திருமணமாகி ஏழாண்டு காலமாக திரு மெல்விந்தர் சிங்குக்கும், திருமதி ஏஞ்சலின் ஹெர்மனுக்கும் மகப்பேறு என்பது கனவாகவே இருந்தது. எந்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை.
மருத்துவப் பரிசோதனையில் 44 வயதான ஏஞ்சலினுக்கு நீரிழிவு நோய் கண்டறியப்பட்டது. இதற்கிடையில், சிதைந்திருந்த அவரது இடது பக்கக் கருக்குழாய் அகற்றப்பட்டது.
நீரிழிவு இருப்பதால் ‘ஐவிஎஃப்’ (in-vitro fertilisation) எனப்படும் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சையைச் செய்ய முடியாது என்று மருத்துவர் கூறியது அத்தம்பதியரின் கனவில் மேலுமோர் இடியாக விழுந்தது.
மூன்று முறை கரு சிதைந்ததால் திருமதி ஏஞ்சலினுக்கு நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. அவ்வேளையில், உறவினர் ஒருவர் பரிந்துரைத்த மருத்துவரை அவர்கள் பார்க்கச் சென்றனர்.
நீரிழிவு இருந்தாலும் செயற்கைக் கருத்தரிப்புக்கு முயலலாம் என்று அந்த மருத்துவர் கூறியபோது இருவரும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தனர்.
செயற்கைக் கருத்தரிப்பில் பலவிதமான முறைகள் உள்ளன. ஏஞ்சலினுக்கு சுரப்பு நீர் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. 42 வயதாகும் மெல்விந்தருக்கு விந்தணு எண்ணிக்கையை மேம்படுத்த மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டன.
“நீரிழிவு காரணமாக அன்றாடம் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். செயற்கைக் கருத்தரிப்புக்கும் ஊசி போட்டுக்கொள்ள வேண்டியிருந்தது. அது வலி ஏற்படுத்திய அனுபவம் என்றாலும் அதை மேற்கொண்டேன்,” என்று புன்முறுவலுடன் கூறினார் ஏஞ்சலின்.
தற்போது ஆரோக்கியமான, நான்கு வயதாகும் ஏய்டன் இஷான் சிங்கின் அன்புப் பெற்றோராக இருக்கும் இருவரும் செயற்கைக் கருத்தரிப்பு முறையை முயல விரும்பும் தம்பதியர்க்கு முன்னுதாரணமாக இருக்க விரும்புகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால், பெரும்பாலான மருத்துவச் செலவுகளுக்கு அவர்களுக்கு மானியம் கிடைத்தது.
“மருத்துவச் செலவை நினைத்து, முயற்சி செய்யாமல் இருக்க வேண்டாம். அரசாங்கம் பெரிதும் உதவி செய்கிறது. செயற்கைக் கருத்தரிப்பு ஒரு சிறந்த சிகிச்சை. தம்பதியர் மனம் தளராமல் முயன்றால் தீர்வு கிடைக்கும்,” என்றார் திரு மெல்விந்தர்.
சரிந்து வரும் கருத்தரிப்பு விகிதம்
சிங்கப்பூரின் கருத்தரிப்பு விகிதம் சென்ற 2023ல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 1 விழுக்காட்டுக்கும் குறைந்து 0.97 ஆகப் பதிவானது. நான்காண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், இந்தியர்களின் கருத்தரிப்பு விகிதம் 0.97 விழுக்காடாக இருந்தது.
இதற்குப் பல காரணங்கள். விலைவாசி உயர்வு, வேலைப் பளு போன்றவற்றால் தம்பதியர் குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடக்கூடும். சிலர் குழந்தை பெற்றுக்கொள்ளத் தயங்கலாம்.
