முன்னைய காலத்தில் பூத்தொடுக்கும் திறன் தமிழர்களின் அருங்கலைகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. ஆனால், இன்றைய காலத்தில் அது அரிதாகி வருகிறது.
பத்து வயதில் தந்தையை இழந்து, 13 வயதில் வாழ்க்கை தம்மை திசைதிருப்பிவிடக் கூடாதென்று பூ கட்டும் கைத்தொழிலில் அடியெடுத்து வைத்தவர் திரு ஆர்.ஜெயசெல்வம்.
1978ல் ஒரு பூக்கடையில் பூத்தொடுக்கக் கற்றுக்கொண்ட திரு செல்வம், 1994ல் சொந்தமாக ‘அனஷா புஷ்பக்கடை’யைத் தொடங்கினார்.
மலர் தொடுக்கும் கலை இன்றைய பரபரப்பான உலகச் சூழலில் மறக்கப்படாமலும் மறைந்துவிடாமலும் கட்டிக்காப்பதில் பெரும் பங்காற்றி வருகிறார் திரு செல்வம்.
“பூத்தொடுப்பது தொழில் மட்டுமன்று. அது நம் பிறப்புமுதல் இறப்புவரை ஒன்றியிருக்கும் பாரம்பரிய வாழ்வியல் முறை. இக்கலையைக் கற்பதில் பலர் ஆர்வம் காட்டினாலும், அதை முழுநேரத் தொழிலாக எடுத்துச் செய்ய யாரும் முன்வருவதில்லை,” என்று வருத்தப்பட்டார் திரு செல்வம்.
ஒரு தொழிலாக மட்டுமே இதைச் செய்து வராமல், திரு செல்வம் பூக்கட்டும் வகுப்புகளையும் நடத்தி வருகிறார். பூத்தொடுக்கும் கலையைப் பரப்புவதில் இவருடைய பயணம் 2002ல் தொடங்கியது.
“கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்பது முன்னோர் வாக்கு. கைத்தொழிலானது வாழ்வில் வழி தெரியாமல் தடுமாறி நிற்போர்க்கும் வழிகாட்டியாக இருக்கும்,” என்றார் திரு செல்வம்.
போதையர் மறுவாழ்வு மையம் ஒன்றில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பூத்தொடுக்கக் கற்றுக்கொடுத்தார் திரு செல்வம். போதைக்கு அடிமையாகி சிக்கித் தவித்தோருக்கு அது உதவிகரமாக இருந்திருக்கும் என்று இவர் நம்புகிறார்.
பூக்கட்டும் கலை என்பது பாரம்பரியம் மட்டுமன்று, மறுவாழ்விற்கும் அது வழிவகுக்கும். ஒருவரை திசைதிருப்பும் எண்ணங்களை முறியடிக்க இந்தக் கைத்தொழில் கைகொடுக்கிறது.
“பூக்கடை நடத்துவது என்பது கோடிப் பணம் லாபம் ஈட்டித் தரும் தொழில் இல்லை என்றாலும், அது நம்மைப் பாரம்பரியத்துடன் இணைத்து மனநிறைவைத் தரும் தொழிலாகும். அதற்குப் பெரிதாக முதலீடும் அவசியமில்லை,” என்கிறார் திரு செல்வம்.
2021ல் ‘மை கம்யூனிட்டி’ அமைப்பு கொடுத்த வாய்ப்பின்வழி, பூக்கட்டும் கலையை மக்களிடம் இவர் எடுத்துச்சென்றார்.
கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி, ஒரு வகுப்பில் ஐந்து பேர் என, வார இறுதிகளில் வகுப்புகளுக்கு இவர் ஏற்பாடு செய்தார். ஏறத்தாழ 1,800 பேருக்கு இவர் அக்கலையைக் கற்றுக்கொடுத்துள்ளார்.
பூத்தொடுக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றோரில் 95 விழுக்காட்டினர் சீனர்கள் என்று திரு செல்வம் குறிப்பிட்டார்.
“தமிழர்களாகிய நாம்தான் நம் மரபை முன்னின்று கட்டிக்காக்க வேண்டும். பொழுதுபோக்குக்காக இக்கலையை மக்கள் கற்றுக்கொண்டாலும், இதன் நீடித்த நிலைத்தன்மை வரும் காலங்களில் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கும்,” என்று வருந்துகிறார் திரு செல்வம்.
சிங்கப்பூரில் பூக்கட்டும் கலை மெல்ல மறைந்து வருகிறது. புலம்பெயர்ந்து வந்துள்ள பலர் பூக்கடைகளை நடத்தி வந்தாலும் சிங்கப்பூரர்கள் பலருக்கு இக்கலை தெரிவதில்லை.
திரு செல்வம் அரசாங்கத்தின் ‘மரபுடைமைத் தொழில் விருதைப்’ (Heritage Business Award) பெற்றவர்.
“மரபையும் பண்பாட்டையும் விட்டுக்கொடுக்காமல் கட்டிக்காக்கும் எங்களுக்கு இது போன்ற விருதுகள் தூண்டுகோலாக அமைகின்றன. மேலும், இந்தப் பண்பாட்டை அடுத்த தலைமுறையினரும் முன்னெடுத்துச் செல்வது மிக அவசியம்,” என்று திரு செல்வம் வலியுறுத்துகிறார்.

