தனித்துவக் கூறுகள் அடங்கிய கலை விழா

தனித்துவக் கூறுகள் அடங்கிய கலை விழா

2 mins read
da2f6b6c-8641-4efd-8a71-1549acf1e53a
‘எர்த் அண்ட் ஸ்ட்ரிங்ஸ்’ நிகழ்ச்சி மொழிகளைக் கடந்து, அனைத்து இனத்தவரும் ரசிக்கும் வண்ணம் முற்றிலும் இசைக் கருவிகளை மட்டுமே கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. - படம்: முதிதா ஆர்ட்ஸ்

சிங்கப்பூரின் கலைத்துறையில் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, உள்ளூர்க் கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர விழைகிறது முதிதா கலை விழா 2026.

2025ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்ட ‘முதிதா ஆர்ட்ஸ்’ அமைப்பு ஏற்பாடு செய்யும் முதல் நிகழ்ச்சியாக இது அமையும்.

ஜூலை 24 முதல் 26 வரை மூன்று நாள்களுக்கு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலின் பிஜிபி மண்டபத்தில் இவ்விழா நடைபெறவுள்ளது. மொத்தம் ஏழு அமர்வுகளாகப் பல கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

நடனம், இசைக் கருவிகள், வாய்ப்பாட்டு என வெவ்வேறு கலை வடிவங்கள் விழாவில் இடம்பெறுவதால் பலதரப்பட்ட ரசிகர்களையும் விழா கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முன்னணிக் கலைஞர்களோடு இணைந்து உள்ளூர்க் கலைஞர்கள் நிகழ்ச்சிகளைப் படைக்கவுள்ளனர்.

இவ்விழாவின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் தனித்துவமான கூறுகளைக் கொண்டுள்ளது.

தொடக்க நிகழ்ச்சியான ‘எர்த் அண்ட் ஸ்ட்ரிங்ஸ்’ (Earth and Strings), கடம் மற்றும் முகச்சங்கு போன்ற இசைக் கருவிகளை முதன்மைப்படுத்தி, முற்றிலும் பெண்களின் படைப்பாக அமையவுள்ளது.

இளையர்களைக் கவரும் வகையில் ‘சமகாமா’ (SamaGama), ‘சீசன்ஸ் வித்தின்’ (Seasons Within) ஆகிய நிகழ்ச்சிகள் ஒரு மணி நேர நிகழ்ச்சிகளாகப் படைக்கப்படவுள்ளன.

சமூகத்தின் ஈடுபாட்டையும் பொதுமக்களின் பங்களிப்பையும் ஊக்குவிக்க ‘வாட் சே யூ?’ (What Say You?) என்ற இலவச சமூக கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

“அனைத்து மக்களுக்கும் நம் பாரம்பரிய கலைகளைக் காக்கும் பொறுப்பு உண்டு. எனவே, இது போன்ற கலந்துரையாடல்களில் பங்கேற்பது அவசியம்,” என்றார் ‘முதிதா ஆர்ட்ஸ்’ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி சௌந்தர்யா சுகுமார், 73.

அத்துடன், கலை வல்லுநர் விஜயா மோகனால் தொகுக்கப்பட்ட இலவச கலைக் கண்காட்சி ஜூலை 26 காலை 10 மணிமுதல் இரவு 7 மணிவரை நடைபெறும்.

மனநல நோயாளிகள், சிறப்புத் தேவைகள் உடையோர், மூத்த குடிமக்கள் ஆகியோரின் கலைப்படைப்புகள் கண்காட்சியில் இடம்பெறும்.

ஒவ்வொரு அமர்வுக்கும் 30 முதல் 50 வெள்ளி வரையிலான விலையில் நுழைவுச்சீட்டுகள் கிடைக்கின்றன.

ஏழு கலை நிகழ்ச்சிகளையும் காண விரும்புவோருக்கு 125 வெள்ளிக்கு ‘சீசன் டிக்கெட்’ சலுகையும் வழங்கப்படுகிறது.

நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளவும் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் mudithaarts.com.sg/Events என்ற இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்