அதேநேரத்தில், சிங்கப்பூரில் பெண்களின் திருமண வயதும் குழந்தைப் பெற்றுக்கொள்ளும் வயதும் அதிகரித்து வருகிறது. 2023ன் மக்கள் தொகை புள்ளவிவரப்படி பெண்களின் சராசரி திருமண வயது 29.5 ஆகவும் பிள்ளைப்பேறு வயது 31.4 ஆகவும் உள்ளது.
இதனால் குழந்தை பெற்றுக்கொள்வதில் அதிகமானோர் சிக்கல்கள் எதிர்கொள்கின்றனர். அதில் பலருக்கு செயற்கைக் கருத்தரிப்பு முறை உதவுகிறது. கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் கருத்தரிப்புச் சிகிச்சை பெற்றுக்கொள்ளும் தம்பதியரின் எண்ணிக்கை 40 விழுக்காடு அதிகரித்துள்ளதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை தற்போது பல மருத்துவமனைகளிலும் உள்ளது. அரசாங்க மானியமும் கிடைக்கிறது. என்றாலும் இந்த சிகிச்சை முறை எல்லாருக்கும் எளிதாக இருப்பதில்லை. சிகிச்சை வெற்றி பெறாமல் போகும் சாத்தியமும் உள்ளது.
நீண்ட தவம்
பல கனவுகளுடன் திருமணம் செய்துகொண்ட சியாமளா- ரவி (உண்மைப் பெயர்களல்ல) தம்பதி, உடனடியாகக் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தனர்.
ஆனால், அவர்கள் எதிர்பார்த்தபடி கருத்தரிக்காததால் மருத்துவரை நாடினர். திரு ரவியின் விந்து எண்ணிக்கை குறைவாக இருந்ததால் இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது கடினம் என்று மகப்பேறு மருத்துவர் கூறியது இருவரையும் புரட்டிப் போட்டது.
அடுத்த முயற்சியாக செயற்கைக் கருத்தரிப்பை மேற்கொள்ள முடிவெடுத்த தம்பதி, செலவு அதிகம் என்றாலும், காத்திருப்பு நேரம் குறைவு என்பதால் தனியார் மருத்துவமனையை நாடினர்.
சிகிச்சை மேற்கொள்ள ஆர்வத்தோடு இருந்த அவர்களுக்கு மேலும் ஓர் இடி. மருத்துவப் பரிசோதனை முடிவில் சியாமளாவின் இரு கருக்குழாய்களிலும் அடைப்பு இருப்பது தெரியவந்ததால், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்ற வேண்டும் என்றனர்.
செயற்கைக் கருத்தரிப்பு செய்ய முடியாவிட்டாலும் தனது கரு முட்டைகளையாவது உறையவைக்க நினைத்த சியாமளாவுக்கு அதுவும் நிறைவேறாமல் போனது.
“ஒன்றின்மேல் ஒன்றாக எங்களுக்குக் கெட்ட செய்திகளாகவே வந்தன. நானும் எனது கணவரும் இப்படி ஒரு பிரச்சினை வரும் என்று எதிர்பார்க்கவில்லை,” என்று கண்கலங்கினார் சியாமளா.
முப்பதுகளில் இருக்கும் இத்தம்பதி, குழந்தையைத் தத்தெடுக்க முடிவெடுத்துள்ளனர்.
“தம்பதியர் திருமணத்திற்குப் பிறகு உடனடியாகப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். பிள்ளை பெற்றுக்கொள்ள சிங்கப்பூரில் பல வழிகள் உள்ளன,” என்று இருவரும் கேட்டுக்கொண்டனர்.
மூன்று குழந்தைகளுக்குப் பெற்றோரான தம்பதியர்
குழந்தைக்காக ஆறு மாதங்கள் முயன்ற பின்னர் திரு மிம்ரா மஹ்மூத்தும், 40, அவரது மனைவி ரஃபீதா ஜலீலும், 38, கருத்தரிப்புப் பரிசோதனை மேற்கொண்டபோது, மிம்ராவின் விந்து எண்ணிக்கை சாதாரண வரம்பில் இல்லாதது கண்டறியப்பட்டது.
