செயற்கை நுண்ணறிவைக் கொண்டாடும் வகையில் ‘செயற்கை நுண்ணறிவுப் பாராட்டு நாள்’ ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 16ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது.
கடந்த 2021 மே மாதம், ‘ஏஐ ஹார்ட் எல்எல்சி’ என்ற அமெரிக்க நிறுவனத்தின் முயற்சியாக இத்தினம் முதன்முதலில் தொடங்கியது. பின்னர், 2025ல் ‘தேசிய தின நாட்காட்டி’ என்ற அமெரிக்க ஆதார இணையத்தளம் இதனைத் தனது அதிகாரபூர்வ பட்டியலில் இணைத்தது.
கல்வி அமைச்சின் ‘கல்வித் தொழில்நுட்பப் பெருந்திட்டம் 2030’ன்கீழ், சிங்கப்பூர் மாணவர் கற்றல் தளத்தில் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதில், மாணவர்கள் செயற்கை நுண்ணறிவைப் பதில்களை நகலெடுக்கும் கருவியாகப் பயன்படுத்த முடியாதபடி கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
“அதில் உள்ள ‘கற்றல் உதவியாளர்’ மாணவர்களுக்கு நேரடியாகப் பதில்களை வழங்காது. மாறாக, வழிகாட்டும் கேள்விகளைக் கேட்டு, எங்களைச் சிந்திக்கத் தூண்டும். மேலும், கணிதம், மொழிக்கல்விக்கான ‘கருத்துரை உதவியாளர்கள்’ பிழைகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டி எங்களின் கற்றலை மேம்படுத்துகின்றன,” என்றார் புக்கிட் வியூ உயர்நிலைப் பள்ளி மாணவி சாலிஹா நஸ்னின், 15.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏஐ தொடர்பான பாடங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
“ஏஐ தொழில்நுட்பம் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் உண்டு. கணினித் தரவு நிலையங்களைக் குளிர்விக்க பேரளவில் நீர் பயன்படுத்தப்படுவது தற்போதைய சூழலுக்குப் பெருஞ்சவாலாக உருவெடுத்துள்ளது,” என்றார் 'எட்யுபட்ஸ்’ நிறுவனர் நித்திஷ் செந்தூர், 34.
“நமது அன்றாட வாழ்க்கையிலும், கல்விமுறையிலும், பல்வேறு தொழில்துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு உதவுகிறது. ஆனால், செயற்கை நுண்ணறிவை மனித உழைப்புக்கு மாற்றாகக் கருதக்கூடாது; அது மனித ஆற்றலை மேம்படுத்தும் ஒரு துணைக்கருவி.
“சிக்கலான பணிகளையும் கற்றலையும் எளிதாக்குவதன்மூலம் மனிதர்கள் தங்கள் வேலைகளை முன்னெப்போதையும்விட மிக்க திறனுடனும் விரைவாகவும் செய்து முடிக்க அது வழிவகுக்கிறது,” என்று திரு நித்திஷ் கூறினார்.

