பொதுமக்களைக் கலைகளுடன் இணைக்கும் வகையில் பல்வேறு கலைப் படைப்புகளுடன் தொடங்கவுள்ளது சிங்கப்பூர்க் கலை வாரம்.
சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகத்துடன் இணைந்து தேசிய கலைகள் மன்றம் ஏற்பாடு செய்துள்ள கலை வாரத்தின் ஓர் அங்கமாக, இரு சுவாரசியமான படைப்புகளை வடிவமைத்துள்ள இரு கலைஞர்கள், தங்கள் படைப்புகள் குறித்தும் அவற்றின் பின்னணி, அனுபவங்கள் குறித்தும் தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டனர்.
இந்திய, தென்கிழக்காசிய கலை, கலாசாரங்களை ஒருங்கிணைக்கும் குமுதா
இந்நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, நூலிழைகளை ஊடகமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பல்வேறு வகை கலைப் படைப்புகளைக் காட்சிப்படுத்தும் ‘உணர்வுகளின் இழைகள்’ (Threads of Expression) எனும் நிகழ்ச்சியை வழிநடத்தவுள்ளார் கலைஞர் குமுதா.
‘க்ருதி’ கலைக்கூடத்தின் நிறுவனரும் கலைஞருமான இவர், நெசவுப் பாரம்பரியம், ஒவ்வொரு கலாசாரப் பின்னணியில் உள்ள நுணுக்கங்களைப் போற்றிப் பறைசாற்றும் விதமாக இதனை வடிவமைத்துள்ளார்.
“சிங்கப்பூர் ஓர் பல்லினச் சமூகம். ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள ஒற்றுமை, தனித்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாகவும் கலாசாரப் பரிமாற்றமாகவும் அமையும் என நம்புகிறேன்,” என்றார் குமுதா.
இந்திய, இந்தோனீசிய, கொரிய, ஜப்பானியக் கலாசாரங்களை இணைக்கும் இப்படைப்புகளை அந்தந்தக் கலாசாரங்களைச் சேர்ந்த கலைஞர்களின் பங்களிப்புடன் வடிவமைத்துள்ளதாகவும் இவர் சொன்னார்.
துணி வகைகள், நூலிழைகள் பன்முகத்தன்மையுடன் கலை வெளிப்பாட்டிற்கு வலிமையான ஊடகமாக விளங்குகின்றன என்பதையும் இது உணர்த்துவதாகக் குறிப்பிட்டார் குமுதா.
அடிப்படையில் நிதித்துறை நிபுணரான இவர், கலை மீதான ஆர்வத்தால் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முழுநேரக் கலைஞராகப் பணியாற்றி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
“வளமான ஆசியக் கலை வரலாறு, அதன் அழகியலை அறிய விரும்புவோர்க்காக கலைப்படைப்புகளுடன், பல்வேறு இருவழித் தொடர்புள்ள நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளோம். மக்களிடம் இதனைக் கொண்டு சேர்க்கும் பணியில் இந்திய மரபுடைமை நிலையமும் ஈடுபடுவதால், அவர்களுடன் கைகோத்துப் பணியாற்றுவதில் கூடுதல் மகிழ்ச்சி,” என்று தெரிவித்தார் குமுதா.
குமுதா, ஹயூன் சோய், சுயூமி மிவா, சஃபீரா ஐனி உள்ளிட்ட கலைஞர்களின் கலை விரிவுரையும் நடைபெறுகிறது.
இதன் ஓர் அங்கமாக, ‘காலத்தில் நெய்து, காலத்தால் அழியாத சேலைகள்’ எனும் தலைப்பில் உரையாற்றவுள்ளார் சரிதா அலூர்கார்.
கடந்த 1960, 70கள் காலகட்டத்தில், இந்த வட்டாரத்தில் பிரபலமாக இருந்த சேலைகளில் சிங்கப்பூர்க் கலை நுணுக்கத்தின் தாக்கம்குறித்த அவரது உரையுடன் தென்கிழக்காசிய நாடுகளின் கலைகளில், இந்திய ஆடை வடிவமைப்பு உருவங்களின் தாக்கம் எனும் தலைப்பில் குமுதாவின் உரையும் இடம்பெறுகிறது.
இவை தவிர, நெசவுச் சேலைக் கண்காட்சி, கைவினைப் பயிலரங்குகளும் இடம்பெறுகின்றன.
இவற்றில் பலவற்றுக்கும் பதிவு இலவசம் என்று கூறிய குமுதா, “பாரம்பரிய இந்தியக் கலை வடிவங்கள் மீதான ஆர்வத்தை மீட்டெடுக்கவும் உயர்தரப் படைப்பாற்றலைப் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்க்கவும் ‘சிங்கப்பூர் கலை வாரம்’ ஒரு முக்கியமான தளம். பொதுமக்கள் இதில் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
ஒலிவழி உணர்வுகளை ஆராயும் ப்ரியகீதா
சமூக, அறநெறிகளின் கட்டமைப்பின் கூறுகளை ஒலிவழி ஆராயும் வகையில், ‘litany for a failing machine’ எனும் கலைப்படைப்பை வடிவமைத்துள்ளார் ப்ரியகீதா தியா.
புலம்பெயர்தல் தொடர்பான வரலாறு, கலாசாரம் தொடர்பான ஒலிப்படைப்புகளில் தொடர்ந்து பணியாற்றிவரும் இவர், இம்முறை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தையும் தமது படைப்பில் உள்ளடக்கியுள்ளார்.
“இந்த ஒலி நிறுவல் சமகாலத் தொழில்நுட்ப வளர்ச்சி, குறிப்பாகச் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தர்க்கங்களை ஆராய்கிறது,” என்றார் ப்ரியகீதா.
ஓர் உயரமான தூணிலிருந்து காதுகேள்பொறியின் வழி கேட்கப்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ள இப்படைப்பு, செயற்கை நுண்ணறிவின் துணையோடு உருவாக்கப்பட்ட குரல்மூலம் சிலவற்றைப் பகிர்கிறது.
தெளிவாகத் தொடங்கி படிப்படியாக நிலைமாறி, முரண்பாடுகளுடன் கேட்பதற்கு அர்த்தமற்ற நிலைக்குள் மெல்லச் சரிந்து முடிவடைகிறது.
‘நெக்ரோசோனிக்ஸ்’ (necrosonics) எனும் ஒருவகை ஒலிப்படைப்புகள் தொடர்பான ஆய்வின் ஓர் பகுதியாக அமைந்துள்ள இந்தக் கலைப்படைப்பு, ஒலியையும் குரலையும் வெறும் ஊடகங்களாக மட்டுமன்றி, நம்பிக்கையைக் கட்டமைக்க உதவும் நுட்பமாக அணுகுகிறது.
“இது சிக்கலான படைப்பு. இதுபோன்ற பல்வேறு சிறந்த படைப்புகளை ஒருவார காலத்துக்குள் அடக்கி, மக்களிடம் கொண்டு சேர்க்கிறது சிங்கப்பூர்க் கலை வாரம். இது சிறப்பானது,” என்றும் தெரிவித்தார் ப்ரியகீதா.

