சிங்கப்பூரில் தீர்த்தக் குளத்துடன் அமைந்துள்ள ஒரே கோவிலான ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயிலின் சுங்கை காடுட் அவென்யூ கட்டடம் அமைக்கப்பட்டபோது எழுந்த வடிவமைப்புச் சவால்களும், அதனைச் சரிசெய்ய எடுக்கப்பட்ட முயற்சிகளும் ஏராளம் என்றார் கோவில் தலைவர் நவரட்ணம் கருணாகரன்.
இது ஒரு சவாலான நிலப்பரப்பில் அமைந்துள்ளது. பழைய இடத்தைவிடச் சிறியது. ஆகம முறைப்படிக் கோவில் அமைக்க ஏதுவான அகலம் இல்லாமல் இருந்தது. சரியான முறையில் கோவில் அமைப்பதையும், பக்தர்கள் புழக்கத்துக்கு இடையூறு இல்லாதவாறு அமைப்பதையும் உறுதிசெய்ய கடும் சிந்தனையும், படைப்பாற்றலும் தேவைப்பட்டது. இரண்டையும் சமமாக கருதி, அதனை நினைத்தவாறு வடிவமைத்தது பெருமையும் மகிழ்ச்சியும் தருவதாக அவர் கூறினார்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கோவிலில் உறுப்பினராக உள்ள இவர், கடந்த 29 ஆண்டுகளாகத் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். வடிவமைப்புச் சவாலைச் சரிசெய்ய எடுக்கப்பட்ட முன்னெடுப்புகளைத் தமிழ் முரசுடன் பகிர்ந்தார் திரு. கருணாகரன்.
அகலம் குறைவாக உள்ள சவாலையும் சந்நிதிகளில் தெய்வச் சிலைகள் அமைந்திருக்க வேண்டிய திசைகளையும் கருத்தில்கொண்டு கோவில் மூன்றாகப் பிரிக்கப்பட்டது.
முதல் பகுதியில் கிருஷ்ணர், துர்க்கை சந்நிதிகளும், இரண்டாம் பகுதியில் பிள்ளையார், அம்மன், சிவன் சந்நிதிகளும், மூன்றாவது பகுதியில் முருகன், பைரவர், நவகிரகம் சந்நிதிகளும் அமைந்துள்ளன.
மொத்த கோயிலின் கட்டடம் வளைந்த வடிவத்திலும், பல அடுக்குக் கோபுரங்களுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று பகுதிகளில் உள்ள சந்நிதிகளும் வெவ்வேறு உயரங்களில் அமைந்திருந்தாலும், ஒரே மேல்தளத்தில் அமையுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரமும் சிவன் சந்நிதி கோபுரமும் மேல்தளத்தைத் தாண்டி வெளியில் தெரியும்படி அமைக்கப்பட்டுள்ளன.
நவீனப் பொருள்களைப் பயன்படுத்தி கட்டடம் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், பாரம்பரியக் கலைத்திறன்களுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. கட்டடத்தின் உட்புறத்தில் அலுமினிய நிழற்கூரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கோயிலின் மையப் பகுதிக்குள் இயற்கை ஒளி ஊடுருவ ஏதுவாக திறந்தவெளி கூரை (Primary skylight) அமைக்கப்பட்டுள்ளது. இது, தடையற்ற இயற்கை வெளிச்சத்தையும் காற்றோட்டத்தையும் வழங்குகிறது.
தொடர்புடைய செய்திகள்
கோவில் நிர்வாகம், தளவாடங்கள், பிற பணிகளுக்காகவும், கோவில் ஊழியர்களுக்கான தங்குவிடுதி, திருமண மண்டபம், சமையலறை ஆகியவை அமைந்த நான்கு மாடிக் கட்டடமும் அமைக்கப்பட்டது. இரண்டு கட்டடங்களும் முன்றில் (Courtyard) மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
நீண்டகாலப் பராமரிப்புச் செலவு குறைவாக அமைய வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு சில வடிவமைப்பு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
குறிப்பாக, கோவில் உட்பகுதியின் மேல்புறத்தில் சிற்பங்கள் அல்லது வெறும் சுவராக அமைக்காமல், தேவாலயங்களில் இருப்பதுபோன்ற வண்ணக் கண்ணாடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில் இந்துப் புராணங்களில் உள்ள கதைகள் வண்ண ஓவியங்களாக அமைந்துள்ளது. இது ஒரு தனித்துவமான முயற்சியாகும். இது, எதிர்காலப் புனரமைப்புச் செலவுகளைக் குறைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது என்றும், அது இந்தக் குடமுழுக்கில் எதிரொலித்துள்ளதாகவும் சொன்னார் கருணாகரன்.
மேலும், நிர்வாகக் கட்டடத்தின் வெளிப்புறத்தில் வண்ணம் பூசுவதற்குப் பதிலாக ‘கிரானைட்’ கற்கல் பதிக்கப்பட்டன. இதுவும், முழுக் கட்டடத்துக்கு மீண்டும் மீண்டும் வண்ணம் பூசுவதற்கான தேவையைப் போக்கியதாக அவர் சுட்டினார்.
சிங்கப்பூர் அரசாங்க முதலீட்டுக் கழகம் எவ்வாறு செயல்படுகிறதோ அதேபோலக் கோவில் நிர்வாகமும் செயல்படுவதால் குடமுழுக்கு விழாவுக்கெனத் தனியாக நிதித் திரட்டு நடத்தப்படவில்லை என்றார் கோவிலின் பொருளாளர் மகேஸ்வரன் மயூரதன்.
கோவில் இடம் மாறியபோது இருந்த நிதியில் ஒரு பங்கைச் சேமித்து, அதனை முதலீடு செய்து பெருக்கி, அதனையே பயன்படுத்தியதைச் சுட்டினார் அவர்.
இக்கோவிலின் ஒரு பக்கம் 10 மீட்டர் அகலமுள்ள வடிகால் அமைந்துள்ளது. இந்த இடப்பற்றாக்குறையை வாய்ப்பாக மாற்றி, அதன்மேல் வலுவான கான்கிரீட் தளம் அமைத்து அது திறந்தவெளி முற்றமாக (Open Plaza) மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கற்ற வடிவம் கொண்ட நிலத்தில் தொடங்கினாலும் முழுமையடைந்த இந்த கோயிலின் அழகு, இத்திட்டத்தில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினரின் வலுவான அர்ப்பணிப்பு, தளராத உழைப்பின் பிரதிபலிப்பு என்று இக்கோவிலை வடிவமைத்த ‘ஏஎம்சி ஆர்கிடெக்ட்ஸ்’ தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டது.
தலைமுறைகள் ஒன்றிணைவு
இக்கோவிலில் உள்ள திறந்தவெளி, பசுமையான சுற்றுப்புறம் அருகில் உள்ள கோழி, அணில் உள்ளிட்ட உயிரினங்களுடன் கிராமத்து (கம்போங்) உணர்வைப் பிரதிபலிக்கும் நோக்கில் அமைந்துள்ளதாகச் சொன்னார் மகேஸ்வரன் மயூரதன்.
“மூத்தோர் பொதுவாகக் கோவிலுக்கு வருவதுடன், சிறியவர்களும் வருவதால் இது இருதலைமுறைக்கும் இடையே தொடர்பை மேம்படுத்துகிறது,” என்றார்.
சிறார்களும், இளையர்களும் கோவிலுக்கு வருவது அவசியம் என்று சுட்டிய பகீரதி, வாழ்க்கை மதிப்புகளை விதைத்து, நெறிப்படுத்த அது உதவும் என்றார் அவர்.

