வேகமாக மூப்படைந்து வரும் சமுதாயம் சிங்கப்பூர். மூத்தோர் மருத்துவச் சேவைகளை எளிதில் அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கில், புதிய பல் மருத்துவச் சேவைத் திட்டம் ஒன்று பிடோக்கில் அறிமுகம் கண்டுள்ளது.
மூத்தக் குடிமக்களுக்காக செயற்கை நுண்ணறிவு உதவியுடனான சமூக வாய்நலப் பரிசோதனைத் திட்டத்தை ஜூன் 27ஆம் தேதி அறிமுகப்படுத்தி வைத்தார் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ்.
இந்தப் புதிய முயற்சி, செயற்கை நுண்ணறிவைக் கொண்டு 60 வயதிற்கு மேற்பட்ட குடியிருப்பாளர்களின் பற்களைச் சோதித்து உடனடியாக தனிப்பட்ட அறிவுரைகளை வழங்குகிறது.
பரிசோதனைக்குப் பிறகு தேவைப்படும் உதவியையும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ‘ஓரல் லிங்க்’ அமைப்பு பரிசோதனைகளை நடத்தியது.
பிடோக், சிக்லாப் வட்டாரங்களில் மாதத்துக்கு இருமுறை பரிசோதனைகள் நடத்தப்படும். இது, மூத்த குடிமக்களுக்கு பல் சிகிச்சை பெற எளிமையாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“பொதுவாக, மூத்த குடிமக்கள் அடிக்கடி பல் பரிசோதனைக்குச் செல்லத் தயங்குகின்றனர். அதனால், அவர்கள் பற்களை இழக்க நேரிடுகிறது. இப்புதிய திட்டம், பிரச்சினையை முன்கூட்டியே கண்டறிந்து முறையான சிகிச்சை அளிக்க உதவும்,” என்றார் திரு தினேஷ்.
பல் மருத்துவம் மட்டுமன்றி செயற்கை நுண்ணறிவைக் கொண்டு நரம்பு பாதிப்பைக் கண்டறியும் தொழில்நுட்பமும் தொடக்க விழாவில் அங்கம் வகித்தது.
தானியக்க முறையில் நரம்பு பாதிப்பைக் கண்டறியும் ‘ஆர்திமெஸ்’ செயற்கை நுண்ணறிவுத் தளம், கேமராவைக் கொண்டு நடமாட்டத்தைக் கண்காணிக்கும் ‘கேர் கேம் ஏஐ’ தொழில்நுட்பத்தை மக்கள் பயன்படுத்திப் பார்த்தனர்.
செயற்கை நுண்ணறிவுவழி பரிசோதனை செய்வதால், நேரம் தாழ்த்தாமல் முதியோரிடையே உடற்குறைபாட்டை முன்கூட்டியே கண்டறிந்து முறையான சிகிச்சை அளிக்க பேருதவியாக இருக்கும்.
‘சீம்லஸ் எக்ஸ்ஆர்’ நிறுவனத் தலைமை அதிகாரி அஜிங்க்யா பட், சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை ஆராய்ந்தவர்.
“அதிக மனிதவளத் தேவையின்றி ஆரோக்கியத்தைக் கட்டிக்காக்க செயற்கை நுண்ணறிவு பெரிதும் உதவுகிறது,” என்றார் அவர்.

