ஆர்மீனியன் தெரு கொண்டாட்டம்: மார்ச் 13 முதல் தொடக்கம்

ஆர்மீனியன் தெரு கொண்டாட்டம்: மார்ச் 13 முதல் தொடக்கம்

2 mins read
5f4b33f1-b9d3-4957-a16d-0c0f15088990
இவ்வாண்டு, ‘பெரனாக்கன் ஒன்றுகூடல்’ எனும் கருப்பொருளில், ‘ஆர்மீனியன் தெரு கொண்டாட்டம்’ வெள்ளிக்கிழமை, மார்ச் 13 முதல், ஞாயிற்றுக்கிழமை மார்ச் 15வரை நடைபெறவுள்ளது. - படம்: பெரனாக்கன் அரும்பொருளகம்

ஆர்மீனியன் தெரு கொண்டாட்டம்: பெரனாக்கன் ஒன்றுகூடல் (Armenian Street Party: A Peranakan Gathering), எதிர்வரும் மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது.

பெரனாக்கன் அரும்பொருளகம் ஆண்டுதோறும் நடத்திவரும் இந்தப் பாரம்பரிய நிகழ்ச்சி ‘பெரனாக்கன் ஒன்றுகூடல்’ (Peranakan Gathering) என்ற கருப்பொருளுடன் இவ்வாண்டு நடைபெறவுள்ளது. பெரனாக்கன் சமூகத்தைப் பற்றியும், அவர்களது கலாசாரத்தையும் வரலாற்றையும் பறைசாற்றும் நோக்குடன் ஆர்மீனியன் தெரு கொண்டாட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 

தினமும் மாலை 5 மணியிலிருந்து இரவு 10 மணிவரை கொண்டாட்டங்களில் மக்கள் கலந்துகொள்ளலாம். பெரனாக்கன் கலாசாரத்தை உயிரோட்டத்துடன் கண்முன் கொண்டுவரும் பல்வேறு இசை, நடன நிகழ்ச்சிகளை இங்கு கண்டுகளிக்கலாம்.

பூக்களால் கலைநயத்துடன் அலங்கரிக்கப்பட்ட கலைப்படைப்புகளும், பெரனாக்கன் வேலைப்பாடுகளுடன் அலங்கரிக்கப்பட்ட புகைப்படம் எடுக்கும் இடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 

‘குவே பிக்னிக்‌ஸ்’ (Kueh picnics) முதல், உள்ளூர் உணவு வகைகள் வரை, பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட உணவைப் பார்வையாளர்கள் உண்டு சுவைக்கலாம். கைவினைப் பொருள்களை உருவாக்கும் நடவடிக்கைகளிலும் பார்வையாளர்கள் பங்கேற்கலாம். 

கொண்டாட்டங்களுக்குச் சிறப்பு சேர்க்கும் வண்ணம், மீடியாகார்ப்புடன் இணைந்து ஒரு கூட்டு முயற்சியாக, ‘ஆன்டி லீ’ஸ் டெட்லி டிலைட்ஸ்’ எனும் புதிய நாடகத் தொடரை அடிப்படையாகக்கொண்டு, குற்றச்செயல்களை மையமாக வைத்து சில நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் பெரனாக்கன் சங்கம், குனொங் சாயாங் அமைப்பு, சிங்கப்பூர் பெரனாக்கன் இந்தியர் (செட்டி மலாக்கா) சங்கம், அராப் நெட்வொர்க் @ சிங்கப்பூர் உள்ளிட்ட சமூகப் பங்காளிகள் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

ஆர்மீனியன் தெரு கொண்டாட்டத்தின் பெரும்பாலான நடவடிக்கைகளில் மக்கள் கட்டணமின்றி கலந்துகொள்ளலாம்.   

மேலும், மயிலின் வலிமை: கலாசாரங்களைத் தாண்டிய அழகியலும் சின்னங்களும் (Peacock Power: Beauty and Symbolism Across Cultures) என்ற பெரனாக்கன் அரும்பொருளகத்தின் சிறப்புக் கண்காட்சி கூடத்திற்குச் செல்ல பொதுமக்களுக்குச் சலுகைகளும் வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்