புகழ்பெற்ற தபேலா இசைக்கலைஞர்களின் பரம்பரையில் வந்த நவாஸ் மிராஜ்கர், 49, அதே வழியைப் பின்பற்றி நற்பெயர் ஈட்டிவருகிறார்.
மும்பையின் புனே நகரத்தில் பிறந்த அவர் ஏழு வயதிலேயே தன் தந்தை உஸ்தாத் முஹம்மது ஹனிப் கான் மிராஜ்கரிடம் தபேலா பயிற்சியைத் தொடங்கினார்.
1996ஆம் ஆண்டில் அவர் சிங்கப்பூரைத் தனது இல்லமாக்கினார். அதே ஆண்டில், ‘டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்’ (Temple of Fine Arts) நிறுவனத்தில் தபேலா ஆசிரியராகச் சேர்ந்தார்.
இசைக்கருவியை வாசிப்பதைத் தாண்டி, இந்தக் கலை வடிவத்தில் இன்னும் அதிகமாகச் சாதிக்க வேண்டும் என்பதை உணர்ந்தார் நவாஸ்.
“தபேலா கற்க விரும்பும் மாணவர்களுக்கு அக்கலையைச் சொல்லித்தர வேண்டும்,” என்று ஆசிரியராகச் சேர நினைத்த தமது முடிவுக்கான காரணத்தைத் தெரிவித்தார்.
2001ஆம் ஆண்டில் அவர் 27 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் தபேலா வாசித்து கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார்.
2011ஆம் ஆண்டில் தேசியக் கலை மன்றத்தின் இளங்கலைஞர் விருதையும் பெற்றார். இந்த விருது, 35 மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய, வளர்ந்து வரும் கலைஞர்களுக்கான சிங்கப்பூரின் மிக உயரிய விருதாகும்.
இவ்வாண்டு, பாஸ்கர் ஆர்ட்ஸ் அகாடமி, ஆண்டுதோறும் சிங்கப்பூரின் இசைத்துறைக்குப் பெரும்பங்களித்த கலைஞர்களுக்கு அளிக்கும் ‘சங்கீத கலா நிபுணர்’ விருதை ஆகஸ்ட் 14ஆம் தேதி திரு நவாசுக்கு வழங்கியது.
மறைந்த சிங்கப்பூரின் முன்னோடிக் கலைஞர்களான திரு கே.பி.பாஸ்கர், திருவாட்டி சாந்தா பாஸ்கர் இருவரையும் சிறப்பிக்கும் வகையில், பாஸ்கர் ஆர்ட்ஸ் அகாடமி ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் ‘பாஸ்கரீயம்’ என்ற கலைக் கண்காட்சியில் அவர் இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.
“இந்த விருது எனக்கு ஒரு நல்ல பாராட்டாக அமைகிறது,” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் திரு நவாஸ்.
அக்காலத்தில் சமூக ஊடகங்கள் இல்லாததால், கலைகள் குறித்த விழிப்புணர்வும் குறைவாக இருந்தது என்று அவர் தற்போதைய இசைத்துறையைப் பற்றிப் பேசுகையில் குறிப்பிட்டார்.
“கலைஞர்களாகிய நாங்கள் ஒன்றாக மேடையைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புகளே எங்களுக்குக் கிடைத்தன,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.
மேலும், கலைத்துறையில் சாதிக்க வாய்ப்புகள் அதிகரித்து வருவதால் இப்போது ஏராளமான கலைஞர்கள் முழுநேரமாக ஈடுபடுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“கலை என்பது நீர் போன்றது,” என்றார் திரு நவாஸ்.
“அது தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும். அந்த நீரோட்டத்தைப் போலவே ஒரு கலைஞரும் நிற்காமல் தொடர்ந்து செல்ல வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.


