கழிவிலிருந்து கலை: போத்தல் மூடிகளால் உருவாக்கப்படும் வரலாற்றுச் சின்னம்

கழிவிலிருந்து கலை: போத்தல் மூடிகளால் உருவாக்கப்படும் வரலாற்றுச் சின்னம்

2 mins read
66345031-dad2-499f-8bca-9aa31f911fa0
சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள். -  படம்: காமினி ஹஷ்வின்

சிங்கப்பூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜாமியா சூலியா பள்ளிவாசலில், புனித ரமலான் மாதத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் பாரம்பரியத்தையும் இணைக்கும் ஒரு முன்மாதிரித் திட்டம் அரங்கேறி வருகிறது.

பள்ளிவாசல் 200வது ஆண்டு நிறைவு: மாணவர்களின் பசுமை முயற்சி

‘ஈக்கோ ரமலான்’ (Eco Ramadan) எனப்படும் இத்திட்டத்தின்மூலம், நோன்பு துறக்கும் நிகழ்ச்சிகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் போத்தல் மூடிகளைக் கொண்டு, இந்த ஆண்டு கொண்டாடப்படவிருக்கும் பள்ளிவாசலின் 200வது ஆண்டு நிறைவுச் சின்னம் உருவாக்கப்படுகிறது.

இந்த முயற்சி, மாணவத் தொண்டூழியர்களால் வழிநடத்தப்படுகிறது.

இந்த முயற்சியை முன்னெடுத்த 19 வயது முஹம்மது அஸ்லம், “சிறு செயல்கள் மூலம் விழிப்புணர்வை உருவாக்கி நமது சுற்றுச்சூழல் மீதான தாக்கத்தை மாற்றுவது இலக்கு,” எனக் கூறினார்.

இத்திட்டம் குறித்து 20 வயது முஹமது நௌஃல், “கடந்த ஆண்டு நோன்பு துறக்கும் நிகழ்ச்சிகளில் ஏராளமான பிளாஸ்டிக் போத்தல்கள் வீணாவதைக் கண்டு, அந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்று விரும்பினோம்,” என்றார்.

தகவல் சுவரொட்டியுடன் 20 வயது முஹமது நௌஃல், 19 வயது முஹமது யஹ்யா.
தகவல் சுவரொட்டியுடன் 20 வயது முஹமது நௌஃல், 19 வயது முஹமது யஹ்யா. -  படம்: காமினி ஹஷ்வின்

“நண்பர்கள் நால்வர் ஒன்றிணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்தினோம். இது குறித்துப் பள்ளிவாசல் நிர்வாகத்திடம் ஆலோசித்தபோது, அவர்களும் எங்களது முயற்சிக்கு முழு ஆதரவு வழங்கினர்,” என்று நௌஃல் குறிப்பிட்டார்.

மாணவர்கள் அன்றாடம் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை, 700 முதல் 1,200 போத்தல்களைச் சேகரித்து வகைப்படுத்துகின்றனர்.

‘கோரா’ (Cora) அமைப்பின் உதவியுடன் இவை மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

மறுசுழற்சி செய்யப்படுவதன் சவால்கள் குறித்து 19 வயது முஹமது யஹ்யா விளக்குகையில், “பொதுவாக நோன்பு துறந்த பிறகு மக்கள் போத்தல்களைக் குப்பைத் தொட்டியில் வீசிவிடுவார்கள். அவை வீணாகாமல் மறுசுழற்சி செய்யப்பட வேண்டும் என்பதே எங்களது நோக்கம்,” என்றார்.

சுத்திகரிப்புப் பணி பற்றி பேசிய அவர், “உணவு உண்ணும்போது கைகளில் இருக்கும் எண்ணெய் போத்தல்களில் ஒட்டினால், அந்தப் போத்தல்களை மறுசுழற்சி செய்ய இயலாது. எனவே, முடிந்தவரை சுத்தமான போத்தல்களை மட்டும் நாங்கள் மறுசுழற்சிக்கு அனுப்புகிறோம்,” எனத் தெளிவுபடுத்தினார்.

போத்தல்களைச் சேகரிக்கும் மாணவத் தொண்டூழியர்.
போத்தல்களைச் சேகரிக்கும் மாணவத் தொண்டூழியர். - படம்: ஜாமியா சூலியா பள்ளிவாசல்

படிப்பு மற்றும் வேலைக்கு இடையிலும் இளையர்களின் இந்த 30 நாள் இடைவிடாத அர்ப்பணிப்பு, சமூகப் பெருமையின் அடையாளமாக உருவெடுத்துள்ளது. நோன்புப் பெருநாளன்று போத்தல் மூடிகளால் உருவாக்கப்படும் சின்னம் ஜாமியா சூலியா பள்ளிவாசலில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். மக்கள் அச்சின்னத்தை ‘ஈக்கோ ரமலான்’ இணையத்தளத்திலும் காணலாம்.

குறிப்புச் சொற்கள்