செயற்கைக் கருத்தரிப்பில் ரஃபீதாவுக்குத் தயக்கம் இருந்தபோதும், மருத்துவர் பக்கபலமாக இருந்ததால் அவர்கள் செயற்கைக் கருத்தரிப்பை நாடினர்.
தற்போது இத்தம்பதியருக்கு ஆரோக்கியமான மூன்று பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகனுக்கு ஆறு வயது. அடுத்ததாக, மூன்று வயதாகும் இரட்டைக் குழந்தைகள்.
“பதற்றம், தேவையான அளவில் கருமுட்டைகள் உள்ளனவா என்ற அச்சம், அன்றாடம் மருத்துவமனைக்குச் செல்லும் அலைச்சல் என செயற்கைக் கருத்தரிப்பு வாழ்வைப் புரட்டிப்போட்டது என்றே கூறலாம்,” என்றார் ரஃபீதா.
ஐந்தாண்டுகளில், ஐந்து சுழற்சிகளில் செயற்கைக் கருத்தரிப்பை ரஃபீதா மேற்கொண்டார். மருத்துவமனைக்கு அடிக்கடி செல்லவேண்டி இருந்ததால், அவர் தமது முதலாளியிடம் நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளைச் செய்து தருமாறு கேட்டிருந்தார்.
வேலைப்பளுவாலும் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சையாலும் மிகுந்த சோர்வு ஏற்படவே ரஃபீதா பின்னர் வேலையை விட்டுவிட்டார். தற்போது சுயதொழில் செய்துவரும் அவர், பிற்காலத்தில் மீண்டும் பிள்ளை பெற்றுக்கொள்ள ஆர்வம் வரக்கூடும் என்பதால் தனது கருமுட்டைகளை உறைய வைத்துள்ளார்.
“தம்பதியர் குழந்தை பெற்றுக்கொள்ளும் வரை காத்திருக்காமல் திருமணம் செய்துகொண்ட உடனே கருத்தரிப்புப் பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. அப்போதுதான் அவர்கள் உரிய சிகிச்சையை முன்கூட்டியே மேற்கொள்ள முடியும். இல்லையெனில், சில நேரங்களில் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சையை மேற்கொள்ளும் வாய்ப்புகூட இல்லாமல் போய்விடும்,” என்று தெரிவித்தார் மிம்ரா.
அதிகரித்து வரும் செயற்கைக் கருத்தரிப்பு
செயற்கைக் கருத்தரிப்புச் சிகிச்சை தற்போது பல மருத்துவமனைகளிலும் உள்ளது. அரசாங்க மானியமும் கிடைக்கிறது. என்றாலும் இந்த சிகிச்சை முறை எல்லாருக்கும் எளிதாக இருப்பதில்லை.
மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையைச் சேர்ந்த மகப்பேறியல் மருத்துவரான டாக்டர் அனுப்பிரியா அகர்வால் செயற்கைக் கருத்தரிப்பு முறையைப் பற்றிய மேல்விவரங்களை வழங்கினார்.
ஆய்வகத்தில் பெண்ணின் கரு முட்டையும் ஆணின் விந்தும் ஒன்றுசேர்க்கப்பட்டு அது மீண்டும் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்படுவது செயற்கைக் கருத்தரிப்பின் அடிப்படை என்றார் டாக்டர் அனுப்பிரியா.
இக்காலத்தில் பல தம்பதியர் செயற்கைக் கருத்தரிப்பை நாடுவதற்கான காரணம் அவர்களின் வாழ்க்கை முறை என்று சுட்டிய டாக்டர் அனுப்பிரியா, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்து தேவையான உடற்பயிற்சியும் மேற்கொண்டால் இயற்கையான முறையிலேயே ஒருவரால் கருத்தரிக்கும் சாத்தியம் அதிகமாகும் என்றார்.
