசைக்கலைஞர்கள் மேடைக்குக்கீழே அமர்ந்து வாசிப்பார்கள். ஆனால், மனிதப் பிணைப்பை வலியுறுத்தும் விதமாக, இம்முறை 65 சிம்பொனி இசைக் கலைஞர்களும் 10 நடனக் கலைஞர்களும் மேடையிலேயே ஒன்றாக இணைந்து செயல்படவுள்ளனர். கர்நாடக, இந்துஸ்தானி இசை ராகங்களை அடிப்படையாகக் கொண்டு, மேற்கத்திய சிம்பொனி இசைக்கருவிகளில் இந்த இசையை வாசிப்பது ஒரு புதிய முயற்சியாகும்.

இதற்காகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் டாக்டர் ராஜ்குமார் பாரதி மெட்டுகளை அமைக்க, அனைத்துலக ஆஸ்கர் விருதுபெற்ற ‘லைஃப் ஆஃப் பை’ (Life of Pi) திரைப்படத்தின் முதன்மை ஒலிப்பதிவாளரான சாய் ஷ்ரவணம் இசை ஒருங்கிணைப்பு, இசை இயக்கப் பொறுப்புகளை ஏற்றுள்ளார். இந்தியாவின் முன்னணி பரதநாட்டியக் கலைஞரான ரமா வைத்தியநாதன் இப்படைப்பிற்கு சிறப்பு நடன வடிவமைப்பாளராகப் பங்களித்துள்ளார்.

இப்படைப்புக்கான நுழைவுச்சீட்டுகளை எஸ்பிளனேட் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

மின்னிலக்க முயற்சிகளும் எதிர்காலத் திட்டங்களும்

கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு, மின்னிலக்கத் தொழில்நுட்பத்தின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்துகொண்ட அப்சராஸ் ஆர்ட்ஸ், தனது அடுத்தகட்ட பயணத்தை மின்னிலக்க உலகிற்கு விரிவுபடுத்தியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, இந்தியப் பாரம்பரியக் கலைகளுக்கென ‘அவை.விடியோ’ (Avai.Video) என்ற காணொளித் தளத்தை உருவாக்கியுள்ளது. அதன் முக்கிய அம்சமாக, உலகெங்கிலும் உள்ள திறமையாளர்களை ஒன்றிணைக்கும் விதமாக ‘ஆஹா!’ (Aaha! Digital Dance Festival) என்ற அனைத்துலக மின்னிலக்க நடன விழாவை அப்சராஸ் ஆர்ட்ஸ் முன்னெடுத்து வருகிறது. அதன் அடுத்த நிகழ்ச்சி ஜூன் 2027ல் நடைபெறவுள்ளது.

இது தவிர, இன்ஸ்டாகிராம், டிக்டாக், யூடியூப் போன்ற சமூக ஊடகத் தளங்கள் வழியாக உலகளாவிய இளைய தலைமுறையினரைக் கவரும் வகையில் புதுமையான மின்னிலக்கத் தொடர்பு உத்திகளையும், நாட்டியக் கல்வி முறைகளையும் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

இந்தப் பொன்விழாக் கொண்டாட்டத்தின் முத்தாய்ப்பாக, 2027 ஆகஸ்ட் 14, 15ஆம் தேதிகளில் விக்டோரியா தியேட்டரில் ‘ஆறுபடை’ நாட்டிய நாடகத்தை அப்சராஸ் ஆர்ட்ஸ் மீண்டும் மேடையேற்றவுள்ளது.

நிறுவனர் நீலா சத்யலிங்கத்தால் வடிவமைக்கப்பட்ட இந்நாடகம், அவரது முன்னாள் மாணவிகளாகிய திருவாட்டி விஜயா, திருவாட்டி நாகலெட்சுமி, திருவாட்டி செல்வி உள்ளிட்ட மூத்த கலைஞர்களின் பங்கேற்புடன் புதுப்பொலிவுடன் அரங்கேறவுள்ளது.

சிங்கப்பூரின் பல இனக் கலாசாரத் தனித்துவத்தையும் அதன் தேசிய அடையாளத்தின் நெடிய பயணத்தையும் உலக அரங்கில் கம்பீரமாகப் பிரதிபலிக்கும் கலைக் கண்ணாடியாக அப்சராஸ் ஆர்ட்ஸ் தொடர்ந்து திகழ்ந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்