ஆக அதிகமான திருக்குறள் ஓவியங்கள் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் காணொளியாக்கப்பட்டது சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழ் மொழி, பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் சனிக்கிழமை (மார்ச் 28) நடைபெற்ற திருக்குறள் விழா 2026இல் அச்சாதனை நிகழ்த்தப்பட்டது.
பங்கேற்பாளார்கள் 133 பேர், ஒவ்வோர் அதிகாரத்திலும் உள்ள ஒரு குறளைத் தேர்வு செய்து அதையொட்டிய ஓவியங்களை வரைந்தனர்.
வரைந்த ஓவியங்களைத் தொழில்நுட்ப வல்லுநர்கள் ‘ஜெமினாய்’, ‘கூகல் ஃப்ளோ’, க்ரோக் ஏஐ’ ஆகிய செயற்கை நுண்ணறிவுக் கருவிகளின் உதவியுடன் குறுங்காணொளிகளாக மாற்றினர்.
ஆக அதிகமான கோட்டோவியங்களைக் (Line Drawings) காணொளிகளாக்கியதற்காக சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றது.
தமிழ் மொழி, பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் திருக்குறள் விழா, இவ்வாண்டு, உமறுப்புலவர் அரங்கில் நடைபெற்றது.
ஓவியம் வரைந்தோர், பொதுமக்கள் என ஏறத்தாழ 250 பேர் பங்கேற்ற இவ்விழாவில், இரு சிறப்புச் சொற்பொழிவுகளும் இடம்பெற்றன.
‘வழிகாட்டும் வள்ளுவம்’ எனும் தலைப்பில் பேச்சாளர் கார்த்திக் சிதம்பரம் உரையாற்றினார்.
தொடர்புடைய செய்திகள்
ஊக்கம், அருளுடைமை, ஒழுக்கம், கனிவு என வள்ளுவம் பேசும் பல்வேறு வாழ்வியல் கூறுகள் குறித்து அவர் பேசினார்.
தொடர்ந்து, முனைவர் சரோஜினி செல்லகிருஷ்ணன், ‘வாழ்க்கைக் கையேடு’ எனும் தலைப்பில் பேசினார்.
இன்பத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் சிலவற்றைக் கூறி அவற்றின் பொருளை அழகுற விளக்கினார் முனைவர் சரோஜினி.
தேர்ந்தெடுக்கப்பட்டது 133 குறட்பாக்களாக இருந்தாலும், கூடுதலாக 36 பேர் ஓவியம் வரைந்திருந்தனர்.
“தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தொடர்ந்து திருக்குறளை மக்களிடையே கொண்டுசெல்ல பல்வேறு புதுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது,” என்றார் நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுவில் பணியாற்றிய தமிழ் மொழி பண்பாட்டுக் கழக உறுப்பினர் உமாசங்கர் நாராயணன்.
பீட்டி உயர்நிலைப் பள்ளியில் பயிலும் தமது மகள் தேவன் காஷ்வினியின் ஓவியம் உயிர்பெறுவதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார் தாயாரான ராணி கடிகாசலம், 45.
“கல்லாமை எனும் அதிகாரத்திலிருந்து என் மகள் ஓவியம் வரைந்தாள். அதனைக் காணொளியாகப் பார்ப்பதில் மகிழ்ச்சி,” என்றார் அவர்.
“ஒற்றாடல் எனும் அதிகாரத்திலிருந்து ஒரு குறளைத் தேர்வு செய்து வரைந்தேன். முதலில் திரையிடப்பட்ட காணொளிகள் சிலவற்றில் எனது ஓவியமும் இடம்பெற்றது. ஏறத்தாழ இரண்டரை வாரங்கள் பயிற்சி மேற்கொண்டு இதில் பங்கேற்றேன்,” என்றார் நியூட்டன் உயர்நிலைப் பள்ளி மாணவர் வினீஷ் ரமேஷ் குமார், 14.
நிகழ்ச்சிக்கான தயாரிப்புகளில் சவால்கள் இருந்ததைக் குறிப்பிட்ட ஏற்பாட்டுக் குழுவினர், பங்கேற்பாளர்களுக்குக் குறள் தேர்வு செய்வதுவரை அனைத்திலும் கவனம் செலுத்தியதைச் சுட்டினர்.
இன்பத்துப் பால் அதிகாரக் குறட்பாக்களைப் பெரியவர்களுக்கு அளித்ததுடன், செயற்கை நுண்ணறிவு, பாலின வேறுபாடுகள், ஓவியக் கருப்பொருள் ஆகியவற்றைத் தவறாகப் புரிந்துகொண்டு காணொளிகள் தயாரித்துவிடக் கூடாது என்பதற்காக, முன்கூட்டியே ஓவியங்களைப் பெற்று, மாதிரிக் காணொளிகளையும் தாயர் செய்து பார்த்ததைக் குறிப்பிட்டனர்.