செயற்கைக் கருத்தரிப்புக்கு அப்பாற்பட்டு வேறு வழிகளும் உள்ளன என்று கூறிய டாக்டர் அனுப்பிரியா, ‘இன்ட்ரா யூட்டரின் இன்செமினேஷன்’ (IUI) எனப்படும் கருப்பையில் கருவூட்டல் முறையைக் குறிப்பிட்டார்.
அதில் ஆணின் விந்து நேரடியாகப் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்படும். செயற்கைக் கருத்தரிப்பு பெரும்பாலும் வெற்றிகரமாக நடைபெறும் என்ற டாக்டர் அனுப்பிரியா, அப்படி நடைபெறாவிட்டால் தானம் செய்யப்பட்ட கருமுட்டையைப் பயன்படுத்தலாம் என்றார்.
உடற்பருமன், கருப்பையில் நீர்க்கட்டி போன்ற பிரச்சினைகள் உள்ள பெண்களுக்குச் செயற்கைக் கருத்தரிப்பு செய்வதில் சிக்கல் அதிகமாக இருந்தாலும் அது சாத்தியம்.
மாவுச்சத்து, இனிப்பு அதிகமுள்ள உணவு வகைகள், ‘பபுள் டீ’ பானம் போன்றவற்றை உட்கொள்வதைக் குறைத்தால் செயற்கைக் கருத்தரிப்பை நாட வேண்டாம் என்றார் டாக்டர் அனுப்பிரியா.
இதற்கு வயதும் ஒரு காரணம் என்ற டாக்டர் அனுப்பிரியா, பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை முடிந்த அளவு தாமதிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
தம்பதியருக்கான மரபணுப் பரிசோதனை முக்கியம்
கேகே மகளிர், சிறார் மருத்துவமனை முதல் முறையாக, மேம்படுத்தப்பட்ட மரபணுப் பரிசோதனை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதைப் பற்றி மேலும் விளக்கினார் கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் மரபணு சேவைகள் பிரிவின் மூத்த ஆலோசகரான இணைப் பேராசிரியர் சௌமியா ஜமுவார்.
இந்தப் புதிய பரிசோதனையில் ஆசியர்களை அதிகம் பாதிக்கும் 80க்கும் மேற்பட்ட மரபணுப் பிரச்சினைகள் கண்டறியப்படும். இந்த மருத்துவமனையில் 2024 முதல் 2027 வரை இப்பரிசோதனை இலவசமாக வழங்கப்படுகிறது. சிக்கலை எதிர்நோக்கும் தம்பதியருக்கு மரபணு ஆலோசனைகளும் அளிக்கப்படுகிறது.
பிறக்கவிருக்கும் குழந்தைக்கு மரபணுப் பிரச்சினைகள் ஏற்படுமா என்பதை அறிய தம்பதியர் மரபணுப் பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது என்றார் டாக்டர் சௌமியா.
கணவன் மனைவி இருவருக்கும் குறைபாடுள்ள மரபணு இருந்தால் அவர்களுக்குப் பிறக்கவிருக்கும் குழந்தைக்கு மரபணுப் பிரச்சினை ஏற்பட 25 விழுக்காட்டு வாய்ப்பு உள்ளதாக அவர் எச்சரித்தார். சிறப்புத் தேவை, மதியிறுக்கம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு உடல் உறுப்புகளைப் பாதிக்கும் நோய்களும் வரலாம் என்று டாக்டர் சௌமியா சொன்னார்.
இந்தப் பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் உலகத்திற்கு ஓர் உயிரைக் கொண்டுவர முடிவெடுக்கும் தம்பதியினர் தக்க முடிவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறினார்.
பரிசோதனை முடிவு இயல்பற்றதாக இருந்தால் செயற்கைக் கருத்தரிப்பு அல்லது தத்தெடுப்பது குறித்து யோசிக்கலாம் என்று டாக்டர் சௌமியா பரிந்துரைத்தார்.

