உள்ளூர்த் தொலைக்காட்சி நேயர்களுக்கு நன்கு அறிமுகமான கலைஞர் பிரவின் சைவி, இசைத்துறையில் 25 ஆண்டுகள் நீடித்துள்ள தமது பயணத்தை நினைவுகூரும் விதமாக சிங்கப்பூரில் பிரம்மாண்ட இசை விருந்து ஒன்றைப் படைத்துள்ளார் .
‘ஆர்இஎல்சி’ அரங்கில் சனிக்கிழமை (ஜூன் 6) நடைபெற்ற ‘ஒரு கதை சொல்லவா’ நிகழ்ச்சியில் ஆதரவாளர்கள், சக கலைஞர்கள் உட்பட கிட்டத்தட்ட 400 பேர் கூடி இசை வெள்ளத்தில் திளைத்தனர்.
17 வயதாக இருந்தபோது இசையமைத்த ‘ஒரு கதை சொல்லவா’ என்ற தம் முதல் பாடலின் தலைப்பையே இந்நிகழ்ச்சிக்குச் சூட்டியிருப்பதாகப் பிரவின் தெரிவித்தார்.
“நிகழ்ச்சியின் போதே பார்வையாளர்கள் என்னுடன் உரையாடக்கூடிய ‘கதை சொல்லும்’ வடிவத்தில் இந்நிகழ்ச்சியை அமைத்துள்ளேன்,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரில் பத்தாண்டுகளாக இசைக் கலைஞராக இருந்த அவர் 2011ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய மூன்றாவது ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் பங்கெடுத்தார்.
இந்தியாவில் தம்முடைய 15 ஆண்டு இசைப்பயணத்தின் தொடக்கமாக அந்நிகழ்ச்சி இருந்ததைப் பிரவின் நினைவுகூர்ந்தார்.
இசை தமக்கு வாழ்வாதாரமாக இருந்து வந்தாலும் கொவிட்-19 பெருந்தொற்று காலத்திலிருந்து அமெரிக்காவின் டெக்சஸ் நகரத்தில் அமைந்துள்ள ‘விஷார்ப் குருகுலம்’ என்ற இசை நிறுவனம் வழியாகப் பிள்ளைகளுக்கு இணையம்வழி இசை கற்பித்து வருவதாகவும் தெரிவித்தார்.
“எனக்கு கற்பிப்பதிலும் ஒரு தனித்திறமை இருப்பதை உணரவில்லை. ஒருவேளை நான் அதிகம் ஆசிரியர்கள் இருக்கும் குடும்பத்திலிருந்து வந்ததால் இருக்கலாம்,” என்று சிரித்தார்.
ஆசிரியராகவும் பணியாற்றி வருவதைக் கொண்டாடும் வகையில் மாணவர்களுடன் இணைந்து சிறப்பு ‘அக்கபெல்லா’ அங்கத்தைப் படைத்தார். முன்பே பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்றின் வழி அவரது மாணவர்களும் இணைந்தனர்.
எந்தவோர் இசைக்கருவியின் துணையின்றி குரல்களை மட்டும் பயன்படுத்திச் சிறப்பாக இசைக்கப்படும் ‘அக்கபெல்லா’ பாணியில் திறன் பெற்றவர் பிரவின் என்று தமிழ் இசைக் கலைஞரும் பிரவினின் நீண்ட கால நண்பருமான மாளவிகா சுந்தர் தெரிவித்தார்.
மூன்றாவது ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் பிரவினுடன் பங்கெடுத்த மாளவிகா, இன்ப அதிர்ச்சியாக வருகை தந்து பிரவினுடன் மேடையில் பாடினார்.
சுதாஷினி ராஜேந்திரன், பவித்திரா நாயர், முகமது ரஃபி போன்ற உள்ளூர்க் கலைஞர்களுடன் இணைந்து பிரவின், தாமே இயற்றிய பாடல்களுடன் பிரபல தமிழ் இந்தி, ஆங்கிலப் பாடல்களையும் பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தார்.
இசைக்கலைஞராக பிரவின் பெற்றுள்ள அனுபவம், நிகழ்ச்சி நடைபெற்ற பண்பட்ட, நுட்பமான விதத்தில் புலப்படுவதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற திலகம் செல்வராஜு தெரிவித்தார்.
“சிங்கப்பூர்க் கலைஞர் என்ற முறையில் அவர் பயணத்தைக் கண்டு இந்நாட்டைச் சேர்ந்த நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்,” என்று அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் படைக்கப்பட்ட பாடல்களின் தேர்வும் ஏற்பாடுகளும் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன என்று பார்வையாளர்களில் ஒருவரான ஆனந்த தங்கம் கூறினார்.
“பிரவின் சைவியின் குரலை இதற்கு முன்னதாகப் பலமுறை கேட்டிருந்தாலும் நேரடியாகப் பாடுவதைக் கேட்பது முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக உள்ளது,” என்று அவர் கூறினார்.

